பொன்பரப்பி வன்முறை: மோதல் மூண்டது முதல் தற்போது வரை

பொன்பரப்பி

பட மூலாதாரம், Twitter

தேர்தல் தினத்தன்று பொன்பரப்பில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக செந்துறை காவல்துறை 12 பேரைக் கைதுசெய்துள்ளது. 25க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அங்கு அதிகம் வசிக்கும் வன்னியர்களுக்கும், தலித்துகளும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டிருப்பதால், தற்போது அந்த கிராமத்தில் பெரும் எண்ணிக்கையி்ல காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டது.

என்ன நடந்தது பொன்பரப்பியில்?

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்குள் வருகிறது. வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போது அ.தி.மு.கவினர் சிலர் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அப்போது சிலர் திருமாவளவனுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பானையை உடைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, பேருந்து நிலையத்திற்கு அருகில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் நடத்தும் பெட்டிக் கடைக்கு அருகில் நான்கு தாழ்த்தப்பட்டவர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, பானைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர்கள் அறிந்துள்ளனர்.

இதையடுத்து, மது போதையில் அவர்கள் மாற்றுக் கட்சியினர் குறித்து திட்டியுள்ளனர். இதனை அங்கிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எதிர்த்துள்ளனர். இது சிறிய கைகலப்பாக உருவெடுத்துள்ளது.

இதற்குப் பிறகு, தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சுப்பிரமணி என்பவரிடம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிலர் இந்த பானை உடைப்புச் சம்பவம் குறித்துக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுப்பிரமணி தாக்கப்படவே, மேலும் சிலர் அப்பகுதியில் கூடியுள்ளனர். இது அடிதடியாக உருவெடுத்தது.

இதற்குப் பிறகு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பொன்பரப்பி கிராமத்திற்குள் நுழைந்து, கண்ணில் பட்ட வீடுகளைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டன. ஒரு டிவிஎஸ் 50 வாகனம் எரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக வந்த நியூஸ் 18 தொலைக்காட்சியைச் சேர்ந்த கலைவாணன் என்பவர் தலித்துகளால் தாக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார். தங்களைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்ட வேறொரு சேனலின் செய்தியாளர் என்று நினைத்து அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தாக்கப்பட்ட சுப்பிரமணி என்பவரின் மனைவி யசோதா அளித்த புகாரின் பேரிலும் தாழ்த்தப்பட்டோர் சார்பில் குணசீலன் என்பவர் அளித்த புகாரின் பேரிலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

"இது தொடர்பாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான ஸ்ரீநிவாசன்.

இந்த சம்பவத்தை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்த சம்பவத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், Twitter

இந்த சம்பவத்தில் காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. "திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாகவே இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வதும், அவர்களின் குடும்பத்தினரை காவல்துறை அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகையப் போக்கை கைவிட்டு, வன்முறையை தூண்டியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :