நரேந்திர மோதிக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கோஷம் எழுப்பப்பட்டதா? #BBCFactCheck

  • உண்மை சரிபார்ப்புக் குழு,
  • பிபிசி
நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புவது போன்ற காணொளி ஒன்று இந்தியாவில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

"இது இந்தியா இல்லை; பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான். இந்தியாவை தவிர்த்து மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் பாஜகவையும், மோதியையும் ஆதரிப்பதற்கான காரணம் என்னவென்று நீங்கள் யோசிக்கக் கூடும்" என்று அந்தக் காணொளிப் பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டும் நிமிடங்கள் நீடிக்கும் அந்த காணொளியில் மக்கள் நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதுடன், பிரதமர் நரேந்திர மோதியை ஆதரித்து கோஷங்களையும் எழுப்புகின்றனர்.

'அகில் பாரதிய வித்யாத்ரி பரிஷத் தமிழ்நாடு' உள்ளிட்ட பல்வேறு வலதுசாரி ஃபேஸ்புக் பக்கங்களில் இந்தக் காணொளி பகிரப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FB Search List

கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான முறை இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்தி மட்டுமின்றி ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் விளக்கத்துடன் இந்தக் காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் காணொளி குறித்து பரப்பப்படும் தகவல் போலியானது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

உண்மையான காணொளி எது?

இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தபோது, இது இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், இதற்கும் பாகிஸ்தானிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், SM Viral Post

இந்தக் காணொளி ஜம்மு & காஷ்மீர் மாநில பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டரிலுள்ள அந்த காணொளி பதிவின், விளக்க பகுதியில் "அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான பாஜகவின் வேட்பாளர் சோஃபி யூசுப் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் உற்சாக கோஷங்களுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே காணொளி, ஜம்மு & காஷ்மீர் மாநில பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்திலும், அந்த தொகுதியின் வேட்பாளரின் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.

என்னென்ன கோஷம்?

சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டுள்ள இந்த காணொளி, காஷ்மீரிலுள்ள அனந்த்நாக் நகரத்தில் எடுக்கப்பட்டது என்று பிபிசிக்கான பங்களிப்பாளர் மஜித் ஜஹாங்கிர் கூறுகிறார்.

இந்த இரண்டு நிமிட காணொளியில், மக்கள் தங்களது பாரம்பரிய பாடல்களை பாடுவதும், பாஜக தலைவர் ஒருவருக்கு ஆதரவான கோஷங்களை கையில் அக்கட்சியின் கொடியுடன் எழுப்புவது போலவும் உள்ளது.

"பாஜக வாழ்க" உள்ளிட்ட கோஷங்கள் அந்த காணொளியில் எழுப்பப்படுகிறது.

"வெற்றி நமதே! வெற்றி நமதே! இன்ஷா அல்லா!" மற்றும் "மோதிஜி முன்னோக்கி செல்லுங்கள்! உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்! அமித் ஷாஜி முன்னோக்கி செல்லுங்கள்! உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்! ரெய்னாஜி முன்னோக்கி செல்லுங்கள்! உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்!!" என்றும் அந்த காணொளியில் கோஷம் எழுப்பப்படுகிறது.

அந்த காணொளியில் சில பெண்கள் நடனமாடும் நிலையில், மற்றவர்கள் பாஜகவிற்கு ஆதரவான கோஷத்தை எழுப்புவதோடு, மோதியின் உருவம் பொறிக்கப்பட்ட முகமூடிகளையும் அணிந்துள்ளனர்.

ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலை செய்த பிறகு பாஜகவின் வேட்பாளர் சோஃபி யூசப்புக்கு ஆதரவாக நடந்த பேரணியில் இந்த காணொளி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்த செய்தியை, 'பஞ்சாப் கேசரி' உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் சில வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :