உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் - 4 முக்கிய கேள்வி பதில்கள்
- திவ்யா ஆர்யா
- பிபிசி

பட மூலாதாரம், Reuters
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் சுமத்தியுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை உதவியாளர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் இந்த நீதிபதிகள் குழு தமது விசாரணையைத் தொடங்கும். இது துறை ரீதியான விசாரணையாகவே இருக்கும்; நீதிமன்ற விசாரணையாக இருக்காது.
இந்த விவகாரம் குறித்த நான்கு முக்கிய கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்.
முதல் கேள்வி - குழுவின் உறுப்பினர்கள் யார்?
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜீ ஆகியோர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ரஞ்சன் கோகாய்க்கு கீழ் பணியாற்றுபவர்கள்.
2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் தீர்வுக்கான சட்டம் இந்த வழக்குகள் எவ்வாறு விசாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கிறது.
பணி இடங்களில் இத்தகைய செயல்களில் ஒருவர் ஈடுபட்டால், அந்தந்த நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும். நிறுவனத்தின் உரிமையாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு வெளியில் உள்ள உள்ளூர் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
இந்த உள் விசாரணைக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் தலைமை நீதிபதியின் கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ள பெண் வலியுறுத்துகிறார்.
இரண்டாவது கேள்வி - குழுவின் தலைவர் யார்?
பத்து அல்லது அதற்கு மேலான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவங்களின் பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் விசாரணைக் குழு, அந்த நிறுவனத்திலேயே மூத்த பெண் ஊழியர் தலைமையில் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம்.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் தலைவராக ஆண் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையேற்று விசாரிக்கும் பொறுப்பை அவருக்கு வழங்கியவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரஞ்சன் கோகாய்.
மூன்றாவது கேள்வி - குழுவில் எத்தனை பெண்கள்?
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் தீர்வுக்கான சட்டத்தின்படி குழுவில் குறைந்தது சரிபாதிப் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
பட மூலாதாரம், www.sci.gov.in
நீதிபதி இந்திரா பானர்ஜீ
தற்போது அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகள் குழுவில் மூன்றில் ஒருவரே பெண்.
ஓரே பெண் என்பது மட்டுமல்லாது நீதிபதி இந்திரா பானர்ஜீ, மற்ற இரண்டு நீதிபதிகளையும்விட பணி மூப்பில் இளையவர்.
நான்காவது கேள்வி - சுயாதீன பிரதிநிதித்துவம் உள்ளதா?
சட்டப்படி உள் விசாரணைக் குழுவில் ஒருவராவது அந்த நிறுவனத்தைச் சேராத, பெண்ணுரிமை செயற்பாட்டாளராக இருக்க வேண்டும்.
சுதந்திரமான விசாரணையை உறுதி செய்யவே இந்த சட்டபூர்வ ஏற்பாடு உள்ளது.
தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் குழுவில், சுயாதீனமாக இயங்கும் வெளியாள் யாரும் இல்லை.
'ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போலி புகார்'
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராகப் போலியான பாலியல் புகார் கூறி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமக்கு 1.5 கோடி ரூபாய் வழங்க ஒரு நபர் முன்வந்ததாக உத்சவ் பைன்ஸ் எனும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்தப் புகார் மூலம் அவரைப் பதவி விலக வைப்பதே தமக்குப் பணம் கொடுக்க முன் வந்தவர்களின் நோக்கம் என்று அவர் கூறியிருந்தார்.
உத்சவ் பைன்ஸ் தெரிவித்த புகார் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தம்மிடம் இருந்த தகவல்களை சீலிடப்பட்ட உறையில் அவர் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்