ஃபனி புயல்: தமிழகம், புதுவையில் 115 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

கனமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 28ம் தேதி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். அடுத்த இரண்டு நாட்களில் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாள்களில் அது புயலாக மாறக்கூடும் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவகும் புயல் எங்கு கரையை கடக்கும் என்பதை தற்போது கூறமுடியாது என்றும் தற்போதைய உறுதிப்படுத்தப்பட்ட விவரங்களின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

புயல் மற்றும் கனமழை காரணமாக ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்கிழக்கு பகுதிக்கு செல்லவேண்டாம் என்றும், ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் தென்மேற்கு பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :