டிக்டாக் செயலி மீதான தடை நீக்கம்: நிபந்தனைகளை பின்பற்ற உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

டிக்டாக்

பட மூலாதாரம், Getty Images

டிக் டாக் செயலியை பயன்படுத்தவும், அந்த செயலியின் காணொளிகளை ஊடகங்கள் பயன்படுத்தவும் இருந்த தடையை இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது என டிக்டாக் செயலி நிறுவனத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆபாசமான காணொளி, குழந்தைகள் மற்றும் பெண்களை அவமதிக்கும் விதமான காணொளிகள் போன்றவை சமூக சீர்கேட்டுக்கு வித்திடுகிறது என்ற புகாருடன் வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த மாதம் வழக்கு தொடுத்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தரம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின்போது, ஆபாசமான காணொளிகளை, மோசமான காணொளிகள் பரவாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை விதித்து உயர்நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது என டிக்டாக் செயலிக்காக வாதாடிய வழக்கறிஞர் ஐசாக் மோகன்லால் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

''டிக்டாக் செயலி மீதான தடையை நீதிபதிகள் நீக்கியுள்ளனர். டிக்டாக் காணொளிகளை ஊடகங்கள் பயன்படுத்த இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் பாதுகாப்பு அம்சங்களை விளக்கினோம். எதிர்மறையான காணொளி அல்லது வெறுப்பை தூண்டும் காணொளிகள் இருந்தால், முதலில் தானாக அந்த காணொளிகளை நீக்குவதற்காக முறையை டிக்டாக் இன்-பில்ட்டாக கொண்டுள்ளது. அதனை தாண்டி வைரலாக பரவும் காணொளிகளில் பிரச்சனை இருந்தால், அதை நீக்க நிபுணர்களை கொண்ட மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் செயல்படும் என்பதால், மோசமான காணொளிகள் பரவ வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டதும் தடையை நீதிபதிகள் நீக்கினர்,''என ஐசாக் மோகன்லால் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் மார்ச் மாதம் நீதிமன்றம் விதித்த தடையை அடுத்து சுமார் ஆறு மில்லியன் காணொளிகளை டிக்டாக் நீக்கியது என்றும் 13 வயது நிரம்பியவர்கள் மட்டுமே டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றியுள்ளதாகவும் ஐசாக் மோகன்லால் நீதிபதிகளிடம் கூறினார்.

இதனைதொடர்ந்து நிபந்தனைகளுடன் டிக்டாக் செயலி செயல்பட அனுமதி வழங்கப்பட்டது என மோகன்லால் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :