மாயாவதியையும், முலாயமையும் எதிரியாக்கிய 'விருந்தினர் விடுதி'

  • பரத் ஷர்மா
  • பிபிசி இந்தி
மாயாவதி, முலாயம் சிங் (இடமிருந்து வலம்)

பட மூலாதாரம், GETTY IMAGES, PTI

படக்குறிப்பு,

மாயாவதி, முலாயம் சிங் (இடமிருந்து வலம்)

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையிலான கூட்டணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த கூட்டணி 2019 மக்களவை தேர்தலுக்கானது மட்டுமல்ல, நிலையானது, நீண்ட காலம் நீடிக்கும் என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குறிப்பிட்டனர்.

இரு கட்சிகளும் மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், ரே பரேலி மற்றும் அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்காக விட்டுக் கொடுப்பதாகவும், எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிகள் பகிர்ந்துகொள்வதாகவும் இரு தலைவர்களும் அறிவித்தார்கள்.

கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய மாயாவதி, பிரபலமான விருந்தினர் மாளிகை சம்பவத்தை குறிப்பிடத் தவறவில்லை என்பதோடு, நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் உத்தேசித்து கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

"1993 சட்டமன்றத் தேர்தலின்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது. அப்போது, சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அன்றைய சூழ்நிலையை மாற்றி ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் ஆட்சி அமைத்தன. அந்த சமயத்தில் சில முக்கிய காரணங்களால் கூட்டணி நீண்ட காலம் தொடரவில்லை. நாட்டின் நலனுக்காகவும், மக்களின் நன்மைக்காவும் 1995ஆம் ஆண்டு லக்னோ விருந்தினர் விடுதி சம்பவத்தையும் மறந்து அரசியல் ரீதியிலான முடிவு எடுத்திருக்கிறோம்" என்று மாயாவதி குறிப்பிட்டார்.

கசப்பான சம்பவத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

லக்னோவில் விருந்தினர் மாளிகையில் என்ன நடந்தது? நண்பர்களாக இருந்தவர்களை விரோதிகளாக மாற்றும் அளவு அங்கு நடந்தது என்ன?

இதை தெரிந்துக் கொள்வதற்கு 28 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். உத்தரபிரதேச மாநிலத்தில் 1995ஆம் ஆண்டு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஒரு சம்பவம் பல அரசியல் கணக்குகளை தப்புக் கணக்காக்கியது.

அது இந்திய அரசியலில் ஒரு கறை படிந்த தினம் மட்டுமல்ல, மாயாவதி மற்றும் முலாயம் இடையிலான கூட்டணியை உடைத்து நீண்ட காலமாக பகைவர்களாக மாற்றிய சம்பவம்.

1992-ல் முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியை உருவாக்கினார். அதற்கு அடுத்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்காக, அரசியல் உத்திகளை மேற்கொண்டு, சமயோஜிதமாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்தார் முலாயம்.

விருந்தினர் மாளிகையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், HENNA HASSAN

சமாஜ்வாதி கட்சி 258 மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி 164 தொகுதிகள் என்ற உடன்பாட்டில் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொண்டன. சமாஜ்வாதி கட்சிக்கு 109 தொகுதிகளில் வெற்றி கிடைக்க, மாயாவதி 67 தொகுதிகளில் வென்றார்.

1995ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவும் கருகிப்போனது. விருந்தினர் மாளிகையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்ள, சமாஜ்வாதி பெரும்பான்மை பலத்தை இழந்தது.

மாயாவதிக்கு ஆதரவுக் கரம் நீட்டியது பாஜக. பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தால் அதற்கு தாங்கள் ஆதரவளிப்பதாக, மாநிலத்தின் அன்றைய ஆளுநர் மோதிலால் வோராவிடம் கடிதம் கொடுத்தது பாஜக.

மூத்த பத்திரிகையாளரும், அன்று விருந்தினர் விடுதி அசம்பாவித சம்பவத்தின்போது, நேரில் பார்த்தவருமான ஷரத் பிரதானிடம் பிபிசி பேசியது. அன்று ஆட்சியில் இருந்தது முலயாம் சிங் யாதவின் அரசு. அரசில் அங்கம் வகிக்காமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது பகுஜன் சமாஜ் கட்சி.

ஓராண்டுக்கு இந்த கூட்டணி நீடித்தது. பிறகு கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு தோன்றியதாக செய்திகள் கசிந்தன. இது தொடர்பான பலவிதமான வதந்திகளும் புரளிகளும் உலா வந்தன. சில நாட்களில் தனது இறுதி முடிவை மாயாவதி கூட்டணி கட்சியிடம் தெரிவித்து விட்டார்.

விருந்தினர் மாளிகையில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டம்

பட மூலாதாரம், BADRINARAYAN

''தனது கருத்தை தெரிவித்த பிறகு, மாயாவதி, விருந்தினர் மாளிகையில் தனது கட்சியின் சட்டமன்ற உறுபினர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக மாயாவதி கூட்டம் நடத்துவதை சமாஜ்வாதி கட்சியினர் தெரிந்துக் கொண்டனர்" என்று சொல்கிறார் பிரதான்.

''தகவல் கிடைத்த பிறகு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பெருமளவிலான தொண்டர்கள் விருந்தினர் விடுதியின் முன் குவிந்தனர். உள்ளே கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து பகுஜன் சமாஜ் கட்சியினரை அடித்து துவைத்தனர், இதை நாங்கள் நேரடியாக பார்த்தோம்'' என்று நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் பிரதான்.

''துரிதமாக செயல்பட்ட மாயாவதி ஒரு அறைக்குள் மறைந்து கொண்டார். அப்போது மாயாவதியுடன் சிகந்தர் ரிஜ்வி உட்பட இரண்டு பேர் இருந்தார்கள். தன்னிடம் இருந்த பேஜர் மூலமாக நிலைமையை ரிஜ்வி பிறருக்கு தெரிவித்தார். எந்தவொரு நிலையிலும் மறைந்திருக்கும் அறையில் இருந்து வெளியில் வரவேண்டாம் என்று தனக்கு பேஜர் மூலம் பதில் வந்ததாக ரிஜ்வி பிறகு என்னிடம் சொன்னார்" என்கிறார் ஷரத் பிரதான்.

"கதவு வேகமாக தட்டப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பலர் அடித்து உதைக்கப்பட்டனர். சிலரின் நிலைமை மோசமானது, சிலர் அங்கிருந்து தப்பித்து வெளியேறிவிட்டனர்" என்று சொல்கிறார் ஷரத் பிரதான்.

அந்தப் பகுதியின் மூத்த போலீஸ் அதிகாரிகளை தொடர்புக் கொள்ள பகுஜன் சமாஜ் கட்சியினர் முயற்சித்தாலும், யாருமே போனில் கூட அகப்படவில்லை என்று சொல்கிறார் ஷரத் பிரதான்.

அறையில் மறைந்திருந்த மாயாவதி

பட மூலாதாரம், Getty Images

''மாயாவதி மறைந்திருந்த அறையை திறக்க சமாஜ்வாதி கட்சியினர் முயற்சித்தால், அறைக்குள் இருந்தவர்களோ, கதவின் உட்புறத்தில் சோபா, மேசைகள் என கனமான பொருட்களை போட்டு, கதவை திறக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்" என்று பிரதான் சொல்கிறார்.

அன்று உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் விளையாட்டை டெல்லியுடன் தொடர்பு படுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர் ராம்தத் திரிபாதி. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு 1993-ல் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் இணைந்து வெற்றி பெற்று, முலயாம் சிங் மாநில முதலமைச்சர் ஆனார்.

அப்போது தேசிய அளவில் மத்தியில் நரசிம்ம ராவ் பிரதமராகவும், பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பேயி எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தனர். உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி உறுதியாகிவிட்டால், மாநிலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கவலைப்பட்டன.

எனவே, சமாஜ்வாதி கட்சியுடனான உறவை துண்டித்துக் கொண்டால், ஆதரவு தெரிவித்து மாயாவதியை முதலமைச்சராக்குவதாக பாஜக ஆசை காட்டியது.

இப்படி எதாவது நடக்கலாம் என்பதை அனுமானித்த முலாயம் யாதவ், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரினார். ஆனால், அதற்கு மாநில ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை.

மாயாவதியை காப்பாற்றியது யார்?

பட மூலாதாரம், SANJAY SHARMA

'விருந்தினர் மாளிகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றபோது சமாஜ்வாதி கட்சியினர் தாக்கியபோது, மாயாவதியை பிடித்துத் தள்ளினார்கள். தன்னை கொல்ல முயற்சித்ததாக மாயாவதி புகார் கொடுத்தார். இந்த பிரச்சனைதான் 'விருந்தினர் மாளிகை சம்பவம்' என்ற பெயரில் அரசியலில் பிரபலமானது.

இந்தியாவின் தேர்தல் வரலாறு - ஜனநாயகம் காலூன்றிய கதை

மாயாவதியை காப்பாற்ற விருந்தினர் மாளிகைக்கு பாஜகவினர் விரைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது உண்மையில்லை என்று கூறும் ஷரத் பிரதான், "ஊடகங்கள் தான் மாயாவதியை காப்பாற்றின. அந்த சந்தர்ப்பத்தில் பெருமளவிலான ஊடகத்துறையினர் விருந்தினர் மாளிகைக்கு வெளியே குழுமியிருந்தனர். சமாஜ்வாதி கட்சியினர் செய்தியாளர்களை அப்புறப்படுத்த முயன்றாலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை" என்று உறுதியாக சொல்கிறார்.

மாயாவதியுடன் சமாதனமாக பேசி, கதவை திறக்க வைப்பதற்காகவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

கொலை முயற்சி என புகார் அளித்த மாயாவதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மாயாவதி

அடுத்த நாள் காலை பாஜகவினர் ஆளுநரிடம் சென்று, மாயாவதிக்கு ஆதரவளிப்பதாக கூறினார். அப்போது கன்ஷிராம் மாயாவதியை முதலமைச்சராக்கினார். அந்த சம்பவத்தில் இருந்துதான் மாயாவதியின் அரசியல் வளர்ச்சி தொடங்கியது.

அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை இதுவரை மாயாவதி வாய் திறந்து சொல்லியிருக்கிறாரா? இதற்கு பதிலளிக்கும் பிரதான், "ஆம், பல முறை மாயாவதி இந்த சம்பவம் பற்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். ஒருமுறை நான் மாயாவதியுடன் கண்ட நேர்க்காணலின்போதும், பிறகு மற்றொரு முறை செய்தியாளர் சந்திப்பிலும் என்னிடம் இந்த சம்பவம் பற்றி தெளிவாக சொன்னார். தன்னை கொல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் பகுஜன் சமாஜ் கட்சியை அழித்துவிடலாம் என்று அவர்கள் நினைப்பதாகவும் மாயாவதி சொன்னார்.

"அது தன்னை கொல்வதற்கான முயற்சி என்று மாயாவதி நினைப்பதால் தான் மாயாவதிக்கு சமாஜ்வாதி கட்சி மீது கசப்பும் வெறுப்பும் ஏற்பட்டது" என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறார் ஷரத் பிரதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :