விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது - இந்திய விமானப்படை பரிந்துரை

அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது

இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினமணி : அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது - விமானப்படை பரிந்துரை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானால் திரும்பி ஒப்படைக்கப்பட்டதும் நாடு திரும்பிய அபிநந்தன், நான்கு வார விடுப்பில் சென்றார். பின்னர் ஸ்ரீநகரில் முன்பு பணிபுரிந்த படைப்பிரிவில் கடந்த மாதம் இணைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் அவர் பணிபுரிந்த படைப்பிரிவில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய விமானப்படை வட்டாரத் தகவல்கள் கூறுவதாக அச்செய்தி கூறுகிறது.

தற்போது அவர் விமானப்படையின் மேற்குப்பகுதி படைப்பிரிவில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இது வழக்கமான பணியிட மாற்றம்தான்.

போர் காலத்தில் வழங்கப்படும் வீர தீர செயல்களுக்கான வீர் சக்ரா விருதுக்கு, அபிநந்தனின் பெயரை பரிந்துரை செய்யவும் விமானப்படை முடிவு செய்துள்ளது.

வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா ஆகிய விருதுகளுக்குப் பிறகு மூன்றாவது மிகப்பெரிய விருது இதுவாகும் என்று அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது நடுவானில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை அபிநந்தன் வர்த்தமான் சுட்டுவீழ்த்தினார். அதேபோல், அவர் சென்ற போர் விமானமும் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் பகுதிக்குள் பாராசூட் மூலம் தவறுதலாக சென்றார். எனினும், பாகிஸ்தானால் பத்திரமாக அவர் விடுவிக்கப்பட்டார் என மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) - மோதி குறித்த இணையத் தொடருக்கு தடை

பட மூலாதாரம், Getty Images

இணையத்தில் ஒளிபரப்பட்ட பிரதமர் நரேந்திர மோதி குறித்த தொடரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை அவற்றை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அதன் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

'Modi - Journey of a common Man' என்ற இணையத் தொடர் குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம், ஏற்கனவே மோதி திரைப்படத்திற்கு தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் ட்ரெய்லரை பார்வையிட்ட ஆணையம், அத்தொடரில் மோதி சிறு வயதில் இருந்து எவ்வாறு பிரதமர் ஆகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், இது வாக்காளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல புகார்கள் வந்ததாகவும் அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர்: வேட்பு மனுவில் ராகுல் தவறான தகவல் - தேர்தல் அதிகாரி விசாரணை

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது குடியுரிமை, மற்றும் கல்வித்தகுதி குறித்து தவறான தகவல் அளித்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட ராகுல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அமேதியில் ராகுலை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் துருவ்லால் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோது தனது பிரமாண பத்திரத்தில், பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றில் சில முதலீடுகளை செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தாம் பிரிட்டன் குடிமகன் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பெற்றுள்ள பட்டபடிப்பில், 'ராகுல் வின்சி' என்ற இத்தாலிய பெயர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ராகுல் காந்தி உண்மையை மறைத்து தேர்தல் அதிகாரிக்கு தவறான தகவல் கொடுத்துள்ளதால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி கூறுகையில், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுலுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை ஏப்.22-ம் தேதி நடைபெறும் என்றார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :