மாயாவதியின் பிரதமர் கனவு நிறைவேறுவது சாத்தியமா?

  • ரெஹான் ஃபஸல்
  • பிபிசி
மாயாவதி

பட மூலாதாரம், Getty Images

சில நாட்களுக்கு முன்னதாக, தியோபந்த் நகரில் நடைபெற்ற மெகா கூட்டணியின் தேர்தல் பேரணியில் மாயாவதி, அகிலேஷ், யதாவந்த் அஜீத் சிங் என பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அஜித் சிங் மேடையில் ஏறி உரையாற்ற வேண்டும். அப்போது, காலணிகளை கழற்றி வைத்து விட்டு மேடையேறும்படி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.

மேடையில் இருக்கும் போது காலணிகளை அணிந்திருக்கும் மாயாவதி, வேறு யாரும் காலணி அணிந்திருப்பதை விரும்புவதில்லை. ஒரு பெண் சுகாதாரத்தையும், மரியாதையையும் வலியுறுத்துவதாக மட்டும் இதை பார்க்கமுடியாது. நாட்டில் மாறி வரும் 'உள்ளடக்கிய சமூக சமன்பாடுகள்' என்பதை உணர்த்துவதாகவே இந்த கட்டுப்பாடு இருக்கிறது.

மாயாவதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அஜய் போஸ் என்பவரின் கருத்துப்படி, மாயாவதியின் இந்த வலியுறுத்தலுக்கு பிறகு, ஆழமான கதையும், அவமதிப்பு சம்பவங்களும் இருக்கின்றன. முதன்முறையாக மக்களவைக்கு மாயாவதி சென்றபோது, அங்கிருந்த பல பணக்கார பெண் எம்.பிக்கள், மாயாவதியின் கிராமப்புற ஆடை அணியும் முறை மற்றும் எண்ணெய் வழியும் முடியைப் பற்றி நக்கலும் நையாண்டியும் செய்தார்கள். அதுமட்டுமல்ல, அவரிடம் இருந்து வியர்வை நாற்றம் வருவதாகவும் புகார் சொன்னார்கள். நாடாளுமன்றத்திற்கு வரும்போது, வாசனை திரவியங்களை பயன்படுத்துமாறு யோசனையும் சொன்னார் ஒரு மூத்த பெண் எம்.பி.

அவரைச் சுற்றி இருந்த அனைவரும், மாயாவதியின் சாதியை குறிப்பிட்டு மட்டம் தட்டிக் கொண்டே இருந்தனர். அதுமட்டுமல்ல, தலித்துகள் 'அழுக்கானவர்கள், சுகாதார முனைப்பற்றவர்கள்' என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி, தொடர்ந்து அவமதித்தார்கள். இவை அனைத்தும் மாயாவதியின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எனவே தன்னுடைய அறைக்கு வரும் யாரும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி, காலணிகளை அணிந்து வரக்கூடாது என்று மாயாவதி ஆணையிட்டார்.

மாயாவதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மற்றொரு எழுத்தாளர் நேஹா தீக்‌ஷித். 'த கேரவன்' பத்திரிகையில், Inside Maywati's Battle for Uttar Pradesh என்ற கட்டுரையில், தனது வீட்டை தினசரி மூன்று முறை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

உணார்ச்சிவசப்படுபவர், கணிக்கவே முடியாதவர்

மாயாவதியின் மனோநிலையை கணிப்பது கடினம்.

1999 ஏப்ரல் 17ஆம் தேதியன்று வாஜ்பேயி அரசு மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்லவேண்டாம் என்று குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அறிவுறுத்தினார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக செளதாலா அறிவித்ததாலும், வாக்களிப்பதில் இருந்து விலகி நிற்பதாக மாயாவதி பச்சைக் கொடி காட்டியிருந்ததாலும், வாய்பேயி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முழு நம்பிக்கையில் இருந்து.

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 16ஆம் தேதி வாஜ்பேயி, நாடாளுமன்றத்தில் இருந்து கிளம்புவதற்காக தனது காரில் ஏறும்போது, 'You need not worry" (நீங்கள் கவலைப்படவேண்டாம்) என்று மாயாவதி கூறினார்.

அன்று இரவு, மாயாவதியின் முடிவை மாற்றுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்ட அர்ஜுன் சிங், மாயாவதி யாரை மிகவும் மதிப்பாரோ, யாருடைய வார்த்தைகளை மறுக்கமாட்டாரோ அவரை தொடர்பு கொண்டார். பாட்னாவில் தங்கியிருந்த கன்ஷிராமை தொடர்பு கொண்டு காய்களை நகர்த்தினார் அர்ஜுன் சிங்.

அடுத்த நாள் காலை டெல்லியில் இருப்பதற்கு ஏற்றவாறு விமானத்தில் வருமாறு அர்ஜுன் சிங் கேட்டுக் கொண்டார். தங்களது திட்டத்தில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் முகாம் பல திட்டங்களைத் தீட்டியது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பட்னாவில் இருந்து கிளம்ப தாமதமானால் தங்களது கணக்குகள் தப்பிவிடும் என்று கணக்குப் போட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாற்று ஏற்பாடாக பிகார் முதலமைச்சர் ராப்ரி தேவியின் விமானத்தையும் பட்னா விமான நிலையத்தில் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

பின்னிரவில் மாயாவதியை தொலைபேசியில் அழைத்த பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆரீஃப் முகமது கான் மற்றும் அக்பர் அஹமத் டம்பி, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் தங்கள் கட்சி விலகி நின்றால், கட்சியின் முஸ்லிம் வாக்காளர்களுக்கு அதிருப்தி ஏற்படும் என்று கூறினார்கள். உங்கள் கருத்துக்களை மனதில் வைத்துக் கொள்கிறேன், காலை ஒன்பது மணிக்கு என் வீட்டிற்கு வாருங்கள் என்று, இரவு இரண்டு மணிக்கு நடந்த தொலைபேசி உரையாடலில் மாயாவதி பதிலளித்தார்.

வாஜ்பேயி அரசுக்கு சிவப்பு சிக்னல்

எங்கோ கணக்குகள் தவறாகின்றன என்பதை அதற்குள் மோப்பம் பிடித்து விட்ட பாரதிய ஜனதா கட்சி, அதை தவிர்த்து ஆட்சியை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. எனவே, காலையில் கன்ஷிராமின் விமானம் டெல்லியில் இறங்கியதும், அவருடன் தொலைபேசியில் பேசினார் வாஜ்பேயி. தங்கள் கட்சி வாக்களிப்பதில் இருந்து விலகி நிற்கும் என்று அவரும் வாக்குறுதி கொடுத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு சற்று முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினார். காலையில் நாடாளுமன்றத்தில் வாஜ்பேயிக்கு ஆதரவளித்தால், மாலையில் மாயாவதி உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆவார் என்று அவர் உறுதி கொடுத்தார்.

பட மூலாதாரம், SANJAY SHARMA

இப்படி பேரங்கள் வேகமாக முன்னேறுவதைப் பார்த்த சரத் யாதவும் மாயாவதியை சென்று சந்தித்தார். அப்போது, 'நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்தால், அரசு கவிழ்ந்துவிடும் என்று உறுதியாக சொல்ல முடியுமா?' என்று மாயாவதி எழுப்பிய கேள்விக்கு, 'ஆம்' என்று பதிலுரைத்தார் சரத் யாதவ்.

மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் விவாதங்கள் முடிந்த பிறகு, அவையே நிசப்தமாக இருந்தது. மாயாவதி ஆரிஃப் கான் மற்றும் அக்பர் அகமத் டம்பியை பார்த்து, 'சிவப்பு பொத்தானை அழுத்துங்கள்' என்று உரத்த குரலில் கூறினார். அன்றைய அரசியல் சூழலையே புரட்டிப் போட்ட வார்த்தைகள் அவை. வாய்பேயி அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்த குரலாக ஒலித்தது. சிவப்பு பொத்தானை அழுத்தி, அரசுக்கு சிவப்புக் கொடி காட்டி, தனது முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டார் மாயாவதி.

கன்ஷிராமுடன் முதல் சந்திப்பு

1977ஆம் ஆண்டு குளிர் வாட்டிய ஒரு டிசம்பர் மாத இறுதியிலும் இதுபோன்ற ஒரு முக்கியமான முடிவை எடுத்தார் மாயாவதி. அதற்கு முதல் நாள், டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய இந்திய சுகாதார அமைச்சர் ராஜ்நாராயண், தலித்துகளை பற்றி குறிப்பிடும்போது, 'ஹரிஜன்' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அந்த வார்த்தையை கூறி அழைப்பது, தங்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று அந்த கூட்டத்தில் இருந்த மாயாவதி தெரிவித்தார்.

அடுத்த நாள் இரவு சுமார் ஒரு மணியளவிற்கு, டெல்லியில் இருந்த மாயாவதியின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. மாயாவதியின் தந்தை பிரபு தயால் கதவைத் திறந்தபோது, நடுத்தர வயதுடைய ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலையுடன் கசங்கிய ஆடை அணிந்திருந்த அவர் தனது பெயர் கன்ஷிராம் என்றும், BAMCEF அமைப்பின் தலைவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு, புனேயில் நடைபெறவிருக்கும் பேரணியில் உரையாற்ற மாயாவதிக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த சமயத்தில் மாயாவதி டெல்லியில் இந்திரபுரி என்ற பகுதியில் வசித்தார். வீட்டில் மின்சாரம் கிடையாது, லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படிப்பார். 'Kanshiram the Leader of Dalits' என்ற கன்ஷிராமின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதிய பத்ரி நாராயன், மாயாவதியிடம் கன்ஷிராம் கேட்ட முதல் கேள்வியே அவரை மாயாவதியிடம் மதிப்பு கொள்ள வைத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார். ு

நீ என்னவாக விரும்புகிறாய் என்ற கன்ஷிராமின் கேள்விக்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்றும், தனது சமூகத்தினருக்கு பணியாற்ற வேண்டும் என்றும் கூறிய மாயாவதியின் பதில் கன்ஷிராமை ஈர்த்தது. பிறகு மாயாவதியுடன் தொடர்ந்த உரையாடலில், நீ ஐ.ஏ.எஸ் அதிகாரியானால், தலித்துகளுக்கு பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது. ஆனால், உனது உத்தரவை எதிர்பார்த்து டஜன் கணக்கான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உன் முன் வரிசையாக நிற்கும் அளவுக்கு உன்னை பெரிய ஆளாக மாற்றுவேன். பிறகு, நீ உனது சமூகத்திற்கு உண்மையாக சேவையாற்றலாம் என்று கன்ஷிராம் உறுதியளித்தார்.

தனது எதிர்காலத்திற்கான அடித்தளம் அங்கே உருவாவதை மாயாவதி விரைவில் உணர்ந்துக் கொண்டார். தந்தையின் கடுமையாக எதிர்ப்புகளையும் தாண்டி, மாயாவதி விரைவில் கன்ஷிராமின் இயக்கத்தில் இணைந்தார்.

'Story of My Struggle In Bahujan Movement' என்ற தனது சுயசரிதையில் மாயாவதி இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கன்ஷிராமை சந்திக்கக்கூடாது, ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கத் தொடங்கு என்று என் தந்தை கடுமையாக கண்டித்தார். தமது வார்த்தைகளை மீறினால், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றும் அவர் கூறினார்'.

பட மூலாதாரம், SANJAY SHARMA

படக்குறிப்பு,

கன்ஷிராமுடன் மாயாவதி

கன்ஷிராமுடன் இணைவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்

தந்தையை வார்த்தைகளை கேட்க மறுத்த மாயாவதி, வீட்டை விட்டு வெளியேறி, கட்சி அலுவலகத்திலேயே தங்கத் தொடங்கினார்.

'Bahenji, A Political Biography' என்ற மாயாவதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அஜய் போஸ், தந்தையுடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு, ஒரு சூட்கேஸில் தனது துணிகளையும், ஆசிரியராக வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு மாயாவதி வெளியேறினார் என்று கூறுகிறார். அன்று அவர் வீட்டின் படியில் இருந்து கீழே இறங்கினாலும், அரசியல் வாழ்க்கையின் படிகளில் மேலே ஏறத் தொடங்கினார்.

'Kanshiram, The Leader Of Dalits' என்ற கன்ஷிராமின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய பத்ரி நாராயண், வீட்டை விட்டு வெளியேறிய மாயாவதி எதிர்கொண்ட சிக்கல்களைப் பற்றியும், அப்போது அவர் எதிர்கொண்ட விமர்சனங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிப்பது என்பது அந்த காலகட்ட த்தில் இயல்பானது அல்ல. ஒரு வீட்டை தனக்காக வாடகைக்கு எடுக்க முயற்சித்தார். ஆனால், அதற்கு போதுமான பணம் இல்லாததால், கட்சி அலுவலகத்திலேயே தங்க வேண்டிய கட்டாயம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கும் கன்ஷிராமுக்கும் இடையிலான 'புரிதல்'

படக்குறிப்பு,

கன்ஷிராம்

கன்ஷிராமுக்கும், மாயாவதிக்கும் இடையில் ஆரம்பத்தில் நல்ல புரிதலும், அன்பும் இருந்தது, ஆனால் பிறகு அவர்களிடையே மோதல்களும் அதிகமாயின. கன்ஷிராம் மிகவும் உணர்ச்சிவசப்படுவார். கெட்ட வார்த்தைகளை இயல்பாக பேசுவார் என்றும், அவருக்கு கோபம் வந்தால், அது வாய் வார்த்தையுடன் நிற்காது, கைகளும் பேசும் என்றும் அஜய் போஸ் எழுதுகிறார். அதேபோல், மாயாவதியும் தன்னை யாரும் அதிகாரம் செய்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார். கன்ஷிராம் தன்னை திட்டினால் அதற்கு, அவரது மொழியிலேயே சரியான பதிலடி கொடுப்பார் மாயாவதி.

'கன்ஷிராம் மீதான மாயாவதியின் ஆதிக்கமும், பிணைப்பும் அதிகமாக இருந்து. வேறு யாராவது கன்ஷிராமுடன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தனியாக இருந்தால், ஏதாவது காரணத்தை கூறிக் கொண்டு மாயாவதி அந்த அறைக்குள் சென்றுவிடுவார், வேறு யாரையும் கன்ஷிராமுடன் நெருங்கவே விடமாட்டார் மாயாவதி' என்கிறார் அஜய் போஸ்.

கேரவன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், கன்ஷிராமுக்கும் மாயாவதிக்கும் இடையிலான இந்த பிணைப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் நேஹா தீக்‌ஷித்.

'டெல்லி ஹுமாயூன் சாலை வீட்டிற்கு கன்ஷிராம் மாறியதும், அங்கு மாயாவதிக்கு தனி அறை கொடுக்கவில்லை'. கன்ஷிராம் வரவேற்பறையில் அமர்ந்து அரசியல் பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருந்தால், வீட்டின் பின்புறத்தில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் அமர்ந்து கிராமப்புறங்களில் இருந்து வருகை தரும் கட்சித் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருப்பார் மாயாவதி.

வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜின் கதவை பூட்டி, சாவியை தன்னிடமே வைத்துக் கொள்வார் கன்ஷிராம். தன்னைப் பார்க்க வருபவர்களுக்கும், வரவேற்பறையில் அமர்பவர்களுக்கும் மட்டுமே, குளிர்பானம் வழங்கவேண்டும் என்று மாயாவதி மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் உத்தரவிட்டிருந்தார் கன்ஷிராம்.

கன்ஷிராமுக்குக் பணிவிடை செய்த மாயாவதி

கன்ஷிராமின் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில், அவருக்கு மாயாவதி செய்த பணிவிடைகளை யாருமே மறுக்க முடியாது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கன்ஷிராம், ஏறக்குறைய முடங்கியேவிட்டார். மாயாவதியின் வீட்டில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இருந்தார் கன்ஷிராம். அந்த சமயத்தில் அவருக்கு உணவு அளிப்பது, ஆடைகளை துவைப்பது என கன்ஷிராமின் ஒவ்வொரு வேலையையும் மாயாவதியே செய்வார். இது கன்ஷிராம் மீதான மாயாவதியின் உயர்ந்த மதிப்பை வெளிப்படுத்தியது. அப்போது, மாயாவதிக்கு கொடுக்க கன்ஷிரமிடம் எதுவுமே இல்லை என்ற நிலையில், அவர் மீதான அன்பினால்தான் மாயாவதி பணிவிடைகள் செய்தார் என்பதை புரிந்துக் கொள்ள முடியும் என்று அஜய் போஸ் எழுதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

1985ஆம் ஆண்டு, பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் இருந்து முதன்முறையாக போட்டியிட்ட மாயாவதியை, ஜகஜீவன்ராமின் மகள் மீரா குமார் தோற்கடித்தார். ஆனால் அதே தொகுதியில் இருந்து 1989ஆம் ஆண்டு வெற்றி பெற்று முதன்முதலாக மக்களவையில் காலடி எடுத்துவைத்தார் மாயாவதி. மக்களவையின் நடுப்பகுதிக்கு சென்று தனது பிரச்சனைகளை உரத்த குரலில் முன்வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார் எம்.பி. மாயாவதி.

முலாயம் சிங்குடன் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அரசு

1993இல், கன்ஷிராமும், முலாயம் சிங்கும், டெல்லில் அஷோகா ஹோட்டலில் சந்தித்து, உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைத்தார்கள். அந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி 109 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 67 தொகுதிகளிலும் வென்று ஆட்சி அமைத்தன. ஆனால் இந்த கூட்டணி நீண்ட நாள் நீடிக்கவில்லை.

லக்னோவுக்கு கன்ஷிராம் வரும்போதெல்லாம் முலாயம் சிங்கை சந்திக்க அவரது வீட்டுக்கு செல்லமாட்டார். கன்ஷிராமை சந்திக்க முலாயம் சிங் அரசு விருந்தினர் விடுதிக்கு சென்றாலும், அவரை அரை மணி நேரமாவது காக்க வைப்பார் கன்ஷிராம்.

பதவிக்கேற்றவாறு முதலமைச்சர் முலாயம் சிங் நன்றாக உடையணிந்து வந்து கன்ஷிராமுக்காக காத்துக் கொண்டிருந்தால், தாமதமாக வரும் கன்ஷிராம் இடுப்பில் சுற்றிய லுங்கியும், மேலே பனியன் போன்ற உள்ளாடையும் அணிந்து வருவார். முலாயம் சிங், தன்னை விட தாழ்ந்தவர், தன்னுடைய உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர் என்பதை காண்பிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் கன்ஷிராம் தவறவிட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

பட மூலாதாரம், GETTY / PTI

படக்குறிப்பு,

மாயாவதி - முலாயம் சிங்

அவமானப்படுத்தப்பட்ட மாயாவதி: விருந்தினர் மாளிகை சம்பவம்

முலாயம் சிங்கின் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார் மாயாவதி. ஆனால் அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக, 1995, ஜுன் இரண்டாம் தேதியன்று தனது வாழ்க்கையிலேயே மிகவும் மோசமாக அவமதிக்கப்பட்டார் மாயாவதி.

அன்று மாலை சுமார் நான்கு மணியளவில், அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த 200க்கும் மேற்பட்ட முலாயம் சிங் ஆதரவாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களை தாக்கி மாயாவதி தங்கியிருந்த அறையை உடைத்து உள்ளே சென்று மாயாவதியை அவமானப்படுத்தினார்கள். அங்கேயே இரவு ஒரு மணி வரை அடைந்து கிடந்தார் மாயாவதி. அந்த அறையின் மின்சாரமும், தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டது.

அவமானத்தை ஒருபோதும் மறக்காத மாயாவதி

உத்தரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மாயாவதி, மாவட்டங்கள், நகரங்கள், பல்கலைக்கழகங்களின் பெயர்களை மாற்றுவதில் முனைப்புக் காட்டினார். ஆக்ரா பல்கலைக்கழகத்தின் பெயர், பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்றும், கான்பூர் பல்கலைக்கழகம், சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ் பல்கலைக்கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ன.

அம்பேத்கர் பூங்கா மற்றும் பரிவர்த்தன் செளக் கட்டுமானங்கள், மாயாவதியின் லட்சிய திட்டங்கள். இங்கு தலித் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன

மாயாவதியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது கடினம் என்பதை விரைவிலேயே பாரதிய ஜனதா கட்சி உணர்ந்துவிட்டது. எனவே, சில மாதங்களுக்குள் மாயாவதி அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற்றது பாஜக.

ராஜா பையாவை சிறையில் வைத்த மாயாவதி

பட மூலாதாரம், Getty Images

அதன்பிறகு சில ஆண்டுகளில் மீண்டும் பாஜகவுடன் மாயாவதி கூட்டணி வைத்தாலும், அந்த முயற்சியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனால் அந்த சமயத்தில் தான் ஒரு கடுமையான ஆட்சியாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரதாப்கரைச் சேர்ந்த ராஜா பையா என்று அழைக்கப்பட்ட ரகுராஜ் பிரதாப் சிங் என்ற பிரபலமான தலைவரை சிறையில் தள்ளினார். இரண்டு தசாப்தங்களாக மாநிலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த ராஜ பையாவுக்கு, முலாயம் சிங் மற்றும் ராஜ்நாத் சிங்கின் ஆதரவு இருந்தது. ஆனால், மாயாவதியின் கடும்போக்கின் காரணமாக ராஜ பையா, ஓராண்டு வரை சிறையில் இருந்தார். மீண்டும் முலாயம் சிங் பதவிக்கு வந்தபின், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்

மாயாவதிக்கு நெருக்கமாக இருந்த ஒரு அரசு அதிகாரி 2008இல் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்கிறார். மதுராவுக்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த மாயாவதி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கழிவுநீர் குழாயை திறந்து வைக்க முடிவு செய்தார். திடீரென முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும், மாயாவதி வருவதை தெரிந்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக அந்த கழிவு நீர் குழாயை சீரமைத்தார். மாயாவதி அங்கே சென்று, கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்தபோது, அது அப்போதுதான் சீரமைக்கப்பட்டது என்பது தெரிந்துவிட்டது. தனது ஹெலிகாப்டருக்கு திரும்பிச் செல்லும்போது, மாவட்ட ஆட்சியரை பார்த்து 'நீ முடிந்துவிட்டாய்' என்று சொல்லிவிட்டு சென்ற மாயாவதி, மாலைக்குள் அவரை பணியிட மாற்றம் செய்துவிட்டார்.

2007-ல் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சரான மாயாவதி

பட மூலாதாரம், BADRI NARAYAN

2007இல் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு கட்சியை வெற்றி பெறச் செய்த மாயாவதியின் புகைப்படத்தை தனது அட்டைப்படத்தில் பிரசுரித்த நியூஸ்வீக் பத்திரிகை, அந்த ஆண்டுக்கான தலைசிறந்த 100 மகளிர்களில் ஒருவராகவும் மாயாவதியை தேர்ந்தெடுத்தது.

மாயாவதியின் இந்த சாதனைகளை பார்க்க அவரது முன்னோடியும், நலம்விரும்பியுமான கன்ஷிராம் உயிருடன் இல்லை.

கன்ஷிராமின் மறைவுடன் மாயாவதியின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமித்துவிடும் என்ற பல அரசியல் நிபுணர்களின் கருத்தையும் பொய்த்துப் போகச் செய்தார் மாயாவதி.

2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாபெரும் வெற்றி இந்திய அரசியலிலேயே புதிய கோணத்தை கொடுத்தது என்றே சொல்லாம். மாயாவதியின் வெற்றியை தொடர்ந்து, மக்கள் தங்களை அணுகும் விதமும், அழைக்கும் விதமும் மாற்றிவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் நம்புகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள்

சிறந்த நிர்வாகியாக தன்னை முன்னிறுத்திய மாயாவதியால், ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பமுடியவில்லை. தாஜ் காரிடர் வழக்கு, தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக மாயாவதியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகியவை அவரது புகழுக்கு களங்கமாயின. 2012ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக வேட்பு மனு தாக்கல் செய்த போது, தனக்கு 112 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக மாயாவதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

டெல்லியில் சர்தார் பட்டேல் மார்க் பகுதியில் 22 மற்றும் 23 எண்ணுள்ள பங்களாக்களை வாங்கினார். இவற்றைத் தவிர, தனது சொந்த ஊரான பாதல்பூரில் ஆடம்பரமான வீடுகளை கட்டினார். 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிட்டார் மாயாவதி. மக்களிடம் இருந்து கிடைத்த பரிசுகள் மூலமாக தனக்கு சொத்து சேர்ந்தாகவும் மாயாவதி தெரிவித்தார் என்பது குறிப்பித்தக்கது.

பட மூலாதாரம், Getty Images

மாயாவதியின் நெருங்கிய உறவினர்களும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதற்காக பல வேட்பாளர்களிடம் பணம் லஞ்சமாக பெற்றதாக, மாயாவதிக்கு நெருக்கமான பலர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அண்மையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில், பூங்காக்களில் நிறுவப்பட்ட மாயாவதி மற்றும் கன்ஷிராமின் சிலைகளுக்கு, அரசுப்பணம் செலவிடப்பட்டது என்பதால் அவற்றை மாயாவதியே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தை குறிப்பிட்டுச் சொல்லாம்.

தொடர் தோல்விகள்

தனக்கு கிடைத்த நற்பெயரை மாயாவதியால் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

2012 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியால் தோற்கடிக்கப்பட்ட பிறகு, 2014 தேர்தலில் மோதி அலையால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

2017 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் வரை மாயாவதியால் வெற்றிபெற முடியாமல் இருந்து.

தற்போது, 2019 மக்களவைத் தேர்தல்களில் தனது கசப்பான விரோதியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார் மாயாவதி.

தேர்தல் கணிப்புகளின்படி, இந்த கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தல் புள்ளிவிவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2019 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் கடந்த காலத்தை பார்க்கும்போது, கூட்டணியுடன் அது நீண்ட நாள் தொடர்ந்தில்லை என்பது தெளிவாகிறது.

1996ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் கட்சி 314 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 110 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மொத்தம் 100 தொகுதிகளில் கூட அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

அந்த சமயத்தில் கன்ஷிராம் இப்படிச் சொன்னார், 'எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். எங்களது வாக்குகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கின்றன. ஆனால், அவர்களது வாக்குகள் எங்களுக்கு வருவதில்லை'.

தனது அரசியல் முன்னோடியான கன்ஷிராமின் இந்த கருத்தை பொய்யாக்கினால்தான் இந்த முறை வெற்றி பெறமுடியும் என்பதால், இந்த தேர்தலில் மாயாவதி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

தனது கட்சியினரை ஒற்றுமையாக வைத்திருப்பதும் மாயாவதிக்கு சவாலாக இருக்கும். தனது கட்சியில் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது பகுஜன் சமாஜ் கட்சிக்கு தொடர்ந்து சவாலாகவே உள்ளது. முதலில் கட்சியை விட்டு வெளியேறியவர் மசூத் அஹ்மத்.

அஜய் போஸின் கருத்துப்படி, முலாயம் சிங் அரசில் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றினார் மசூத். மாயாவதி ஒரு கொடுங்கோலர் என்று கூறிய அவர், 1994 ஜுன் மாதம் கட்சியில் இருந்து வெளியேறும்பொது ஷேக் சுலைமானையும் அழைத்துச் சென்றுவிட்டார். பிறகு, அக்பர் அஹ்மத் டம்பி, ஆரிப் முகமது கான், ரஷீத் அல்வி போன்ற பிரபல முஸ்லிம் தலைவர்கள் பகுஜன் சமாஜில் இணைந்தாலும், விரைவிலேயே அவர்களுக்கு வெளியே செல்லும் கதவையும் காட்டினார் மாயாவதி.

ஒரு காலத்தில் மாயாவதிக்கு நெருக்கமானவர்களாக கருதப்பட்ட சுவாமி பிரசாத் மெளர்யா, நசீமுதின் சித்திகி போன்றவர்களும் அண்மையில் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர்.

பிரதராகும் மாயாவதியின் கனவு மெய்ப்படுமா?

என்றாவது ஒரு நாள் நாட்டின் பிரதமராவது என்பதே மாயாவதியின் வாழ்நாள் கனவு, லட்சியம் என்று சொல்லலாம். தற்போது, அவரது கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மாயாவதியின் பிரதமர் கனவுக்கு தான் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 38 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் ஒரு கட்சியின் தலைவர், இந்தியப் பிரதமராக கனவு கான்பது நனவாகுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

பட மூலாதாரம், Getty Images

ஆனால், வாழ்க்கையில் பல சிக்கல்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டு தனது விருப்பத்தையும் லட்சியத்தையும் நிறைவேற்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டவர் மாயாவதி என்பதையும் மறந்துவிடக்கூடாது. இளம் வயதிலேயே தனது தந்தையை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியவர். அவரை பொதுவாழ்க்கையில் அறிமுகப்படுத்திய கன்ஷிராமின் மறைவுக்கு பிறகு, மாயாவதியை வீழ்த்தும் முயற்சியில் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி கட்சியின் தலைமையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை மாயாவதிக்கு இருக்கிறது.

இந்தியாவின் தேர்தல் வரலாறு - ஜனநாயகம் காலூன்றிய கதை

மாயாவதியை அச்சுறுத்த முயன்ற முலாயம் சிங் மோசமாக தோற்றுப்போனார். 2007-ல் உத்தரப்பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்ற அரசியல் நிபுணர்களின் கருத்து பொய்யானது.

மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு, பிரதமராகும் மாயாவதியின் கனவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் மாயாவதியின் அரசியல் வாழ்க்கை தேக்கமடைந்துள்ளது என்று சொல்லிவிட முடியுமா?

ஒரு அரசியல் தலைவரின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்று தீர்மானமாக எழுதிவிட்டாலும், அவர் எத்தனை தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், 'அரசியலில் எதுவும் நடக்கலாம்' என்ற சொல்லாடலுக்கு ஏற்ப, நீண்ட காலம் மறக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர் ஒருவர் வீறு கொண்டு எழுந்திருப்பதை அரசியல் சரித்திரங்கள் பதிவு செய்துள்ளன.

மறக்கப்பட்ட பல தலைவர்களை மக்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்த வரலாறுகள், அரசியலில் எந்தவிதமான சாத்தியக்கூறுகளையும் மறுக்கவோ, மறக்கவோக்கூடாது என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :