பொன்னமராவதியில் என்ன நடக்கிறது? - 1,000 பேர் மீது வழக்கு, 1,500 போலீசார் குவிப்பு

பொன்னமராவதி

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவலான குரல்பதிவால் பதற்றங்கள் உண்டான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 1,500 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், ஆர்ப்பாட்டங்கள் இன்னும் நடந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த சுமார் 500 பேர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த இருவர் எங்கள் சமுதாய மக்களை இழிவுபடுத்தி வாட்ஸ்ஆப்பில் வெளியான குரல்பதிவில் பேசியதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவ்வாறு பேசியவர்கள் யார், அந்தக் குரல்பதிவை பகிர்ந்து யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கள் சமூகம் குறித்து அவதூறாகப் பேசியவர்களை கைது செய்யக்கோரி அந்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

1,000 கிராமவாசிகள் மீது வழக்கு

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் என்பவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய குரல்பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது.

அங்கு நிலவும் பதற்றங்களைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் 'பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,000 கிராமவாசிகள்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யாரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

பொன்னமராவதி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கூடி, காவல் துறையினரைத் தாக்கி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு சொந்தமான எட்டு வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், காயமடைந்த காவல் துறையினரை கொல்ல முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்கார்களுடன் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்படுவர் என அவர் உறுதியளித்தார்.

போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

இந்நிலையில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தினர்.

வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்ததால் பொன்னமராவதி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததை அடுத்து பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதால், பொன்னமராவதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றும் பேருந்துகள் அங்கு ஓடவில்லை.

எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன் - மூதாட்டியின் கோபம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :