வாக்கு முறைகேடு வைரல் வீடியோ: உண்மை தன்மை என்ன? #BBCFactCheck

தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

வாக்குச்சாவடியில் மூன்று பெண் வாக்காளர்களிடம் ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களிக்க கோருகிறார் ஒருவர் என்பது போன்ற ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில், "ஹரியானாவில் எடுக்கப்பட்ட வீடியோ, இவ்வாறுதான் தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது."

இந்த காணொளி சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது

ஃபரிதாபாத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் அந்த விடியோ ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு பகிரப்பட்டு வருகிறது.

இந்த காணொளியில், நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் பெண் ஒருவர் வாக்களிக்க செல்லும் போது, வாக்கு இயந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை காட்டுவது போன்றும், வாக்கு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துமாறு கோருவது போன்றும் தெரிகிறது. அடுத்து இரண்டு பெண்களிடமும் அந்த நபர் அவ்வாறு கோருகிறார்.

அந்த காணொளியில் மற்றொரு நபர், "பாஜக!பாஜக! கிரிராஜ் அவர்கள் உன்னை கூப்பிடுகிறார்கள். அவர்கள் உன் புகாரை ஏற்றுக் கொண்டார்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறுவதும் கேட்கிறது.

அந்த காணொளி வைரலான பிறகு, டிவிட்டரில் தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க பல கோருகின்றனர்.

அந்த காணொளியில் இருக்கும் செய்தி உண்மை என்று நாம் கண்டறிந்தோம்.

உண்மை என்ன?

ஃபரிதாபாத் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில், அந்த காணொளி பகிரப்பட்டு அந்த நபர் வாக்குப்பதிவு முகவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று ஃபரிதாபாத் மக்களவை தொகுதியில் பால்வால் மாவட்டத்தில் உள்ள அசோடி கிராமத்தில் உள்ள அந்நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அந்த டிவீட்டில், வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை எனவும் அந்த நபர் பிற்பகலில் கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலான பிறகு இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வால் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிஜார்நியாவிடம் பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு பேசியது.

"அவர் ஒரு வாக்குப்பதிவு முகவர் ஆனால் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரின் பெயர் கிரிராஜ் என்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் இப்போது பிணையில் வெளியே உள்ளார். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தெரிவித்தார்.

ஞாயிறன்று 10 தொகுதியில் நடைபெற்ற வாக்குபதிவில் 69.50 சதவிகித வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. ஃபரிதாபாத்தில் 64.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு முகவர்கள் வேட்பாளர்களால் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை பார்க்க நியமிக்கப்படுவர். கைது செய்யப்பட்ட அந்த நபரின் கட்சி என்ன என்பது தெரியப்படுத்தவில்லை.

ஃபரிதாபாத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் க்ரிஷன் பல் குஜ்ஜார் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறார். அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அவ்தார் சிங். பண்டிட் நவீன் ஜெய்ஹிந்த் என்பவர் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்.

விதிமுறைகள் என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுப்பட்ட விதிமுறைகள்படி, வாக்குச்சீட்டில் உள்ள வாக்காளரின் பெயர் மற்றும் அடையாள அட்டையை முதல் தேர்தல் அதிகாரி சரிபார்ப்பார்

இரண்டாம் தேர்தல் அதிகாரி விரலில் மை வைத்து சீட்டு ஒன்றை வழங்கி, கையெழுத்து வாங்குவார்.

அந்த சீட்டையும் தனது மை வைத்த விரலையும் முன்றாம் தேர்தல் அதிகாரியிடம் காட்ட வேண்டும். அதன்பின் வாக்கு இயந்திரத்தில் தனது விருப்ப வேட்பாளரின் சின்னத்துக்கு எதிரான பொத்தானை அழுத்த வேண்டும். அதன்பின் ஒரு சத்தம் வரும். பின் விவிபேட் இயந்திரத்தில் ஏழு விநாடிகள் மட்டுமே தெரியக்கூடிய சீட்டில், வாக்காளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் காண்பிக்கப்படும்.

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு எந்த ஒரு அதிகாரியோ அல்லது முகவர்களோ செல்ல அனுமதி இல்லை.

ஆனால் அந்த காணொளியில் முகவர் என்று சொல்லப்பட்ட அந்நபர் மூன்று முறை வாக்கு இயந்திரம் வைத்திருக்கும் இடத்துக்கு சென்று வருகிறார்.

தேர்தல் ஆணையர் அஷோக் லவாசா, "கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் அந்த சம்பவம் குறித்து விசாரித்தார் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இருக்கும் நபர் வாக்குப்பதிவு முகவர். அவர் பிற்பகலில் கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :