டிடிவி தினகரன் அமமுக பொதுச் செயலாளராகத் தேர்வு

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், facebook

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று, வெள்ளிக்கிழமை, தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அமமுக எனும் அமைப்பு இப்போது கட்சியாக மாற்றப்பட்டுள்ளதாக, இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தின்பின், அதன் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா பதவியேற்பார் என்றும் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அதிமுகவின் ஒரு தனி அணி என்று கூறிவந்த தினகரன் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

எனினும், ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை உள்ளடக்கிய அணிதான் உண்மையான அதிமுக என்று கூறி, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க மறுத்தது நீதிமன்றம். அதை எதிர்த்து தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோதும், உச்ச நீதிமன்றம் அமமுக அணியை உண்மையான அதிமுக என ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சரஸ்வதி இன்று கூறியுள்ளார்.

தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டாலும், அனைவருக்குமான பொது சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார் தினகரன்.

தாங்கள் தனிக் கட்சியாகப் பதிவு செய்தால் அதிமுக மீதான உரிமை கோரல் நீர்த்துப்போகும் என்பதால் தனிக் கட்சியாகப் பதிவு செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், தாங்கள் உண்மையான அதிமுக இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால் இனி அமமுகவைத் தனிக் கட்சியாகப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் தரப்பில் அப்போது உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :