இந்த அட்டைப் பெட்டிகளில் இருப்பது பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்களா? #BBCFactCheck

இந்த அட்டை பெட்டிகளில் இருப்பது பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்களா? படத்தின் காப்புரிமை Twitter

இறந்த ராணுவ வீரர்களின் சடலங்கள் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவ்வாறு பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில், "இவை குப்பை பெட்டிகள் அல்ல. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் கொல்லப்பட்ட காவல்துறையினரின் உடல்கள். இப்படித்தான் தேசியவாத கொள்கையை கொண்ட பாஜக நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. அவர்களின் ஒரே நோக்கம் இதுபோன்ற நிகழ்வுகளை வாக்குகளுக்காக பயன்படுத்திக்கொள்வதே. நீங்கள் வாக்களிக்கும்போது இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலீஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

30 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ மூட்டியதையடுத்து, சம்பவ இடத்துக்கு அம்மாநில காவல்துறையின் அதிவிரைவு படையினர் சென்றபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களை அவமதித்து விட்டதாக குற்றஞ்சாட்டும் வகையில் இந்த தகவல் பரப்பப்பட்டது.

ஆனால், இந்த புகைப்படம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரியவந்துள்ளது.

கட்சிரோலியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மாநில அரசின் சார்பில் முறைப்படி மரியாதையை செலுத்தப்பட்டது.

உயிரிழந்த மகாராஷ்டிர காவல்துறையின் சி60 கமாண்டோ படையை சேர்ந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும் நிகழ்வை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதை போன்று, உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்கள் அட்டை பெட்டிகளில் சுற்றிவைக்கப்படவில்லை.

புகைப்படத்தின் உண்மைத்தன்மை

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் புகைப்படம் குறித்து இணையத்தில் தேடியபோது, அது 2017ஆம் ஆண்டு தவாங் விமான விபத்தில் உயிரிழந்த ஏழு ராணுவ வீரர்களின் புகைப்படம் அது என்பது தெரியவந்துள்ளது.

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் என்னும் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

அந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அட்டை பெட்டிகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் தவறான நிகழ்வுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அச்சமயத்தில் பல்வேறு ஊடகங்கள் மற்றும் தலைவர்கள் சார்பில் செய்தியும், இரங்கலும் வெளியிடப்பட்டன.

இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள், பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உள்ளிட்டோர் ராணுவ வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த விதம் குறித்து ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள்.

இந்த விவகாரம் பெரிதாகவே, இராணுவத்தின் தரப்பில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உள்ளூரில் இருக்கும் வசதியை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்படுவதாகவும், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து மரியாதைகளும் உறுதிசெய்யப்படும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்