ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட ரஞ்சன் கோகாய் இந்த வாரம் விசாரிக்கவுள்ள முக்கிய வழக்குகள்

ரஞ்சன் கோகாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரஞ்சன் கோகாய்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, 22 நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியது குறித்த செய்தி கடந்த சனிக்கிழமையன்று ஊடகங்களில் வெளியானது.

இந்த செய்தி வெளியாகியவுடன் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா இதை உடனடியாக விசாரிக்கும்படி தலைமை நீதிபதியிடம் கோரியதையடுத்து, இந்த வழக்கு சனிக்கிழமை காலை உடனடியாக விசாரணைக்கு வந்தது.

"இந்த புகார் முற்றிலும் பொய்யானது. நீதித்துறைக்கு களங்கம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்புலத்தில் சிலர் உள்ளனர். ஆனால் அவர்கள் யார், எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை" என்று தன்மீது கூறப்பட்ட புகாருக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.

"20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின் என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது. என் அலுவலக உதவியாளரிடம்கூட அதிகப் பணம் உள்ளது" என்று தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்தபோது கோகாய் குறிப்பிட்டார்.

பணம் மூலம் தம்மை யாராலும் வளைக்க முடியாது என்பதால் இப்படி ஒரு புகார் தம் மீது கூறப்படுவதாக கோகாய் அப்போது மேலும் தெரிவித்தார்.

"இம்மாதிரி நீதிபதிகள் மீது களங்கம் கற்பித்தால், வழக்கறிஞர்களோ மற்றவர்களோ நீதிபதியாவதற்கு அஞ்சுவார்கள். இந்த அவதூறுகள் முழுக்க பொய்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகள் அரூன் மிஷ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா, இந்த குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நரேந்திர மோதி

"ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லக்கூடியவரின் பெயரை வெளியிடக்கூடாது. ஆனால், தற்போது புகார் தெரிவித்தவரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணைக்கு வரவுள்ள சில முக்கிய வழக்குகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கவுள்ளார்.

"அடுத்து வரும் சில நாட்கள் கோகாய்க்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த வாரத்தில் மட்டும், மோதியின் சுயசரிதை திரைப்படம், ராகுல் காந்தி மீது எழுப்பட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டு, பல்வேறு தேர்தல் தொடர்பான வழக்குகளை கோகாய் விசாரிக்க உள்ளார்" என்று வழக்குரைஞர் சுரத் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கவுள்ள வாரத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரிக்கவுள்ள சில முக்கியமான வழக்குகள் குறித்து காண்போம்.

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ராகுல் காந்தியின் மீது நீதிமன்ற அவமதிப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜகவின் மக்களவை உறுப்பினர் மீனாக்ஷி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

பிரதமர் மோதியின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் திரைப்படத்தை மக்களவைத் தேர்தல் நடந்து வரும் சமயத்தில் வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை கோகாய் விசாரிக்க உள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, மாநிலத்தின் பல பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கும் இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

இதுமட்டுமின்றி, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகள் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படுமென்று தெரிகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :