முலாயம், மாயாவதி: 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்

முலாயம்

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA / BBC

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை உத்தரப்பிரதேச மாநில அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகிய இருவரும் இருபத்து நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மைன்பூர் தொகுதி வேட்பாளராக களம் இறங்கும் முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் மாயாவதி.

எனவே முலாயம் சிங் யாதவ், அவரின் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் ஒன்றாக ஒரே பிரசார மேடையில் தோன்றினர்.

அந்த மேடையில், "மாயாவதி எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரின் உதவியை நான் மறக்கமாட்டேன். அவர் எங்களுடன் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது," என்று தெரிவித்தார் முலாயம். மேலும், அவரின் கட்சியினரிடத்தில் மாயாவதிக்கு எப்போதும் மரியாதை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவர் மாயாவதிக்கு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறியதற்கும், இவர்களின் 24 வருட முரணுக்கும் ஒரே காரணம்தான்.

பிரிவுக்கான காரணம்?

1993ஆம் ஆண்டு முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தன.

ஆனால் அது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக முடிந்துவிட்டது. 1995ஆம் ஆண்டு மாயாவதி முலாயமிற்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டார். அதானல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை இழந்தது.

இதனால் கோபமடைந்த சமாஜ்வாதி கட்சியினர் மற்றும் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் மாயாவதி தனது கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச அரசியலில் அது ஒரு முக்கியமான நிகழ்வாகவும் இன்றளவும் கருதப்படுகிறது.

என்ன பேசினார் மாயாவதி?

பட மூலாதாரம், Getty Images

அந்த `தாக்குதல்` சம்பவம் குறித்து குறிப்பிட்ட மாயாவதி, "நாட்டின் நலன் கருதி கடினமான முடிவுகளை எடுக்க நேரும் சமயங்களில் இம்மாதிரியான சூழல் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

"மக்கள் முலாயம் சிங்கை தங்களின் உண்மையான தலைவராக கருதுகிறார்கள். அவர் போலியானவர்களுக்கானவர் அல்ல. பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் என போலியாக சொல்லிக் கொள்பவர்களுக்கு அல்ல. அவர் மோதியை போன்று போலியாக தான் பின் தங்கிய வகுப்பினர் என்று சொல்லிக் கொள்வதில்லை. குஜராத்தில் அவர் தனது உயர்சாதியை பிறப்படுத்தப்பட்ட வகுப்பாக மாற்றிக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்."

"மோதி பிறப்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பறிக்கவே வேலை செய்து கொண்டிருக்கிறார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் பிறப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு ஆதாயத்தை தேடிக் கொண்டார். அவர் இன்றளவும் அந்த ஆதாயத்தை பெற முயல்கிறார்."

"அவர் காங்கிரஸ் குறித்தும் வெளிப்படையாக விமர்சித்தார். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கிரஸ் கட்சிதான் அதிகாரத்தில் உள்ளது. தவறான கொள்கைகளால் நீண்டகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் ஆர்.எஸ்.எஸின் முதலாளித்துவ மற்றும் இனவாத கொள்கைகளை பரப்புகிறது. இந்த முறை அவர்கள் நிச்சயம் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவர்,"என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :