"திமுக பாஜகவிடம் 5 அமைச்சர் பதவிகளை கோருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்
Image caption ஜெயக்குமார்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "பாஜகவிடம் 5 அமைச்சர் பதவிகளை திமுக கோருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவிடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்டு திமுக பேசி வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், ''திமுக எப்போதுமே சந்தர்ப்பவாத கட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே நடந்த அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு இதை அறியலாம்.

3-வது அணிக்கு மட்டும் அல்ல; டெல்லிக்கு தூதுவிட்டு 5 கேபினட் அமைச்சர் வேண்டும் என்று பாஜகவுடன் அவர்கள் பேசி வருகின்றனர். எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்'' என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி: "தகவல் பரிமாற்ற பிரச்னை: தெற்கு ரயில்வே சுற்றறிக்கை"

மதுரை-விருதுநகர் பிரிவில், திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் வந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை, மதுரை உள்பட 6 கோட்டங்களின் இயக்ககப் பிரிவுக்கு ஒரு சுற்றறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"அதில், தகவல் பரிமாற்ற பிரச்னையை சரி செய்ய வேண்டும். ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றத்தில் ஏதாவது இடைவெளி காணப்பட்டால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரிகள் ஆய்வு செய்து, நிலைய மேலாளர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றத்தில் பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "அமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமித் ஷா

மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் அமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மம்தா பானர்ஜி சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மேற்கு வங்காள மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான 19-ந் தேதி, 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஜாதவ்பூர் உள்பட 3 தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற இருந்தது.

ஆனால், ஜாதவ்பூர் கூட்டத்துக்கு கடைசி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், மம்தா பானர்ஜி, முழு சர்வாதிகாரி ஆகிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருவதை கண்டு விரக்தியில் இருக்கிறார். அவரைத் தேர்ந்தெடுத்த மக்களே அவரை தோற்கடிக்க போகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்