தொடர் விடுமுறையே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி

பட மூலாதாரம், DIPR

தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போதுமான போக்குவரத்து செய்யப்படவில்லை என்றும், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தனர் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, "தொடர் விடுமுறை காரணமாகவே வெளியூர் செல்பவர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்றார்"

மக்கள் கூடுதல் பேருந்துகளை எதிர்பார்க்கின்றனர் என்றும், கடந்த தினங்களில் பேருந்துகள் அதன் வழித்தடங்களில் முறையாக இயக்கப்பட்டன என்றும் கூறிய முதல்வர், பொங்கல் போன்ற சிறப்பு தினங்களுக்கு மட்டுமே கூடுதலாக பேருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது போக்குவரத்துத் துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய முதல்வர், இருப்பினும் பலவேறு பகுதிகளிலும் பேருந்துகள் அதிகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், எதிர்பார்த்தபடி மக்கள் ஆர்வத்துடன் அருமையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே கூட்டணி தொடர வாய்ப்புள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

"நேற்று பல இடங்களில் சூறைக் காற்று வீசியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியாது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :