"சி.ஆர்.பி.எஃப் சீருடைகளில் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டார்களா?" - சந்தேகம் எழுப்பும் மம்தா பானர்ஜி

"சி.ஆர்.பி.எப் சீருடைகளில் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டார்களா?" படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "சி.ஆர்.பி.எப் சீருடைகளில் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டார்களா?" - சந்தேகம் எழுப்பும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மக்களவைத் தேர்தலுக்காக, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மத்திய அரசு அனுப்பியிருக்கக் கூடும் என அம்மாநில முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்காக அதிக அளவிலான சிஆர்பிஎப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை பார்க்கும்போது, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களையே மத்திய அரசு அனுப்பியிருக்கும் என சந்தேகம் எழுகிறது.தேர்தலில் வெற்றி பெற எந்த நிலைக்கும் பாஜக இறங்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி: "சமூக சேவகர்களுக்கு வீடு ஒதுக்கீடு; விரைவில் புதிய கொள்கை முடிவு வெளியீடு"

படத்தின் காப்புரிமை Google
Image caption நல்லகண்ணு

சமூக சேவகர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான புதிய கொள்கை முடிவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த கொள்கை முடிவின் அடிப்படையில் மூத்த தலைவர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினர் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இடிக்கப்படக் கூடிய அவசியம் எழுந்ததாகவும், நல்ல முறையில் உள்ள குடியிருப்பு மாற்று ஒதுக்கீடாக விரைவில் அளிக்கப்படும் எனவும் துணை முதல்வர் தெரிவித்ததாக தமிழக அரசு கூறியுள்ளது

கக்கன் உள்ளிட்ட சமூக சேவகர்கள் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "இந்திய விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்"

படத்தின் காப்புரிமை Twitter

அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய விமானப்படைக்கு நவீன தாக்குதல் ரக ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் ஒப்படைத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் அந்த நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்க போயிங் முன்வந்தது. இந்த ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி இதில் முதல் ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் தற்போது இந்திய விமானப்படைக்கு வழங்கி உள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்துக்கு உட்பட்ட மேசா பகுதியில் அமைந்திருக்கும் போயிங் விமான உற்பத்திப்பிரிவில் வைத்து முறைப்படி இந்த தாக்குதல் ஹெலிகாப்டர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

'என் மகள்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டேன்' - அஃப்ரிடி

படத்தின் காப்புரிமை RIZWAN TABASSUM
Image caption அஃப்ரிடி

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி, சமூக மற்றும் மத ரீதியான காரணங்களை காட்டி வெளியரங்க விளையாட்டுகளில் தனது மகள்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"அன்ஷா, அஜ்வா, அஸ்மாரா மற்றும் அக்ஸா என்று அஃப்ரிடிக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

'கேம் சேஞ்சர்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அவரது சுயசரிதையில், ''பெண்ணியவாதிகள் எனது இந்த முடிவு குறித்து என்ன கருத்து வேண்டுமானாலும் கூறலாம்''என்று அஃப்ரிடி குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள் காட்டப்படுகிறது.

தனது மகள்கள் விளையாட்டுகளில் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அவர்களை தான் உள்ளரங்க விளையாட்டுகள் விளையாட மட்டுமே அனுமதித்து உள்ளதாக கூறியுள்ளார்.

''அஜ்வா மற்றும் அஸ்மாரா ஆகிய இருவரும் மிகவும் இளம் பெண்கள். உள்ளரங்க விளையாட்டுகளில் என் குழந்தைகள் தொடர்ந்து விளையாட எனது ஆதரவு உண்டு. ஆனால் கிரிக்கெட் போன்ற வெளியரங்க விளையாட்டுகள் என் மகள்களுக்கு வேண்டாம். பொதுவெளியில் விளையாடப்படும் வெளியரங்க விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்'' என்று அஃப்ரிடி மேலும் கூறியுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட அவரது சுயசரிதையில் தனது உண்மையான வயதை அஃப்ரிடி ஒப்புக்கொண்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், இந்த சுயசரிதையில், அஃப்ரிடி காஷ்மீர் பிரச்சனை குறித்து வெளியிட்ட விமர்சனம் மற்றும் 2010-இல் பாகிஸ்தான் வீரர்களை உள்ளடக்கி வெளிவந்த மேட்ச் ஃபிக்சிங் சூதாட்டம் குறித்து தனக்கு முன்பாகவே தெரியும் என்று கூறியது போன்றவை கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்ததை அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்