உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: இதுதான் முதல் முறையா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, 22 நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதுகுறித்த செய்தி சில வலைதளங்களில் இன்று காலை வெளியானது.
இந்த செய்தி வெளியாகியவுடன் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா இதை உடனடியாக விசாரிக்கும்படி தலைமை நீதிபதியிடம் கோரினார்.
எனவே இந்த வழக்கு இன்று காலை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
"இந்த புகார் முற்றிலும் பொய்யானது. புகார் தெரிவித்துள்ள நபர் டிசம்பர் மாதம் முறையான விசாரணைக்கு பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார். நீதித்துறைக்கு களங்கம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்புலத்தில் சிலர் உள்ளனர் ஆனால் அவர்கள் யார், எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை" என்று தன்மீது கூறப்பட்ட புகாருக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.
"20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின் என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது."
"இம்மாதிரி நீதிபதிகள் மீது களங்கம் கற்பித்தால், வழக்கறிஞர்களோ மற்றவர்களோ நீதிபதியாவதற்கு அஞ்சுவார்கள். இந்த அவதூறுகள் முழுக்க பொய், இதற்கு பின் ஒரு சதி உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகள் அரூன் மிஷ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா, இந்த குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தனர்.
"ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லக்கூடியவரின் பெயரை வெளியிடக்கூடாது. ஆனால், தற்போது புகார் தெரிவித்தவரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.
இந்த விசாரணையில் பங்கேற்று தனது தரப்பு மறுப்பை தெரிவித்த ரஞ்சன் கோகாய் இது குறித்த ஆணை வழங்கும் பொறுப்பை மற்ற இரண்டு நீதிபதிகளிடம் ஒப்படைத்துவிடுவதாக தெரிவித்தார்.
"இந்த வழக்கில் புதியதாக எந்த ஒரு ஆணையையும் வழங்கப்போவதில்லை" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அந்த பெண் அளித்த புகார்களை தங்களது ஊடகங்களில் வெளியிடுவது குறித்து ஊடகங்களிடமே விட்டு விடுகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
`இதுவே முதல்முறை`
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது இம்மாதிரியான புகார் வருவது இது முதல்முறையல்ல. ஆனால் பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல்முறை.
இதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி மீது இம்மாதிரியான பாலியல் புகார் ஒன்று கூறப்பட்டது. அவர் அச்சமயத்தில் நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்று, மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
அவர் மீது தொடுக்கப்பட்ட புகாரை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணைக்கு பிறகு அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் கூறப்பட்டது.
2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் ஏ.கே.கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்வதேந்தர் குமார் மீது இம்மாதிரியான பாலியல் புகார் ஒன்று கூறப்பட்டது. ஆனால், அது அடிப்படை ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த இரண்டு நீதிபதிகளும் ஓய்வுப் பெற்ற பின்னரே இவர்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்