நரேந்திர மோதி, ‘நான் பதானின் மகன்’ என்று கூறினாரா? #BBCFactCheck

  • உண்மை கண்டறியும் குழு
  • பிபிசி
நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி தன்னை பதானின் மகன் என்றி விளிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக வருகிறது.

பத்து நொடிகள் நீளம் கொண்ட அந்த காணொளி காட்சியில், "நான் பதானின் மகன். நான் உண்மையைதான் பேசுவேன்; உண்மையைதான் செய்வேன்" என்று கூறுவதாக நீள்கிறது.

அந்த காணொளியின் தலைப்பாக, "நான் பதானின் மகன். காஷ்மீரில் ஒரு கூட்டத்தில் மோடிஜி. அவர் இந்து என நிரூபிக்க பக்தர்கள் தீவிரமாக முயற்சிக்கிறார்கள்" என்பதாக விவரிக்கப்பட்டிருந்தது.

அந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரம் கணக்கான முறை பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு இருக்கிறது.

தவறான குற்றச்சாட்டுகளுடன் அந்த காணொளி பகிரப்பட்டு இருப்பது எங்கள் ஆய்வில் கண்டுபிடித்தோம்.

உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

தவறான நோக்கத்துடன் இந்த காணொளி தொகுக்கப்பட்டு, தவறான செய்தியை பரப்புவதற்காக இந்த காணொளி பகிரப்பட்டு இருக்கிறது.

இவ்வாண்டு ராஜஸ்தானில் பிப்ரவரி 23ஆம் தேதி விஜய் சங்கல்ப் கூட்டத்தில் மோதி ஆற்றிய உரையிலிருந்து சில காட்சிகள் மட்டும் வெட்டப்பட்டு பகிரப்பட்டு இருக்கிறது.

ராஜஸ்தானில் நடந்த கூட்டத்தின் முழு காணொளி பி.ஜே.பியின் யூ-ட்யூப் பக்கத்தில் கிடைக்கிறது.

அவர் என்ன கூறினார்?

"பாகிஸ்தான் புதிய அரசை அமைத்துள்ளது. நெறிமுறைகளின்படி அந்நாட்டின் புதிய பிரதமருக்கு வாழ்த்து சொல்வதற்காக அழைத்தேன். ஒரு கிரிக்கெட் வீரராக மக்களுக்கு அவரை தெரியும். நான் அவரிடம், இந்தியாவும் பாகிஸ்தானும் போதுமான அளவுக்கு போரிட்டுவிட்டது. பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அனைத்து போரிலும் நாங்களே வென்றோம். இது தொடரவும் செய்யும்" என்றேன்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை குறிப்பிட்டு, மோதி, "நீங்கள் விளையாட்டு உலகத்திலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். வாருங்கள், வறுமை, கல்வியறிவின்மைக்கு எதிராக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து சண்டையிடுவோம் என்றேன். அதற்கு அவர், 'மோதிஜி, நான் பதானின் பிள்ளை. நான் உண்மையை பேசுவேன். சரியானதை செய்வேன்' என்றார். அவர் சொல்லிய வார்த்தைகளை காப்பாற்றுகிறாரா என்பதை நாம் பார்ப்போம்" என்றார்.

புல்வாமா தாக்குதலில் பிப்ரவரி 14அம் தேதி 40 இந்திய வீரர்கள் பலியாகினர். இதன் பின்னணியில் மோதி ராஜஸ்தானில் அவ்வாறாக பேசினார்.

இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டுமென பாகிஸ்தானை இந்திய அரசு கோரியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :