ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் - சட்டம் என்ன சொல்கிறது?

  • திவ்யா ஆர்யா
  • பிபிசி
ரஞ்சன் கோகாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரஞ்சன் கோகாய்

இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கோகாய் தம்மை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார் என்று குற்றம்சாட்டியதால், அவசரமாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூடியது. அந்த அமர்வு ரஞ்சன் கோகாய் தலைமையிலானது.

இத்தகைய அமர்வு கூடுவது பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கான விதிமுறைகளுக்கு எதிரானது என்று பல பெண் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விசாரணையில் ஆஜரான இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பெயர் வெளியிடப்பட்டது குறித்து கவலை வெளியிட்டார்.

நீதிபதி ரஞ்சன் கோகாயின் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை சில ஊடகங்ககளும் செய்தியாக வெளியிட்டன.

சிறப்பு விசாரணைக் குழு ஒன்று தமது குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

பாலியல் புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு குழு இருக்கும்போது, தலைமை நீதிபதி குற்றச்சாட்டுக்கு உள்ளாவதை, அவரையும் உள்ளடக்கிய நீதிமன்ற அமர்வு விசாரிப்பதும், தனி குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று குற்றச்சாட்டை முன் வைக்கும் பெண் கோருவதும் எந்த அளவுக்கு முறையானது?

2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் தீர்வுக்கான சட்டம் இந்த வழக்குகள் எவ்வாறு விசாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கிறது.

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

அனுமதியின்றித் தொடுதல் அல்லது தொட முயல்தல், பாலுறவு கொள்ள வற்புறுத்துதல், பாலியல் ரீதியிலான சொல்லாடல், ஆபாசப் படங்களைக் காட்டுதல், அனுமதியின்றி பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் பொருள்கொண்ட உடலசைவுகள் மற்றும் சைகைகள் செய்தல் ஆகியன பாலியல் துன்புறுத்தல் எனப்படும்.

பணி இடங்களில் இத்தகைய செயல்களில் ஒருவர் ஈடுபட்டால், அந்தந்த நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆகிய இருவரின் பெயர்களையும் அந்தக் குழு வெளியிடக்கூடாது என்று இந்தச் சட்டத்தின் பிரிவு 16 கூறுகிறது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, ரஞ்சன் கோகாய் மீதான புகாரை உச்ச நீதிமன்றத்தின் பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு விசாரிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் பெயரையும் வெளியிடக்கூடாது என்றும் பிரிவு 16 வலியுறுத்துவது அபத்தமானது என்று மூத்த வழக்கறிஞர் விருந்தா க்ரோவர் கருதுகிறார்.

பத்து அல்லது அதற்கு மேலான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவங்களின் பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் விசாரணைக் குழு, அந்த நிறுவனத்திலேயே மூத்த பெண் ஊழியர் தலைமையில் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம்.

அந்தக் குழுவில் குறைந்தது சரிபாதிப் பேர் பெண்களாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவராவது அந்த நிறுவனத்தைச் சேராத, பெண்ணுரிமை செயற்பாட்டாளராக இருக்க வேண்டும்.

நியாயமான விசாரணையை உறுதி செய்ய, புகாரை விசாரிப்பவர் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைவிட அதிகாரமிக்க பொறுப்பில் இருக்க வேண்டும்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள் விசாரணைக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் தலைமை நீதிபதியின் கீழ் பணியாற்றுபவர்கள்.

அதனால் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ள பெண் வலியுறுத்துகிறார்.

அந்தக் குழு விசாரிக்கும் முன்னரே தமது தலைமையிலான அமர்வைக் கொண்டு தலைமை நீதிபதி இந்தப் புகாரை விசாரித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா மேமன் ஜான் இது வழக்கத்தை மீறிய செயல் என்றும், சாதாரண குடிமக்களுக்கு பொருந்தும் சட்டம் தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

"உங்கள் மீதான வழக்குக்கு நீங்களே நீதிபதியாக இருக்க முடியாது எனும் அடிப்படை விதியே மீறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிந்தைய நடவடிக்கை எதுவாக இருந்தாலும், முதலில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "பொது வெளியில் அவதூறு செய்யப்படுவதைத் தடுக்கவே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிடக்கூடாது என்று சட்டம் வலியுறுத்துகிறது," என்கிறார் மூத்த வழக்கறிஞர் விருந்தா க்ரோவர்.

இந்த அவசர விசாரணையின்போது தம் மீதான புகார்களை மறுத்த ரஞ்சன் கோகாய், தாம் இந்த வழக்கை விசாரிக்கப்போவதில்லை, பிற மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.

'நேர்மையான விசாரணை வேண்டும்'

நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்ட இந்தப் புகார் மீதான விசாரணை விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், அவை பொது வெளியில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் விருந்தா க்ரோவர்.

முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய அதே நேரத்தில், புகார் நேர்மையான வகையில் விசாரிக்கப்படவும் வேண்டும் என்கிறார் ரெபேக்கா மேமன் ஜான்.

உள் விசாரணைக் குழுதான் விசாரித்து, புகார் உண்மையா பொய்யா என்று கூற வேண்டும். குற்றச்சாட்டு நிரூபணமானால் இடைநீக்கம், பதவிநீக்கம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

தமது பணியில் தொடர்ந்துகொண்டே பெண்கள் தங்களுக்கான நீதியைப் பெறவே பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் தீர்வுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம், காவல்துறை விசாரணை, சிறைத் தண்டனை போன்றவற்றுக்கு முன்னதாகவே குற்றவாளி பணியிடத்திலேயே தண்டனைகளைப் பெற வழிவகை உள்ளது.

பணியிடங்களில் நடத்தபட்ட விசாரணைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை அல்லது நீதிமன்றத்தை நாடவும் உரிமை உண்டு.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :