காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயற்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த பரிசோதனை செய்வதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அனுமதியின் மூலம், காவிரி டெல்டா மாவட்டங்களின் 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான கிணறுகள் தோண்டப்படும்.
இதுகுறித்த அனுமதியை பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியுள்ளது. அதன்படி, கடலூரில் 35 இடங்களிலும், நாகப்பட்டினத்தில் ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினத்தந்தி: பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்
மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதன்பின் வாக்குப்பதிவு ஆவண அறையில் நுழைந்ததாக கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்திடம், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அவர் 2 மணிநேரம் ஆவண அறையில் இருந்துள்ளார். ஆனால், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்குள் நுழையவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து தமிழ் - "பாகிஸ்தானை எச்சரித்தோம்"
பட மூலாதாரம், Getty Images
இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாதுகாப்பாக இந்தியா திரும்பாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை எச்சரித்தோம் என்று பிரதமர் மோதி பெருமிதத்துடன் தெரிவித்ததாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"குஜராத்தில் உள்ள பதான் பகுதியில் நேற்று பிரதமர் மோதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய விமானி அபிந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியபின் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உடனே நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் என்னிடம் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
நாங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். இந்திய விமான அபிநந்தன் வர்த்தமான் உயிருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மோதி இப்படி செய்துவிட்டார் என்று இந்த உலகத்துக்கு நீங்கள் சொல்லநேரிடும் என்று பாகிஸ்தானை எச்சரித்தோம்.
அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அபிநந்தன் கைது செய்யப்பட்ட மறுநாள், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியப் பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளார், எந்த சூழலிலும் தாக்குதல் நடத்தினால், பேரழிவு ஏற்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அனுப்பினர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
தினமணி: "10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரை"
பட மூலாதாரம், VikramRaghuvanshi
தமிழகத்தில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளோம்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடியிலும், கடலூர் மக்களவைத் தொகுதியில் பண்ருட்டியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளோம். இது தவிர, வேறு இடங்களில் இருந்து புகார் வரவில்லை.
மறு வாக்குப்பதிவு எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேதிகளை முடிவு செய்தவுடன் , உடனே அறிவிக்கப்படும்" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளதாக அதில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்