மக்களவைத் தேர்தல் 2019: தொடங்கியது மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு

அஹமதாபாத் ரனிப் தொகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாக்களித்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

அஹமதாபாத் ரனிப் தொகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாக்களித்தார்.

மொத்தம் ஏழு கட்டங்களை கொண்ட இந்திய மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 115 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த 11ஆம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 91 தொகுதிகளிலும், 18ஆம் தேதி தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களிலுள்ள 95 தொகுதிகளிலும் நடந்த நிலையில் இன்று மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவை மாநில வாரியாக பார்க்கும்போது, குஜராத்தில் 26 தொகுதிகளிலும், கேரளாவில் 20 தொகுதிகளிலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் 10, சத்தீஸ்கரில் 7, ஒடிஷாவில் 6, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், அசாமில் 4, கோவாவில் 2 தொகுதிகளிலும், ஜம்மு & காஷ்மீர், திரிபுரா, தாதர் & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய பகுதிகளில் தலா ஒரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக, குஜராத் (26), கேரளா (20), கோவா (2), தாதர் & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தமுள்ள தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 7 கட்டங்களில் இன்றுதான் அதிகபட்சமாக 115 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

வயநாட்டில் இன்று தேர்தல்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள படி, கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தென்னிந்திய மாநிலம் ஒன்றிலிருந்து மக்களவைக்காக போட்டியிடுவது இதுவே முதல் முறை.

வயநாடு தொகுதியை தவிர்த்து உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியிலிருந்து ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வரும் மே மாதம் 6ஆம் தேதி அமேதி தொகுதியில் நடைபெறும் தேர்தலிலும் ராகுல் வெற்றிப்பெறும் பட்சத்தில், அவர் ஏதாவதொரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், ராகுல் காந்தியை தென்னிந்திய மாநிலம் ஒன்றில் போட்டியிட வைப்பதன் மூலம் வாக்காளர்களை கவர முடியுமென்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.

பட மூலாதாரம், Vikram Raghuvanshi

ராகுல் காந்தி தென்னிந்தியாவில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "தற்போதைய பாஜக அரசாங்கம் தங்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று தென்னிந்திய மாநிலங்கள் நினைப்பதால் அங்கு எனக்கான தேவை உள்ளது. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி தங்களை விரோத போக்குடன் நடத்துவதாக தென்னிந்திய மாநிலங்கள் கருதுகின்றன" என்று கூறினார்.

"காங்கிரஸ் கட்சியும், நானும் தென்னிந்திய மக்களுக்காக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காகவே, நான் கேரளாவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :