வேறு சாதி இளைஞனை திருமணம் செய்ததற்காக மகளை கொன்ற தலித் தந்தை

மங்கேஷ்-ருக்மணி
Image caption மங்கேஷ்-ருக்மணி

19 வயது ருக்மணி ரான்சிங் 6 மாதம் முன்புதான் தான் காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்டார்.

அந்த இளைஞன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் ருக்மணியின் பெற்றோரும் உறவினர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆத்திரம் கொண்ட ருக்மணியின் தந்தையும், மாமாவும், சித்தப்பாவும் சேர்ந்து ருக்மணியையும், அவரது கணவனையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

தமது குடும்பத்தின் கோபத்துக்கு தமது உயிரையே பலி கொடுத்துள்ளார் ருக்மணி.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பார்னர் வட்டத்தில், நிகோஜ் என்ற சிற்றூரில் ஆணவக் கொலை என்னும் இந்தக் கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது.

ருக்மணியும் மங்கேஷ் ரான்சிங்கும் ஆறு மாதம் முன்பு திருமணம் செய்துகொண்டனர். ருக்மணியின் தந்தையும் உறவினர்களும் எதிர்த்தனர்.

ரான்சிங் பிற்படுத்தப்பட்ட லோஹர் (இரும்படிக்கும் கருமார் சமூகம்) சாதியை சேர்ந்தவர். ருக்மணியின் குடும்பம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்து மகாராஷ்டிரத்தில் குடியேறியது. இவர்கள் 'பாசி' என்ற தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்று அகமதுநகர் போலீசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தார் வட இந்தியாவில் இருந்து வந்து மகாராஷ்டிரத்தில் குடியேறியவர்கள்.

படத்தின் காப்புரிமை BBC/NitinNagardhane

ஆனால், மங்கேஷ் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ருக்மணி தரப்பில் அவரது தாய் மட்டும் திருமணத்தில் பங்கேற்றார் என்று ருக்மணியின் மைத்துனர் மகேஷ் ரான்சிங் பிபிசி மராத்தியிடம் கூறினார்.

"திருமணத்துக்குப் பிறகும் ருக்மணியின் உறவினர்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடவில்லை. ருக்மணியும், மங்கேஷும் தெருவில் எதிரில் வரும்போதெல்லாம் அவர்கள் மிரட்டினார்கள். இந்த மிரட்டல்களால் அஞ்சிய ருக்மணியும், மங்கேஷும் பார்னர் காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் ஒரு புகார் பதிவு செய்தனர்" என்கிறார் மகேஷ்.

இந்த பதற்றமான நிலையில், ருக்மணியின் பெற்றோர் அவரை ஏப்ரல் 30-ம் தேதி தங்கள் வீட்டுக்கு அழைத்தனர். இந்த அழைப்பை ஏற்று ருக்மணி அங்கு சென்றபோது அவர்கள் அவரை அடித்தனர். நள்ளிரவு நேரம் ருக்மணி தம் கணவர் மங்கேஷை அழைத்து தமது பெற்றோர் தம்மை அடித்ததை கூறி, தம்மை வந்து அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.

அடுத்த நாள், மே 1ம் தேதி மங்கேஷ் ருக்மணியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது ருக்மணியின் சித்தப்பாவும், மாமாவும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்தனர். ருக்மணி - மங்கேஷ் இருவரையும் அவர்கள் தாக்கினர். இருவரையும் கட்டிவைத்து அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். புதுமணத் தம்பதியான அவர்கள் இருவரும் உயிரோடு எரிந்துகொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கதவை சாத்திவிட்டு வெளியில் காத்திருந்தனர்.

எரிந்துகொண்டிருந்தவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கம் வீட்டார் ஓடிவந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்து கடும் தீக்காயம் அடைந்திருந்த ருக்மணி - மங்கேஷ் இருவரையும் புனே சசூன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

60-65 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்த ருக்மணி சில ஐந்து நாள்கள் உயிருக்குப் போராடியபின் மே 5-ம் தேதி உயிரிழந்தார்.

Image caption மகேஷ்

40-45 சதவீதம் தீக்காயம் அடைந்த மங்கேஷ் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது என்கிறார் சசூன் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் அஜய் தவாரே.

இது குறித்து பார்னர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ருக்மணியின் மாமா கணஷியாம் மற்றும் சித்தப்பா சுரேந்திர பாபுலால்பாரதி என்கிற பில்லு பண்டிட் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ருக்மணியின் தந்தை ராம ராம்பால் பாரதியா தேடப்பட்டு வருகிறார்.

இருவரும் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடந்துவருகிறது என்று தெரிவித்தார் அகமதுநகர் - கிராமிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணீஷ் கல்வானியா.

போலீசின் பாராமுகத்தால் தங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார் ருக்மணியின் மைத்துனர் மகேஷ்.

படத்தின் காப்புரிமை BBC/NitinNagardhane

"ருக்மணியின் தாய்வீட்டார் மிரட்டுவதாக நிஹோஜ், பார்னர் காவல் நிலையங்களில் பிப்ரவரியில் புகார் பதிவு செய்திருந்தோம். இந்த கொடூர சம்பவம் நடப்பதற்கு முன்பாக கூட மிரட்டல்களைப் பற்றி மீண்டும் போலீசாரிடம் கூறினோம்" என்கிறார் மகேஷ்.

இந்த கொடூரத்துக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தாமதமில்லாமல் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதே மகேஷின் எதிர்பார்ப்பு இப்போது.

சாதி மறுப்பு காதல்

இப்படியான சூழலில், புனேவை சேர்ந்த ஒரு பெண் பாதுகாப்பு கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.

அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாம் மராத்தா சமூகத்தை சேர்ந்த 19 வயது பெண் என்றும் புனேவில் இரண்டாம் ஆண்டு சட்டம் பயில்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மடாங் சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்