நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் நான்காவது கட்ட வாக்குப்பதிவு

(கோப்புப்படம்) படத்தின் காப்புரிமை Yawar Nazir
Image caption (கோப்புப்படம்)

மொத்தம் ஏழு கட்டங்களை கொண்ட இந்திய மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களிலுள்ள 72 தொகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த 11ஆம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 91 தொகுதிகளிலும், 18ஆம் தேதி தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களிலுள்ள 95 தொகுதிகளிலும், கடந்த கடந்த 23ஆம் தேதி நடந்த மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்தது.

மூன்று கட்ட வாக்குப்பதிவின் முடிவில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 303 தொகுதிகளின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதாவது, மகாராஷ்டிராவிலுள்ள 17 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்திலுள்ள 13 தொகுதிகளிலும், ராஜஸ்தானிலுள்ள 13 தொகுதிகளிலும், மேற்குவங்கத்திலுள்ள 8 தொகுதிகளிலும், மத்தியப்பிரதேசம், ஒடிஷாவிலுள்ள தலா 6 தொகுதிகளிலும், பீகாரிலுள்ள 5 தொகுதிகளிலும், ஜார்கண்டிலுள்ள 3 தொகுதிகளிலும், ஜம்மு & காஷ்மீரிலுள்ள ஒரு தொகுதியிலும் என மொத்தம் ஒன்பது மாநிலங்களிலுள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முந்தைய வாக்குப்பதிவுகளை போன்றே இன்றைய தேர்தலும் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடக்கிறது.

படத்தின் காப்புரிமை Yawar Nazir
Image caption (கோப்புப்படம்)

இன்று நடைபெற்று வரும் நான்காவது கட்ட வாக்குப்பதிவுடன், மகாராஷ்டிராவில் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் முடிவுக்கு வருகின்றன.

நட்சத்திர வேட்பாளர்கள்

இன்று மொத்தம் 9 மாநிலங்களிலுள்ள 72 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 961 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவை பொறுத்தவரை, பாஜகவின் முக்கிய வேட்பாளர்களாக தற்போதைய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சுபாஷ் பாம்ரே, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் உள்ளனர்.

முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது மத்திய அமைச்சர்களாக இருந்த சல்மான் குர்ஷித், அதிர் ராஜன் சௌத்ரி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

இதை தவிர்த்து, கன்னையா குமார் (சிபிஐ), பைஜயந்த் (பாஜக), ஊர்மிளா (காங்கிரஸ்), உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), சதப்தி ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), மிலிந்த் தியோரா (காங்கிரஸ்) போன்றோர் களம் காணும் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துள்ள நிலையில், ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு வரும் மே 6ஆம் தேதியும், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 12ஆம் தேதியும், ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மே 19ஆம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டு, மே மாதம் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்