பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முன்னிறுத்தும் பாஜகவை புரிந்துகொள்வது எப்படி?

  • சுவாதி சதுர்வேதி
  • மூத்த பத்திரிகையாளர்
பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முன்னிறுத்தும் பாஜகவை புரிந்துகொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக பயங்கரவாதியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை தங்களது கட்சியின் வேட்பாளராக மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நிறுத்துகிறது பாரதிய ஜனதா கட்சி.

மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்கிற்கு எதிராக களமிறங்கும் பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யா இந்த தேர்தலை 'தர்ம யுத்தம்' என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசாங்கம், மதத்தை அடிப்படையாக கொண்டு மக்களை ஒன்று திரட்டும் இந்த செயல்பாடு குறித்து சங்கடப்படவில்லை. இந்திய அரசியலில் இது ஒரு முக்கியான நேரமாகும். ஏனெனில், தேசியவாதத்தை தங்களது கட்சியின் அடிப்படையாக கருதும் பாஜக, தற்போது அதன் பேரில் பயங்கரவாத செயலுடன் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்டவரை தங்களது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

கடந்த பாகிஸ்தான் தேர்தலின்போது பயங்கரவாதி ஹபிஸ் சயீது, போட்டியிட்டதை ஒட்டுமொத்த இந்தியாவின் ஒருமித்த குரலில் எதிர்த்து. அந்த தேர்தலில் சயீது உள்பட அவரது கூட்டாளிகள் அனைவரும் தோல்வியடைந்தனர்.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்தியப்பிரதேச தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியில் அக்கட்சி கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறைக் கூட தோற்காத நிலையில், எதிர்வரும் தேர்தலில் வெற்றியடையும்பட்சத்தில் அதன் மூலம் உலகுக்கு இந்தியா சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?

நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற மோதி மற்றும் அமித் ஷாவின் முனைப்பு பயங்கரவாதம் என்னும் இந்தியாவின் உண்மையான பிரச்சனைக்கு எதிரான வாதத்தை பலவீனப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பிரக்யாவை முன்னிறுத்துவதன் மூலம் வெளிப்படும் செய்தி என்ன?

பிரக்யாவை முன்னிறுத்துவதன் மூலம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தல் என்னும் தனது இயல்பு நிலைக்கு பாஜக திரும்பியுள்ளது. நரேந்திர மோதி தலைமையிலான அரசின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இல்லாததை அடுத்து, 'அனைவருக்கும் வளர்ச்சி' என்பது போன்ற தங்களது கோஷங்களை விடுத்துள்ளது பாஜக. இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்று மோதி கூறியதை மறந்துவிடுங்கள். தற்போது நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையை அடைந்து, கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்தும், பொருளாதாரம் மந்தமடைந்தும் வருகிறது.

மோதி தலைமையிலான காலகட்டத்தில், இந்துத்துவாவின் முகமாகவும் பார்க்கப்பட்ட பாஜகவின் நிறுவனர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டு, துறவியாக இருந்த யோகி ஆதித்யநாத் தற்போது உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகவும், அதற்கடுத்து சாத்வி பிரக்யா மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த சமீபகால மாற்றங்கள், அந்த கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை உண்மையாக்கியுள்ளது.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத், நாடு முழுவதும் பல கட்டமாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்கு 72 மணிநேரம் தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 'அலியையும் பஜ்ரங்க்பலியையும்' குறித்து பேசியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் யோகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

போபால் தொகுதியில் பாஜகவின் சார்பாக போட்டியிடுவதற்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஷிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் உமா பாரதி போன்றோரிடம் அமித் ஷா கேட்டார். ஆனால், இருவரும் அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இடமிருந்து சாத்வி பிரக்யாவை போட்டியிட செய்வதற்கான யோசனை முன்னிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியிலுள்ள எட்டு தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிலை பெற்றதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அளித்த யோசனையை மோதியும், அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடந்த முதல்கட்ட தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்பின்படி, இத்தேர்தலில் பாஜக மொத்தமாகவே 20 முதல் 25 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று சிஎஸ்டிஎஸ் என்னும் முகமை தெரிவிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பாஜக 73 இடங்களில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரக்யாவை பாஜக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதற்கு ஈடாக அவரை முன்னிறுத்திய ஆர்எஸ்எஸ் கொடுக்கும் படை பலத்தை கருத்தில்கொண்டு அமித் ஷா ஒப்புக்கொண்டுவிட்டார்.

பாஜகவின் அனைத்து மூத்த தலைவர்களையும் ஓரங்கட்டிவிட்டு சந்திக்கும் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் என்ன நேரும் என்று மோதியும், அமித் ஷாவும் பயந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் என்னிடம் கூறினர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மோதி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரின் செயல்பாட்டை பார்க்கும்போது, அவர்கள் முன்மொழியும் புதிய இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்பது தெரிகிறது.

தீவிர இந்துத்துவ ஆதரவாளர்கள் மத அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கிறார்களா என்பதை உறுதிசெய்யும் வகையில் தற்போது பிரக்யா வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

பிரக்யாவை முன்னிறுத்தும் பாஜகவின் இந்த நடவடிக்கையை கண்டு எதிர்க்கட்சிகள் ஆச்சர்யத்தில் இருந்தாலும், பாஜகவின் வலையில் சிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார். "மோதியின் இந்த வகையிலான செயல்பாட்டை அவர் குஜராத் முதலமைச்சராக இருக்கும்போதே பார்த்துவிட்டோம். எனவே, பிரக்யாவிற்கான எதிர்வினையின் மூலம் எங்களது மதிப்பீட்டை குறைத்துக்கொள்ள மாட்டோம்" என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்.

பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தபோது பிரக்யா அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் 24/7 மணிநேரமும் செய்திகளை வெளியிட்டு மக்களிடையே அனுதாபத்தை உருவாக்கும் முயற்சியில் தற்போது பாஜக ஈடுபட்டுள்ளது.

இதில் மிகவும் ஆச்சர்யமளிக்கும் விடயம் என்னவென்றால், பாஜக ஆதரவு தொலைக்காட்சிகள் மட்டுமின்றி, மற்றவைகளும் பாஜகவின் வலையில் விழுந்ததுடன், 'பிரக்யா - திக்விஜய் சிங்' வெற்றிப்பெறப்போவது யார் என்பது போன்ற வாதங்களை செய்து வருகின்றன.

செப்டம்பர் 29, 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்ட இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சாமியார் பிரக்யா மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்தப்பிரிவு நீக்கப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாக, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார் பிரக்யா. தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

பாஜக எப்போதுமே வேறுபட்ட ஒரு கட்சி என்று சொல்லப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளை நாட்டின் பாதுகாப்பை மையமாக கொண்டு தாக்கி பேசி வரும் அதே நிலையில், பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடிய ஒரே கட்சி என்னும் வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :