மக்களவை தேர்தல்: பெண்களுக்கான வாக்குச்சாவடி; இங்கு அனைவரும் மகளிரே

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: பெண்களுக்காக ஓட்டுச்சாவடி; அனைவரும் மகளிரே

பட மூலாதாரம், Hindustan Times

ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில், ஓட்டுச்சாவடியில், பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களே நிர்ணயிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஆறாம் கட்டமான, மே, 12ல், ஹரியானாவில், 10 மக்களவை தொகுதிகளுக்கு, தேர்தல் நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு முன்னுரிமையும், அதிகாரமும் அளிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், பெண்களுக்காக, பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இவற்றில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாகவே நியமிக்கப்படுகின்றனர். இங்கு, கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் மற்றும் முதிய பெண்களுக்கு, தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஹரியானா தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில், மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தலில், பெண்களுக்கு அதிகார பகிர்வை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வரிசையில் ஒரு ஆணுக்கு பின், இரண்டு பெண்கள், ஓட்டு போட அனுமதிக்கப்படுவர்.

கோடை வெயிலில், பெண்களால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாது என்பதால், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமணி: மன நோயாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யலாம்: உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மன நோயால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு, அந்த தண்டனையை ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பளித்தாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் மனநல பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க தற்போது இந்திய குற்றவியல் சட்டத்தில் இடம் உண்டு.

எனினும், மன நலத்துடன் இருக்கும்போது இழைத்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிறகு சிறையில் இருக்கும்போது மன நிலை பாதிக்கப்பட்டால் அவர்களது தண்டனையை ரத்து செய்ய இதுவரை சட்டரீதியில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 1999-ஆம் ஆண்டில் இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொடுரமாகக் கொலை செய்த நபருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு சிறையில் மன நலம் பாதிக்கப்பட்டதால் அவரது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்எம். சந்தானகெளடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு கைதிகளுக்கு மன நோய் ஏற்பட்டால், அந்த நோயைக் காரணமாகக் காட்டி அந்த தண்டனையை ரத்து செய்யலாம்.

எனினும், இந்த வழக்கில் குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருதி, குற்றவாளி தனது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அதே நேரம், அவருக்கு உரிய மன நல சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

மரண தண்டனைக்குப் பிறகு குற்றவாளிகள் மன நல பாதிப்புக்குள்ளாகும் வழக்குகளில், தகுதியுடைய நபர்களுக்கே தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, சிறையில் மன நல பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுவர்கள் மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் தலையிட்டு, குறிப்பிட்ட மரண தண்டனை கைதி கொடிய மனநோயால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க முயல வேண்டும்.

தங்களுக்கு மரண தண்டனை எதனால் விதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு குற்றவாளியின் மன நோய் தீவிரமானதாக இருக்க வேண்டும் என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

தி இந்து(ஆங்கிலம்) : பிரக்யா போட்டியிடுவதற்கு எதிராக வழக்கு

பட மூலாதாரம், Reuters

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிராக்யா சிங், பாஜகவில் இணைந்ததை அடுத்து, அவர் போபால் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்திருந்தது. அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த சயீத் அசர் நிசர் அஹமத் என்பவரின் தந்தை இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிராக்யா சிங் இருவரும் பதிலளிக்குமாறு நீதிபதி வி எஸ் படல்கர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக பிராக்யா சிங் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் மே 12 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிராக்யா சிங் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்து 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமின் வாங்கி வெளிவந்த பிராக்யா, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தாம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார் என்று நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :