மதுரை ஆட்சியர் மாற்றம்: வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த பெண்: மதுரை ஆட்சியர் மாற்றம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த பெண்: மதுரை ஆட்சியர் மாற்றம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டவர் சு. வெங்கடேசன்.

சென்னை உயர்நீதி மன்றத்தில்அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாம், மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளுக்குள் பெண் தாசில்தார் சம்பூரணம் உள்பட 4 அதிகாரிகள் சட்டவிரோதமாக கடந்த 20-ந் தேதி சென்று சில ஆவணங்களை நகல் எடுத்துள்ளனர்.

எனவே, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும். ஓட்டுகள் எண்ணும் மையத்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கவும், தாசில்தார் மையத்துக்குள் சென்றது குறித்து முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாக அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் ராஜகோபால், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், "மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.

ஆனால், இந்த அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கலெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார். மேலும், மதுரை கலெக்டர் நடராஜனை அப்பதவியில் இருந்து மாற்றி விட்டு, அதற்கு பதில் எஸ்.நாகராஜனை கலெக்டராக நியமித்துள்ளதாகவும், அதேபோல, புதிய உதவி தேர்தல் அதிகாரியாக சாந்தகுமார் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை பதிவு செய்துகொள்கிறோம். அதே நேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை முன்னாள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்." என்று உத்தரவிட்டுள்ளனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் வழக்கு: விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ'

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் வழக்கில் சி.பி.ஐ விசாரணையை தொடங்கியது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சனிக்கிழமை முதல் விசாரணையை தொடங்கி உள்ளது சிபிஐ. இந்த வழக்கை ஊழல் தடுப்பு சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் கே.விஜயா வைஷ்ணவி விசாரிக்கிறார்.

வீடியோவை பரப்பியதாகவும் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்னமராவதி கலவரம்: அவதூறு ஆடியோ பதிவில் பேசியவர் திருச்சி விமான நிலையத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கலவரத்தை ஏற்படுத்திய அவதூறு ஆடியோ விவகாரம் தொடர்புடைய முக்கிய நபரை போலீஸார் நேற்று திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறாகவும் இருவர் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த ஆடியோவில் இடம் பெற்ற இருவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஏப்.19-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல் துறைக்குச் சொந்தமான 6 வாகனங்கள், சில கடைகள் உடைத்து சேதப்படுத்தப் பட்டன. கல்வீச்சில் 3 போலீஸார் காயமடைந்தனர். இதேபோன்று, புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.பொன்னமராவதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 2,000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அவதூறு ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவதூறு ஆடியோவை பதிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காட்டைச் சேர்ந்த க.செல்வகுமார் (34), 2 நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமானம் நிலையத்தில் வந்திறங்கியபோது பொன்னமராவதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியதாக பட்டுக் கோட்டை அருகே உள்ள பள்ளி கொண்டானைச் சேர்ந்த எஸ்.வசந்த்(30) என்பவரும் கைது செய் யப்பட்டார். இருவரும் திருமயம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு(ஏப்ரல் 26) ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், செல்வக்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரை அடுத்த நெருஞ்சிப் பட்டியைச் சேர்ந்த மு.சத்தியராஜ்(30) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர், அவதூறு ஆடியோவில் பதிவில் பேசிய இருவரில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ் திசை

தினமணி: சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற 200 அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்

இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த 200 உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு வருகின்றன என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

அமெரிக்க-இந்திய திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புக்கான ஆலோசனைக் குழு (யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப்) என்ற அந்த அமைப்பின் தலைவர் முகேஷ் அகி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கருதுகின்றன. அந்த நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து எங்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றன. அந்த முதலீடுகளைக் கவர்வதற்காக, இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு சில சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. மேலும், முடிவுகளை எடுப்பதில் வெளிப்படையான நடைமுறைகளை அமல்படுத்த வேண்டியுள்ளது. அதாவது, அமெரிக்க நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவது முதல் வரி விதிப்பு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்கினால், அதிக அளவு வேலை வாய்ப்புகள் உருவாகும்" என்றார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :