முஸ்லிம்கள் நம் சொந்த மக்கள்: மலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா

  • குல்தீப் மிஷ்ரா
  • பிபிசி செய்தியாளர்
பிரக்யா தாகூர்

பட மூலாதாரம், Getty Images

போபால் தொகுதியில் பாஜக சார்பாக சாமியார் பிரக்யா தாகூர் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், பிரக்யா குற்றஞ்சாட்டிருப்பது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய அவர், "தாம் எந்த தவறும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்து மதம் அமைதியை குறிக்கிறது என்று கூறிய பிரக்யா, முஸ்லிம்களை "நம் சொந்த மக்கள்" என அழைத்துள்ளார். ’இந்து பயங்கரவாதம்’ என்ற கொள்கையை முற்றிலும் மறுத்துள்ள அவர், அது காங்கிரஸ் தலைவர்கள் உருவாக்கியது என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 29, 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்ட இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சாமியார் பிரக்யா மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்தப்பிரிவு நீக்கப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாக, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார் பிரக்யா. தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

தன்னை இந்த வழக்கில் பொய்யாக சேர்த்துவிட்டதாக முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இருவர் மீதும் பிரக்யா குற்றஞ்சாட்டினார். தற்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக பிரக்யாவை பாஜக களமிறக்கியுள்ளது.

தற்போது காவி நிற உடைகளை அணிந்து சன்னியாசி போல அவர் வாழ்ந்து வருகிறார். அனைவரையும் 'ஹரி ஓம்' என்று சொல்லியே வரவேற்பார்.

பிபிசி அவரிடம் பேசியபோது, முதலில் அவர் கூறியது, "நான் உங்களிடம் பேசுகிறேன். ஆனால், என்னை மேடம் என்று அழைக்காதீர்கள். சாத்வி ஜி என்று கூப்பிடுங்கள்" என்றார். அவரது பேட்டியிலிருந்து:

போபாலில் திக்விஜய் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் யாரும் இல்லாததால் பாஜக உங்களை களமிறக்கியுள்ளது? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் இதற்கு தகுதியற்றவள் அல்லது நிர்பந்தம் காரணமாக பாஜக என் பெயரை அறிவித்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலமாகதான் பாஜக இயங்குகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குதான் அரசியல் என்று பாஜகவில் கிடையாது. இங்கு யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும்.

பாஜகவை நீங்கள் தொடர்பு கொண்டீர்களா?

இல்லை. எல்லாம் முறையாக நடந்தது. இது ஏதோ ஓரிரு நாளில் நடந்திடவில்லை. யார் யாரை முதலில் தொடர்பு கொண்டது என்று எனக்கு நினைவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் ஒரு திட்டவட்டமான வரைவை வைத்திருந்தார்கள். அவர்கள்தான் யாரை தலைவர்களாக முன்னிறுத்த வேண்டும் என்று முடிவு செய்வார்கள்.

திக்விஜய் சிங்கிற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தவறான வழியில் செல்வதை விடுத்து மதத்தின் வழியை பின்பற்ற வேண்டும் என்றுதான் அனைத்து சாமியார்களும் அறிவுரை வழங்குவார்கள். அதையேதான் நானும் சொல்கிறேன். பொய்களின் வழியை விட்டு உண்மைக்கு வாருங்கள்.

திக் விஜய் சிங்

பட மூலாதாரம், Getty Images

திக்விஜய் சிங் தவறான வழியில் செல்கிறார் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

நான். நானேதான் அதற்கு சாட்சி. அவர்செய்த சதித்திட்டங்கள் என்னை தாக்கியது. அதற்கு நான்தான் சாட்சி.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமினில் வெளியே வந்திருக்கிறீர்கள். நீங்கள் விடுவிக்கப்படவில்லை. நீங்கள் தேர்தலில் போட்டியிடும்போது, கடந்த கால சம்பவங்கள் அப்படியேதான் இருக்கிறது. உங்கள் நற்பெயரில் கங்கம் இருக்கிறதே?

எனக்கும் அந்த சம்பவத்திற்கும் துளியும் தொடர்பில்லை. எனினும் நான் சிறையில் இருந்தேன். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்கூடதான் ஜாமினில் வெளியே வந்துள்ளார். நாங்கள் அவர்களால் ஒடுக்கப்பட்டுள்ளோம். அவர்களின் சதித்திட்டங்களால் நாங்கள் சிறைக்கு தள்ளப்பட்டோம்.

அவர்கள் செய்த பாவங்களால்தான் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எந்த ஊழலும் செய்யவில்லை அல்லது நாட்டை பற்றி தவறாக பேசிடவில்லை.

உங்கள் மீது இந்து பயங்கரவாதி’ என்ற பிம்பம் இருக்கிறதே. இதனை திக்விஜய் சிங் அடிக்கடி குறிப்பிடுகிறார். தற்போது நீங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவது, போபால் தொகுதி, மதத்தின் பெயரில் ஒருமைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறதே?

ஹிந்துத்துவா என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள்தான் அதனை சில சமயங்களில் பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் என்று கூறுகின்றனர். சில சமயங்களில் அதை `மிதமான இந்துத்துவா` என்றும் கூறுகின்றனர். சில சமயங்களில் அதை ’பயங்கரவாதம்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்துத்துவாவின் அர்த்தம் மிகப் பெரியது. "இந்த உலகமே ஒரு குடும்பம் அதில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும்" என்ற ஸ்லோகத்தின்படியே இந்துத்துவாவை நாம் விளக்க வேண்டும்.

இம்மாதிரியான உயர்ந்த விசாலமான எண்ணம், எங்களின் மதம் அனைவரின் நலனையும் கருத்தில் கொள்ளக் கூடியது என்பதை காட்டுகிறது.

அதில் வெறித்தனத்துக்கோ அல்லது மிதமான தன்மைக்கோ இடமில்லை. உலகம் முழுவதும் மகிழ்ச்சியை காண விரும்புகிறது இந்துத்துவா.

இந்துத்துவா அமைதியை விரும்புகிறது என்பது உலகமறிந்தது.

நீங்கள் உச்சரித்த மந்திரத்தை சங் பரிவாரும் சொல்கிறது. உலகம் மொத்தமும் ஒரு குடும்பம் என்கிறீர்கள் அதில் முஸ்லிம்களும் அடங்குவார்களா?

முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தனர்? இந்தியாவில் உள்ள பல இந்துக்கள் வேறு மதத்திற்கு மாறிவிட்டனர். பழங்காலத்தில் `சனாதன்` என்று அழைக்கப்பட்ட இந்து மதத்தை விட்டுச் சென்றவர்கள் அவர்கள்தாம். நாட்டில் அப்போது நிலவிய சூழல் காரணமாக அவர்களின் முன்னோர்கள் வேறு மதத்தை தழுவிவிட்டனர். அதற்கு அர்த்தம் அவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்றல்ல. அவர்கள் நமது சொந்த மக்கள். நாடு அவர்களுக்கு உணவும், உறைவிடமும் வழங்குகிறது. அவர்களுக்கு நாட்டிடம் பல கடமைகள் உள்ளன. நம்மைபோன்று அவர்களும் நாட்டின் பிள்ளைகள். எனவே நாம் ஏன் அவர்கள் நம்மில் இருந்து மாறுபட்டவர்கள் என்று சொல்ல வேண்டும்.? நமது கலாசாரம்தான் நம்மை ஒன்றிணைக்கும். இந்தியாவில் மட்டும்தான் இந்த சூழல் உள்ளது. இல்லையென்றால் வாழும் நாட்டைப் பற்றியே குறை கூற முடியுமா?

பிரெக்யா

பட மூலாதாரம், Getty Images

இதன்மூலம் நீங்கள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் மக்கள் நாட்டிற்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூறுகிறீர்களா?

நான் முஸ்லிம்கள் குறித்து பேசவில்லை. நான் நாடு குறித்து தவறாக பேசுபவர்களை சொல்கிறேன் அவர்கள் எந்த பிரிவாக இருந்தாலும் சரி.

நீங்கள் இந்து பயங்கரவாதம் என்று குறிப்பிட்டீர்கள். அது முதன்முதலின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் பேசப்பட்டது. அந்த சமயம் உள்துறை செயலராக இருந்தவர் இந்து பயங்கவாதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். இன்று அவர் பாஜக சார்பாக பிஹாரில் போட்டியிடுகிறார்.

இல்லை இந்த வார்த்தைகள் திக் விஜய் சிங் மற்றும் ப.சிதம்பரத்தால் சொல்லப்பட்டது.

அப்போது உள்துறை செயலராக இருந்தவர் ஆர்.கே.சிங் அவர் ப.சிதம்பரத்தின் தலைமையில் பணிபுரிந்தார். அவர் ஊடகத்தின் முன் இந்து பயங்கரவாதி என்ற சொல்லை பயன்படுத்தினார்.

எனக்கு அது மாதிரி எதுவும் நினைவில் இல்லை. எனக்கு திக்விஜய் சிங் மற்றும் சிதம்பரம்தான் இந்த சொல்லை பயன்படுத்தியது மாதிரி நினைவில் உள்ளது. இது நிரூபிக்கவிட்ட பிறகே நான் அதுகுறித்து பேசுவேன். நீங்கள் ஏன் இந்த கட்சி மட்டும்தான் நாட்டை பற்றியும் மதத்தை பற்றியும் பேசுகிறது என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கட்சியின் கொள்கையுடன் என்னை பொருத்திக் கொள்ள முடிகிறது. எனவே நான் இதில் சேர்ந்து வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

நீங்கள் ஒரு அச்சுறுத்தலான சமயத்தில் இருந்தபோதும், நீங்கள் அடிக்கடி நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டிருந்தபோதும், மகாராஷ்டிர ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற தடுப்புச் சட்டத்தின்படி உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதும் பாஜக உங்களுக்கு எந்த ஆதரவும் தரவில்லையா?

நான் யாரோ ஒருவரால் தேசபக்தி பெறவில்லை. தேசபக்தி எனது நாடி நரம்புகளில் உள்ளது. அதுதான் என் வாழ்வின் அடிநாதம். நான் அதற்காக பிறவி எடுத்துள்ளேன். எனக்கு யாரோ எதையோ செய்தது பற்றியோ அல்லது செய்யாதது பற்றியோ என்னால் பேச முடியாது. நாட்டின் நலன் கருதி உழைப்பவர்கள் அனைவரும் எனக்கு உதவி செய்பவர்கள். நான் அவர்களை வணங்குகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :