விவிபேட் எந்திரம் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகுமா?

'விவிபேட்' எந்திரத்தின் காரணமாக வாக்கு எண்ணப்படுவது தாமதமாகுமா? படத்தின் காப்புரிமை Getty Images

நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சில இடங்களில் விவிபேட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளையும் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படுமென கூறப்படுகிறது. எவ்வளவு தாமதம் ஏற்படும்?

தற்போது நடைபெற்றுவரும் 17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை முதல்முறையாக VVPAT (voter-verified paper audit trail) எனப்படும் வாக்காளர்களே சரிபார்க்கும் காகிகத் தணிக்கை முறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் பல வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பிவந்த நிலையில், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிப்பவர்கள், தாங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இந்த எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

முதல் முறையாக நாகாலாந்தில் உள்ள நோக்சென் சட்டமன்றத் தொகுதியில் சோதனை முறையில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதற்குப் பிறகு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் லக்னௌ, காந்தி நகர், பெங்களூர் தெற்கு, மத்திய சென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாஹிப், மிஸோராம் தொகுதிகளில் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

அதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த மாநிலம் முழுவதும் விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதல் முறையாக இந்த எந்திரங்கள் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேராத 21 கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தன. அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதம் அளவுக்கு விவிபேட் எந்திரங்களில் பதிவான வாக்குகளையும் எண்ணி, அவற்றை வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளோடு ஒப்பிட வேண்டுமெனக் வழக்குத் தொடர்ந்தனர்.

படத்தின் காப்புரிமை GAGAN NAYAR

இதற்கு முன்னதாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏதாவது ஒரு விவிபேட் எந்திரத்தில் உள்ள வாக்குச் சீட்டுகளை மட்டுமே பரிசோதிக்கப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இப்போது நாடு முழுவதும் 13.5 லட்சம் வாக்குப் பதிவு எந்திரங்களும் விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதில் 50 சதவீதத்தை அதாவது 6.75 லட்சம் விவிபேட் எந்திரங்களில் பதிவான வாக்குச் சீட்டுகளை எண்ணி சரிபார்ப்பதாக இருந்தால், முடிவுகளை வெளியிட ஐந்து நாட்களுக்கு மேலாகும் என இந்தியத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஏற்கனவே 479 விவிபேட் எந்திரங்களில் பதிவான வாக்குச் சீட்டுகளையும் வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சோதித்தபோது, ஒரு இடத்தில்கூட தவறு நேர்ந்திருக்கவில்லையென சுட்டிக்காட்டியது. அதனால், 4125 எந்திரங்களில் பரிசோதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத அளவுக்கு விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்க்க உத்தரவிடமுடியாது என்று கூறியது. ஆனால், அதற்குப் பதிலாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏதாவது ஐந்து விவிபேட் எந்திரங்களில் உள்ள வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையையும் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்க வேண்டுமெனக் கூறியது.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் 5 எந்திரங்கள் எனில், பொதுவாக ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 30-32 விவிபேட் எந்திரங்களில் இந்த சரிபார்ப்பை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் 20,625 விவிபேட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை வாக்கு எண்ணிக்கையின்போது சரிபார்க்க வேண்டும்.

இந்த சரிபார்த்தல் எப்படி நடக்கும்?

முதலில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குலுக்கல் முறையில் ஏதாவது ஐந்து விவிபேட் எந்திரங்களும் அதற்கிணையான வாக்குப் பதிவு எந்திரங்களும் தேர்வுசெய்யப்படும். ஆக, தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 30 எந்திரங்கள் தேர்வுசெய்யப்படும்.

வாக்குப் பதிவு எந்திரங்களை எண்ணுவதற்கென ஒரு வரிசை ஏற்கனவே இருக்கும். அந்த வரிசைப்படி, தேர்வுசெய்யப்பட்ட விவிபேட் எந்திரங்கள் வரும்போது, அவை திறக்கப்பட்டு உள்ளிருக்கும் வாக்குச் சீட்டுகள் கட்சிவாரியாகப் பிரிக்கப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

வாக்குச் சீட்டு முறை இருந்தபோது வாக்குகளை எண்ணுவதைப் போல, இந்த விவிபேட் எந்திரத்தில் இருந்த வாக்குச் சீட்டுகள் ஐம்பது, ஐம்பதாக கட்டப்படும். அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பது எண்ணப்பட்டு, அவை குறிக்கப்படும்.

இதற்குப் பிறகு, அதற்கு இணையான வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் வழக்கமான முறைப்படி எண்ணப்படும்.

விவிபேட் எந்திரத்தில் இருந்த வாக்குச் சீட்டுகளில் ஒவ்வொரு கட்சிக்கும் விழுந்த வாக்குகளும் வாக்குப்பதிவு எந்திரங்களில் விழுந்த வாக்குகளும் சரியாக இருக்கும்பட்சத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு அவை 'படிவம் -20'ல் குறிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.

ஏதாவது ஒரு இடத்தில், இரண்டும் பொருந்திப்போகாவிட்டால் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு என்ன செய்வதென முடிவெடுக்கப்படும்.

இந்தப் புதிய முறையால் வாக்கு எண்ணிக்கை வெளியாவதில் கால தாமதம் ஏற்படுமா?

விவிபேட் எந்திரத்தில் உள்ள வாக்குகளைச் சரிபார்ப்பதால், துல்லியமான முடிவுகள் வெளியாக சற்று காலதாமதம் ஏற்படும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 1200-1300 வாக்குகள் வரை இருக்கும். அவற்றில் சுமார் 1000 வாக்குகள் வரை பதிவாகியிருக்கக்கூடும். ஆகவே, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் சுமார் 30,000 வாக்குகளை சரிபார்க்க வேண்டியிருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் காரணமாக, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 3 முதல் 4 மணி நேரம் வரை கூடுதலாக செலவாகக்கூடும்.

தமிழ்நாட்டில் இந்த முறை 46 வாக்குச் சாவடிகளில் எந்திரங்களில் பதிவான வாக்குகளை அழிப்பது, விவிபேட் எந்திரங்களில் விழுந்த மாதிரி வாக்குச் சீட்டுகளை அகற்றாதது போன்ற தவறுகள் நேர்ந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவற்றில் மூன்று இடங்களில் மறுவாக்குப் பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மீதமுள்ள 43 வாக்குச் சாவடிகளில், விவிபேட் எந்திரங்களில் உள்ள வாக்குச்சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு, கணக்கில்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த 43 வாக்குச்சாவடிகளும் 13 மாவட்டங்களில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்