திருநெல்வேலி கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்: கனத்த மழை, சூறைகாற்றால் உயிரிழந்த வெளிநாட்டு பறவைகள்

திடீர் சூறைகாற்றால் உயிரிழந்த வெளிநாட்டு பறவைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனத்த மழையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்த ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளத்தில் பறவைகள் சரணாலயத்தில், செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகள் அதிகம் வசிக்கின்றன. அத்துடன் சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான், கொக்குகள் என நீர்ப் பறவைகள் ஆண்டுதோறும் கூந்தங்குளத்திற்கு வருகை புரிகின்றன. மொத்தமாக 247 வகையான பறவை இனங்கள் இங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. வழக்கமாக ஜனவரி மாதத்தில் வரும் பறவைகள் ஆகஸ்ட் மாதம் வரையிலும் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து குஞ்சுப்பறவைகளுடன் தங்களின் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி மாலை வள்ளியூர், நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் கூந்தன்குளம் பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்ததில், சைபீரியா நாட்டை சேர்ந்த கூழைக்கடா வகையை சேர்ந்த 53 பறவைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன, 62 பறவைகள் சிறகுகள் மற்றும் கால்கள் முறிந்த நிலையில் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

இதையடுத்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் உதவி இயக்குநர் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த பறவைகளை பார்வையிட்டார். கால்நடை மருத்துவ குழுவின் உதவியுடன் காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காற்று மழையில் சிக்கி நூற்றுகணக்கான பறவைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்

கூந்தங்குளத்தில் ஊரின் உள்ளே உள்ள மரங்கள் தவிர, அதிகம் பறவைகளைக் காணக்கூடிய இடம் 30 ஹெக்டேர் பரப்புக் கொண்ட குளம். மணிமுத்தாறு கால்வாய் மூலம் நீரைப் பெறும் இந்தக் குளத்தில் நீர்க்கருவை மரங்கள் நிறைந்திருக்கின்றன. இங்குதான் கூழைக்கடாக்கள் கூடமைக்கின்றன. பொதுவாக ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள் பறவைகள் வரும் பருவம் என்று கருதப்பட்டாலும், கடுமையான வெயிலடிக்கும் மே மாதங்களில்கூடக் கூந்தங்குளம் குளத்தில் தண்ணீரையும் பறவைகளையும் காண முடியும்.

சைபீரியா, ஜெர்மனி, லடாக் பகுதிகளில் இருந்தும், நாட்டின் இதரப் பகுதிகளில் இருந்தும் குளிர்காலத்தில் இந்தச் சரணாலயத்துக்குப் பறவைகள் வலசை வருகின்றன. தென்னிந்தியாவின் மிகப் பெரிதான இந்த நீர்ப்பறவை சரணாலயத்துக்கு, ஓராண்டில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பறவைகளும், 43 வகைகளும் வந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூந்தங்குளத்தில் அதிகம் பார்க்கக்கூடிய பறவைகள் மஞ்சள்மூக்கு நாரைகளும், நத்தைகுத்தி நாரைகளும். இவற்றைத் தவிர கூழைக்கடா, பூநாரைகள் ,நீர்க்காகங்கள், பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, உள்ளிட்ட நீர்ப்பறவைகளும் குறிப்பிடத்தக்க அளவு வருகை தருகின்றன. அந்த ஊர் மக்கள் பறவைகளைத் தொல்லையாக நினைக்கவில்லை. பறவைகள் எழுப்பும் சப்தங்கள், இடும் எச்சம், கூட்டிலிருந்து தவறி விழும் மீன், நத்தை போன்ற அவற்றின் உணவு, பறவைக் கூடுகளில் இருந்து இயல்பாகவே வரும் ஒருவித துர்நாற்றம் போன்ற அனைத்தையும் இந்த மக்கள் தொந்தரவாகவே எடுத்துக்கொள்வதில்லை.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பறவை மனிதர் என அழைக்கபடும் பால் பாண்டி 'கிட்டத்தட்ட 300 வருடங்களாக எங்கள் ஊருக்கு பறவைகள் வரத்து அதிகமாக இருக்கிறது. பறவைகள் வந்தால் மழை பெய்யும். ஊர் செழிப்பாக இருக்கும் என்பது எங்கள் ஊர் மக்களிடம் உள்ள பாரம்பரிய நம்பிக்கை' எங்கள் கிராமத்துக்குள் மட்டும் சுமார் 4,000 பறவைக் கூடுகள் இருக்கின்றன.

'கூந்தன்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. அதனால் தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். பறவைகள் வாழும் குளத்துக்கு தண்ணீர் வேண்டுமென்றால், பாசனத்துக்கான தண்ணீரைக்கூட அடைத்துவிடுவார்கள். 'அதேநேரம் குளத்தில் பறவை எச்சம் விழுவதால், அது இயற்கை உரமாக மாறுகிறது. அந்தத் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சினால் அதிக மகசூல் கிடைத்து வந்தது,' ஆனால் நேற்று மாலை சுமார் நான்கு மணி நேரமாக அடித்த சூறைகாற்றால் மரங்கள் முறிந்ததில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பறவைகள் எங்கள் கண் முன்னே இறந்தது, மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சில பறவைகளை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக பறவகைள் இறந்தது எங்கள் கிராம மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறினார்.

இச்சம்பவம் குறித்து நாங்குநேரி வனசரகர் குமார் பிபிசி தமிழிடம் பேசினார், "தென் இந்தியாவில் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் மிகப்பெரிய சரணாலயம் ஆகும். கூந்தங்குளத்தை சுற்றி உள்ள நீர்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜெர்மனி, மங்கோலியா, நைஜீரியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். பொதுவாக பறவைகள், தை அமாவாசையில் கூடு கட்ட தொடங்கி, ஆடி அமாவாசையில் குஞ்சுகளுடன் தாய்நாட்டுக்கு திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்