தேர்தலில் வாக்களித்தபின் கையில் வைத்த ‘மை‘ அழிந்ததால், வழக்கு தொடுத்த வாக்காளர்

வாக்களித்த பின்னர் வைக்கப்படும் அழியாத மை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினத்தந்தி - கையில் வைத்த ‘மை‘ அழிந்ததால், வழக்கு தொடுத்த வாக்காளர்

பெங்களூருவை சேர்ந்தவர் பிரிக்சித் தலால் (வயது 43). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

இதற்காக அவரது கை விரலில் ஊழியர்கள் வைத்த 'மை', அவர் வீட்டுக்கு வந்த சாப்பிடுவதற்காக கையை சோப்பு போட்டு கழுவியபோது அழிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தான் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு சென்று 'மை' அழிந்தது பற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் பிரிக்சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் காவல் நிலையத்துக்கு சென்று தேர்தல் ஆணையத்தின் மீது அவர் புகார் கொடுத்தார். அதில், வாக்களித்த பின் விரலில் வைக்கப்படும் 'மை' குறைந்தது இரண்டு வாரங்கள் அழியாமல் இருக்கும். ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட 'மை' உடனடியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - இஸ்லாமிய சிறைக் கைதி முதுகில் 'ஓம்'

பட மூலாதாரம், Ani

டெல்லியிலில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபீர் எனும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், ராஜேஷ் சௌகான் எனும் சிறைக் கண்காணிப்பாளர் தம் முதுகில் இரும்புக் கம்பியைக் கொண்டு இந்தியில் 'ஓம்' எனும் எழுத்தின் வடிவத்தில் சூடு வைத்ததாக தமது மேல் சட்டையைக் கழட்டிக் காட்டியுள்ளார்.

நவராத்திரி என்பதால் உணவு தர ராஜேஷ் சௌகான் மறுத்ததாகவும், தம்மை இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்யப்போவதாக மிரட்டினார் என்றும் நபீர் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபீர் 2016 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நீதிபதி ரிச்சா பரிஹர் அறிக்கை கேட்டுள்ளதுடன், நபீரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

“நாட்டின் பணத்தை சூறையாடியவர்களின் பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு வழங்குோம்” - ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியின்போது நாட்டை சூறையாடிய வியாபாரிகளிடம் இருந்து பணத்தை பிடுங்கி, அதனை ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் போடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வாக்களித்துள்ள குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தை (நியாய்) செயல்படுத்த முடியாது என்று கூறிவரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்,

கர்நாடகவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார்.

தினமணி: மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க எஸ்பிஐ வழக்கு நடத்துகிறது - விஜய் மல்லையா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் ஊடகங்கள் உணர்வுமயமான செய்திகளை வெளியிடவே விரும்புகின்றன. அதற்காக என்னை தீயவனாக சித்திரித்து செய்திகள் வெளியிடும் அந்த ஊடகங்கள், கடனை 100 சதவீதம் திருப்பியளிக்க நான் தயாராக இருந்தும், வழக்குக்காக மக்களின் வரிப் பணத்தை எஸ்பிஐ வீணாக்குவது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார், என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.

லண்டனிலுள்ள எனது சொத்துகள் பாதி விலைக்கு விற்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள சொத்துகளை விற்றாலும், வழக்குக்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்ய முடியாது.

அப்படி இருந்தும் எதற்காக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பதை எஸ்பிஐ தலைமையிலான பொதுத் துறை வங்கிகளின் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவுகளில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அவர் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும், அவரை அதிகாரிகள் கைது செய்வதற்கு முன்னரே அவர் லண்டன் தப்பிச் சென்றார். அதையடுத்து, அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :