“கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் இன்றும் வாழ்கிறார்” - நேரடி சாட்சியின் வாக்குமூலம்

  • நிதின் ஸ்ரீவத்ஸவா
  • பிபிசி
கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி (இடது)

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY/AFP/Getty Images

படக்குறிப்பு,

கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி (இடது)

காலை 11.30 மணிக்கு பரிபடா பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தி ``மயூர்பானி தொழுநோய் இல்லத்துக்கு எப்படி செல்ல வேண்டும்'' என்று நாங்கள் கேட்டோம்.

கைவண்டி உரிமையாளர் ஒருவர், ``முன்னே சாலைகள் சந்திக்கும் இடத்தில் இடதுபுறம் திரும்பி அரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அங்கே சாஹிப்களின் மையத்தை அடைவீர்கள்'' என்று கூறினார்.

``சகோதரரே, நாங்கள் தொழுநோய் இல்லத்துக்குச் செல்ல வேண்டும், வேறு எந்த மையத்துக்கும் அல்ல'' என்று கூறினேன். இப்போது அவர் கொஞ்சம் கோபமாக பதில் அளித்தார். ``சாஹிப்களின் மையம் அங்கே தான் இருக்கிறது என்று நான் கூறினேன்'' என்று அவர் சொன்னார்.

மறுபடியும் அவரிடம் கேள்வி கேட்கும் தைரியம் எனக்கு இல்லை. அங்கு நாங்கள் சென்றபோது, பெரிய நுழைவாயில் இருந்தது. அங்கே ``1902ல் கட்டப்பட்டது, மகாராணி லட்சுமி தேவிக்கு இந்தக் கட்டடம் அர்ப்பணிக்கப் பட்டது'' என்று எழுதப் பட்டிருந்தது.

அடர்ந்த மரங்களின் நடுவே சாலை சென்றது. மூன்று சிறிய குடிசைகள் அங்கே இருந்தன. அருகில் மா மற்றும் பலா மரங்கள் இருந்தன. சில பெண்கள் வெட்டிய மாங்காய் துண்டுகளை நிழலில் உலர்த்திக் கொண்டிருந்தார்கள்.

பட மூலாதாரம், ASHOK PANDA/AFP/Getty Images

படக்குறிப்பு,

கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் இருந்த ஜீப் எரிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஷனரியான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் வாழ்வில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை செலவழித்த அதே தொழுநோய் இல்லம்தான் (தொழுநோய் தடுப்பு மையம்) இது.

1999 ஜனவரி 22 ஆம் தேதி மதியம் இங்கேதான் தொழுநோயாளிகளுடன் சேர்ந்து கிரஹாம் ஸ்டெயின்ஸ் தனது கடைசி மதிய உணவை சாப்பிட்டார்.

அன்றிரவு அருகில் கென்டுஜ்ஹர் மாவட்டத்தில் மனோகர்பூர் கிராமத்தில், கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பிலிப் (வயது 10), திமோதி (வயது 8) ஆகியோரை கலகக்கார கும்பல் ஒன்று ஸ்டெயின்ஸின் ஜீப்பில் வைத்து எரித்துக் கொன்றுவிட்டது.

``தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு, ஏழை ஆதிவாசிகளை கிரஹாம் ஸ்டெயின்ஸ் மதமாற்றம் செய்கிறார்'' என்று அந்தக் கும்பல் நம்பியிருந்தது.

பிறகு இதுகுறித்து புலனாய்வு செய்த வாத்வா ஆணையம், இந்தப் புகார்கள் எல்லாம் பொய்யானவை என அறிக்கை அளித்தது.

இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதற்குள், கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மகன்கள் கியோன்ச்ஹர் கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டிருந்தனர்.

பட மூலாதாரம், T.C. Malhotra/Getty Images)

படக்குறிப்பு,

1999ம் ஆண்டு டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி

நேரடி சாட்சிகள்

55 வயதான நிமய் ஹன்ஸ்டா எங்களுக்காக தொழுநோய் இல்லத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்தார். எங்களிடம் அவர் உணவு கேட்டார். ``ஏதாவது நடந்து விட்டதா'' என்றும் அவர் விசாரித்தார்.

``கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய மகன்கள் மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன'' என்று நான் கூறினேன்.

``அவர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். யாரும் எங்கேயும் போய்விடவில்லை. எங்களுடன் கிரஹாம் ஸ்டெயின்ஸ் வாழ்கிறார். எங்களைக் கவனித்துக் கொள்கிறார்'' என்று நிமய் பதிலளித்தார்.

பரிபடாவில் இந்த தங்கும் இல்லத்தில்தான் நிமய் பிறந்தார். அவருடைய பெற்றோருக்கு தொழுநோய் இருந்தது. அவர்களுக்கு ஸ்டெயின்ஸ் சிகிச்சை அளித்து வந்தார்.

``நான் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, கிரஹாம் கைகளால் என்னைத் தூக்குவார் என்று எனது தாயார் கூறியிருக்கிறார்'' என்று கண்ணீர் மல்க கூறினார் நிமய்.

``1999 ஜனவரி 22 ஆம் தேதி சாஹிப்கள் அரிசி சோறுதான் சாப்பிட்டனர். பிறகு நகரில் தேவாலயம் அருகே உள்ள அவருடைய வீட்டுக்கு நாங்கள் சென்றோம். நாங்கள் மனோகர்பூர் செல்ல வேண்டியிருந்தது. அவருடைய மகனும், மகளும் கூட அங்கே செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்கள். தாயாருடன் இருக்குமாறு மகளிடம் கூறிவிட்டு நாங்கள் இரண்டு ஜீப்களில் சென்றோம்'' என்று அவர் விவரிக்கிறார்.

மனோகர்பூரில் சிறிய தேவாலயம் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கிரஹாம் ஸ்டெயின்சும், அவருடைய மகன்களும் சென்றனர். நிகழ்ச்சி என்ற பெயரில் ரகசியமாக மதமாற்ற சம்பிரதாயங்கள் அங்கு நடப்பதாக, அவர்களைக் கொலை செய்தவர்கள் நினைத்திருப்பார்கள் போல தெரிகிறது.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு,

ஆயுள் தண்டனை பெற்ற தாரா சிங் (2003ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி எடுக்கப்படம்)

``இரவு உணவு முடிந்ததும் நாங்கள் ஒருவருக்கொருவர் இரவு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு தூங்கச் சென்றுவிட்டோம். கிரஹாமும், அவருடைய மகன்களும் பெரிய கொசு வலை ஒன்றை தொங்கவிட்டு, ஜீப்பிற்குள் தூங்கினார்கள். நான் வீட்டிற்குள் தூங்கினேன். இரவு 12 மணி அளவில் ஜீப்பை அடித்து நொறுக்கும் சப்தம் கேட்டது. நான் வெளியே வந்தபோது ஜீப்பை சுற்றி நிறைய பேர் இருந்து தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்'' என்று அவர் கூறினார்.

அவர்களை நெருங்கி, ஏன் தாக்குகிறீர்ரகள் என கேட்டதாக நிமய் தெரிவித்தார்.

``நான் அவ்வாறு கேட்டதும், அவனையும் சேர்த்து கொன்றுவிடுங்கள்'' என்று கூட்டத்தில் இருந்து ஒருவர் சப்தம் போட்டார் என்று நிமய் நினைவுகூர்ந்தார். அவர்கள் என்னையும் தாக்கத் தொடங்கினார்கள். நான் ஓடிச் சென்று தீயை அணைப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்தேன். என்னை மறுபடியும் தாக்கினார்கள். கிராமத்தினரை கூப்பிட்டு, இவர்களைக் காப்பாற்ற நான் முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள் டயர்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது'' என்று அவர் கூறினார்.

கிராம மக்கள் ஓடி வருவதற்குள் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய மகன்களுடன் ஜீப் எரிந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது.

அந்த நாட்களில் நிருபராக இருந்த கல்யாண் குமார் சின்ஹா இப்போது அகில இந்திய வானொலியின் செய்தியாளராக இருக்கிறார். அந்த துயர சம்பவம் நடந்த மறுநாள் காலையில் அங்கு சென்ற முதலாவது நபர் அவர்.

லேசான குளிர் நிலவிய அந்தக் காலைப்பொழுதை அவர் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். ``சம்பவ இடத்துக்கு நான் சென்றபோது அங்கு நிறைய பேர் இல்லை. டயர்கள் மற்றும் பெட்ரோல் எரிந்த வாடையால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் இருந்தது. கிரஹாம் மற்றும் அவருடைய மகன்கள் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது'' என்று அவர் கூறினார்.

கல்யாண் சின்ஹா செல்வதற்கு முன்னதாக கிரஹாமின் மனைவி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அங்கு சென்றுவிட்டார். சற்று தொலைவில் அவர் அமர்ந்து கொண்டு, ஆறுதல் படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தார்.

``கிளாடிசின் பொறுமையும் நிதானமும் இப்போதும் எனக்கு ஆச்சர்யம் தருவதாக உள்ளன. யார் இதைச் செய்தார்கள் என்று அவரிடம் நான் கேட்டபோது, - இதை யார் செய்திருந்தாலும் அந்த நபரை நான் மன்னிக்கிறேன். ஏனெனில் இதுதான் கடவுளின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கும் குணத்துடன் இருக்க வேண்டும் என்றும் கடவுள்தான் என்னை கேட்டுக் கொள்கிறார் என்று கூறினார்'' என கல்யாண் தெரிவிக்கிறார்.

சூழ்நிலை

கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலை தொடர்பாக பஜ்ரங் தள் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த ரவீந்தர் குமார் பால் என்கிற தாரா சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த கருணை மனுவின் அடிப்படையில் மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இப்போது கியோன்ச்ஹரில் ஒரு சிறையில் தாரா சிங் இருக்கிறார்.

போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்கள், அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப் பட்டார்கள்.

கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய மகன்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புலன்விசாரணை செய்த வாத்வா ஆணையம், கிரஹாம் மதமாற்ற செயல்களில் ஈடுபட்டார் என்ற புகார்களை நிராகரித்துவிட்டது. இந்தக் கொலைகளில் பஜ்ரங் தளத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அந்தக் ஆணையம் கூறியது.

கொடூரமான அந்தக் கொலைகள் நடந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், போலிச் செய்திகள் மற்றும் புரளிகளின் அடிப்படையில், இவ்வளவு கொடூரமாக திட்டமிட்டு கொலைகள் நடக்கலாம் என்பதற்கான முதலாவது சம்பவமாக இது இருக்கிறது.

இந்தியாவின் தேர்தல் வரலாறு - ஜனநாயகம் காலூன்றிய கதை

இந்தியாவில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய சம்பவமாக மட்டுமல்லாமல், உலகையே உலுக்கிய சம்பவமாகவும் அது அமைந்துவிட்டது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள, பசுவதை மற்றும் மாடுகளை கொண்டு செல்வதைத் தடுப்பது என்ற பெயரில், பொது இடங்களில் நடைபெறும் கொலைகளைப் போன்ற அச்சமூட்டும் சம்பவமாக அது இருந்தது.

கிரஹாம் ஸ்டெயின்ஸ் சம்பவத்தில் போலிச் செய்திகளும், புரளிகளும் எப்படி முக்கிய பங்கு வகித்தனவோ, அதேபோல பசுக் கண்காணிப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளும், உண்மையற்ற தகவல்களின் அடிப்படையிலேயே நடந்துள்ளன.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், வாட்ஸப், சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், உணர்ச்சிகளைத் தூண்டும் புரளிகள்தான் வன்முறையைத் தூண்டும் காரணிகளாக இருந்தன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :