"மோதியின் அரசை கலைக்க வாஜ்பேயி விரும்பினார்" - யஷ்வந்த் சின்ஹா

படத்தின் காப்புரிமை Getty Images

இந்து தமிழ்: "மோதியின் அரசை கலைக்க வாஜ்பேயி விரும்பினார்" - யஷ்வந்த் சின்ஹா

கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு 2002-ல் குஜராத்தில் பெரிய மதக்கலவரம் வெடித்த போது முதல்வர் நரேந்திர மோதியின் ஆட்சியை அப்போதைய பிரதமர் வாஜ்பேயி கலைக்க விரும்பினார், ஆனால் அதை அத்வானிதான் தடுத்து நிறுத்தினார் என்று முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பேட்டியளித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கட்சிக்குள் கூட்டம் நடந்தது. எனக்குக் கிடைத்த தகவல்களின் படி மோதி அரசை கலைத்தால் தான் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அத்வானி தெரிவித்துள்ளார். ஆகவே வாஜ்பேயி அந்த முடிவைக் கைவிட நேர்ந்தது, அதனால் மோதி தொடந்து முதல்வராக நீடிக்க முடிந்தது

பொருளாதார ரீதியாக நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அடுத்த அரசு 'உடைந்த பொருளாதார நிலைமைகளை' சந்திக்கும்.

ஒரு பிரதமர் எது பேசினாலும் அவரிடமிருந்து ஒரு கவுரவமான பேச்சையே எதிர்பார்க்கிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "நல்லகண்ணுக்கு அரசு குடியிருப்பில் வீடு"

படத்தின் காப்புரிமை Google
Image caption நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாகப் பேசி, அவருக்கு அரசு வீடு மீண்டும் ஒதுக்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பு வீட்டை காலி செய்ய அரசு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து நல்லகண்ணு அந்த வீட்டை காலி செய்து கே.கே. நகரில் வாடகை வீட்டுக்குச் சென்றுள்ளார். இது பலத்த சர்ச்சையாகி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாக நல்லகண்ணுவை சனிக்கிழமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது வீட்டை காலி செய்ய நேரிட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், வீடு ஒதுக்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்ற உறுதியையும் நல்லகண்ணுவிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ளார்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் கைது"

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை 'கியூ' பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"போலி பாஸ்போர்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் 'கியூ' பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்கள் அனைவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் சென்னை வந்து சென்றதும், அதன் தொடர்ச்சியாக 'கியூ' பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த தனூக ரோசன் என்பரையும் பூந்தமல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேரை 'கியூ' பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "நாடு முழுவதும் முடங்கிய ஸ்விகியின் சேவை"

படத்தின் காப்புரிமை Facebook

பிரபல உணவு பொருள் கொண்டுசேர்க்கும் சேவை நிறுவனமான ஸ்விகியின் சேவையில் நேற்று மாலை நாடு முழுவதும் பிரச்சனை ஏற்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"நேற்று (சனிக்கிழமை) மாலை முதல் தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஸ்விகி நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, பயன்பாட்டாளர்கள் இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தை எழுப்பினர்.

அதாவது, ஸ்விகி நிறுவனத்தின் செயலி வாயிலாக புதிதாக உணவு ஆர்டர் செய்ய முடியாத நிலையும், ஏற்கனவே ஆர்டர் செய்தவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகியும் உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :