குஜராத் விவசாயிகளிடம் பெப்சிகோ கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்பது ஏன்?

உருளைக்கிழங்கு படத்தின் காப்புரிமை PARESH PADHIYAR

அமெரிக்க நிறுவனமான பெப்சிகோ இந்தியா, குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகள் விதை காப்புரிமையை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான லேஸ் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு ரகத்திற்கு பிரத்யேக காப்புரிமையை வைத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

தங்களுடைய அனுமதி பெறாமல் இந்திய விவசாயிகள் இந்த ரக உருளைக்கிழங்கை சாகுபடி செய்ய முடியாது என்று உரிமைகோரும் பெப்சிகோ, விவசாயிகள் மீது இந்தியாவில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

விவசாயிகள் மீது வழக்கு தொடுத்திருப்பதற்கு விவசாய சங்கங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாயிகள் மீது பெப்சிகோ வழக்கு தொடுத்தது தவறு என்பது அவர்கள் வாதம்.

190க்கும் அதிகமான செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனமான பெப்சிகோ, விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சொல்வது என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

பெப்சிகோ நிறுவனத்திடம் இது தொடர்பாக பிபிசி கேட்ட கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் வந்தது. "நிறுவனத்தின் உரிமையை பாதுகாப்பதற்காக வழக்கு தொடுக்கப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெப்சிகோ இண்டியா ஹோல்டிங் பிரைவெட் லிமிடெட் என்ற அந்த நிறுவனம், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாளன்று எஃப்.எல்2027 ரக உருளைக்கிழங்கு விதைக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த பிரத்யேக காப்புரிமை 2031 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும்.

விவசாயிகளின் கருத்து என்ன?

படத்தின் காப்புரிமை AFP/GETTY

2018 இல் ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து விவசாயிகள் எஃப்.எல் 2027 ரக விதையை பயன்படுத்தியதாக மோடாசா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த ஐவரில் ஒருவர் வக்த்புர் கிராமத்தை சேர்ந்த ஜிகர் படேல்.

பிபிசியிடம் பேசிய ஜிகர் படேல், பரம்பரை பரம்பரையாக தனது குடும்பத்தினர் இரண்டு பீஹா அளவிலான நிலத்தில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்து வருவதாக குறிப்பிட்டார் அவர். அனுமதி பெறாமல் எஃப்.எல் 2017 ரக விதையை பயன்படுத்தியதாகவும், அதற்காக 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார். இதுவரை 11 முறை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகியிருப்பதாகவும், தற்போது மே மாதம் அடுத்த விசாரணை இருப்பதாகவும் தெரிவித்தார் ஜிகர் படேல்.

கடந்த ஆண்டு பெப்சிகோ வழக்கு தொடுத்த பிற நால்வரில் ஒருவர் ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீது படேல். தாங்கள் நான்கு பேரும் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெப்சிகோ நிறுவனம் வழக்கு தொடுத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

முகவர்கள் மூலமாக உருளைக்கிழங்கு விவசாயிகள் பெப்சிகோ நிறுவனத்திற்காக சாகுபடி செய்யும் திட்டத்தில் இணைந்துள்ளனர். தனது சகோதரரும் அந்த நிறுவனத்திற்காக உருளைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறார் என்றும், நிறுவன அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது, சகோதரரின் வயலில் தானும் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால் சில நாட்கள் கழித்து, தன்னிடம் இழப்பீடு கோரி பெப்சிகோ வழக்கு தொடுத்தது அதிர்ச்சியளித்ததாக ஜீது படேல் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை SHAILESH CHOUHAN

தங்கள் குடும்பம் நான்கு ஏக்கர் நிலத்தில் பெப்சிகோ நிறுவனத்திற்காக உருளை சாகுபடி செய்வதாக ஜீது தெரிவிக்கிறார்.

தற்போது பெப்சிகோ நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கும் சாபர்காண்டாவில் படாலி மாவட்ட விவசாயிகளிடம் பிபிசி பேசியது. ஆனால் இந்த விவகாரம் பற்றி பேச அவர்கள் மறுத்துவிட்டனர்.

பல்வேறு இடங்களில் இருந்து விதைகளை வாங்கும் பழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு, விதையின் ரகம் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் சாதனங்கள் இல்லை என்று ஜிகர் கூறுகிறார்.

"பலவிதமான உருளைக் கிழங்குகளில் வித்தியாசமே இருக்காது என்ற நிலையில் எந்த உருளைக்கிழங்கின் விதை எந்த ரகத்தை சேர்ந்தது என்பதை தெரிந்துக் கொள்வது எப்படி?" என்று கேட்கிறார்.

நிறுவனம், விவசாயிகள் மீது வழக்கு தொடுக்க முடியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய விவசாய சங்கத்தின் தேசியத் தலைவர் அம்பு பாயி படேலின் கருத்துப்படி, "பெப்சிகோ இண்டியா, எஃப்.எல் 2027 ரக விதைக்கு சிறப்பு காப்புரிமை பெற்றிருப்பதாக கூறுவது சரியானதல்ல. விவசாயிகள் பல இடங்களில் இருந்து விதைகளை வாங்குகின்றனர். இந்த நிலையில் நிறுவனம் எப்படி அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கோர முடியும்? சிறு மற்றும் குறு விவசாயிகளால் அவர்களுக்கு நட்டம் ஏற்படுவதாக சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?"

ஜதின் அறக்கட்டளையின் கபில் ஷா இவ்வாறு சொல்கிறார், "Protection of Plant Variety and Farmers Right Act சட்டத்தின் கீழ், இந்திய விவசாயிகள் விதைகள் பயன்படுத்தும் விஷயத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்."

190க்கும் அதிகமான சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், Protection of Plant Variety and Farmers Right Act சட்டத்தின் பிரிவு 64ஐ, தாங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் 64ஆம் பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட அல்லது காப்புரிமை செய்யப்பட்ட ரக விதையை, அனுமதியின்றி விற்பதோ, சாகுபடி செய்வதோ சட்டத்தை மீறும் செயல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால் இதே சட்டத்தின் 39(4) பிரிவில் விதையை விவசாயி சேமித்து வைக்கலாம். விதை உற்பத்தி செய்யலாம், சாகுபடி செய்யவும் பயன்படுத்தலாம், கொடுக்கலாம், வாங்கலாம், காட்சிப் படுத்தலாம், விளைவிக்கும் பயிரை விற்பனையும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விவசாய நிபுணர் தேவேந்திர ஷர்மா, காப்புரிமை பெற்ற விதையை பயிரிட்டு விற்பனை செய்யக்கூடாது என்று சொல்கிறார்.

நிறுவனத்தின் விருப்பம் என்ன?

ஏப்ரல் 26ஆம் தேதியன்று வணிக நீதிமன்றத்தில் சாபர்காண்டா விவசாயிகள் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பெப்சிகோ நிறுவனம் சில நிபந்தனைகளை முன்வைத்தது. தங்கள் விதை ரகத்தை பயன்படுத்த மாட்டோம் என்று வழக்கை எதிர்கொள்ளும் விவசாயிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். விதையை பயன்படுத்த விரும்பினால், நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதே அவர்களின் சமாதான பேச்சின் சாராம்சம்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிறுவனத்தின் தரப்பு யோசனைகளைப் பற்றி யோசித்து பதில் சொல்வதாக விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த்வர்தன் யாக்ஞானிக் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய லேஸ் சிப்ஸ் தயாரிப்பதற்கான உருளைக்கிழங்கு எங்கிருந்து வந்தது?

எஃப்.எல்.2027 ரக விதை அமெரிக்காவில் 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக சொல்கிறார் டீசா உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஆர்.என்.படேல். எஃப்.சி5 ரகம் என்று இது இந்தியாவில் அறியப்படுகிறது. பதப்படுத்துவதற்கு உகந்த உருளைக்கிழங்காக இந்த விதை ரகம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காணொளி:உவர் மண்ணில் விளையும் உருளைக்கிழங்கு வகை

பெப்சிகோ நிறுவனம், விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்கிறது. இதன்படி, நிறுவனம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட ரக விதையை கொடுக்கிறது. அதிலிருந்து சாகுபடி செய்யப்படும் உருளைக்கிழங்கு 40 முதல் 45 மி.மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது. கூகுள் காப்புரிமை தகவல்களின்படி, எஃப்.எல்2027 ரக விதையை கண்டறிந்தவர் ராபர்ட் ஹூப்ஸ். அமெரிக்காவில் 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் இங்க் என்ற பெயர் கொண்ட நிறுவனம் இந்த ரக விதைக்கு காப்புரிமை பெற்றது. அது 2023ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

எந்தவொரு விதைக்கும் காப்புரிமை பெறும்போது, அதற்கான உரிமை 20ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சொல்கிறார் டாக்டர் ஆர்.என்.படேல். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு யார் வேண்டுமானாலும் காப்புரிமை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :