மு.க. ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு: நோக்கம் என்ன?

ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

மு.க. ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் சந்திரசேகர ராவ் வந்தார். அவரை தி.மு.கவின் பொருளாளர் துரைமுருகனும் கட்சியின் முதன்மைச் செயலர் டி.ஆர். பாலுவும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பிறகு அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பிற்குப் பிறகு சந்திரசேகரராவோ, ஸ்டாலினோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதற்குப் பிறகு தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 11-ம் தேதியே தெலுங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்தது. சுமார் 62.5 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகின. இத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தனித்தே போட்டியிட்டாலும், அக்கட்சி பா.ஜ.க. ஆதரவு மனநிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இதற்கு முன்பாக மத்திய பா.ஜ.க. அரசின் மீது எதிர்க்கட்சிகளால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, வாக்கெடுப்பில் அக்கட்சி பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என மு.க. ஸ்டாலின் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்தியாவில் உள்ள பிராந்தியக் கட்சிகளில் பல பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் மூன்றாவது அணி அமையும்போது, அந்த அணியின் பிரதமர் வேட்பாளராக உருவெடுக்கவேண்டும் என்று பல பிராந்தியக் கட்சித் தலைவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டே தென்னிந்திய அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டார். ஆனால், அப்போது தி.மு.க. போன்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறவே விரும்புவதாகத் தெரிவித்துவிட்டன.

இப்போது பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடையும் காலம் நெருங்கிவிட்ட நிலையில் சந்திரசேகர ராவ் மீண்டும் காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத கட்சிகளைத் திரட்ட முயன்றுவருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கேரள முதல்வர் பிணராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரை அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணி அமைந்தால் அதில் இணைய சந்திரசேகரராவ் விரும்புவதையே இந்த சந்திப்புகள் காட்டியிருக்கின்றன. தெலுங்கானா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி விரும்பவில்லை. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி வெளியிலிருந்து ஆதரவளிக்கும் ஒரு கூட்டணி அரசில் இடம்பெற சந்திரசேகரராவ் விரும்பக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அப்படி ஒரு மூன்றாவது அணி அமைந்தால் அதில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் கடுமையான எதிராளியான தெலுங்கு தேசமும் இடம்பெற விரும்பும் வாய்ப்பும் உள்ளது. அப்போது சந்திரசேகர ராவ் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேநேரம், ஆந்திராவில் அதிக இடங்களை வெல்லக்கூடிய கட்சியாகக் கருதப்படும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகரராவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சந்திரசேகரராவின் மூன்றாவது அணி முயற்சிகள் குறித்தும் பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டும் சந்திரசேகரராவ், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பாதது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :