கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல் ஹாசன் படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது. கமல்ஹாசனின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து எனப் பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்காக அவரது நாக்கை அறுக்க வேண்டுமெனக் கூறினார்.

"கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி. தீவிரவாதத்திற்கு மதமெல்லாம் கிடையாது. இந்துதான் முதல் தீவிரவாதி என்று கூறி சிறுபான்மையினரின் ஓட்டை வாங்குவதற்காக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏன்னா ரொம்ப பேசுகிறார். இவ்வளவு பேச்சு தேவையில்லை. ஏன் பேசுகிறார், யார் சொல்லிப் பேசுகிறார்? இந்துதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்கிறார். இவருக்கு என்ன தெரியும்?" என்றெல்லாம் பேசிய ராஜேந்திர பாலாஜி, பிறகு கமல்ஹாசனை ஒருமையில் பேச ஆரம்பித்தார்.

Image caption ராஜேந்திர பாலாஜி (இடது) முதல்வர் எடப்பாடி பழனிசாமி

"65 வயசு வரைக்கும் உல்லாச முறையில வேசம் போட்டு, டான்ஸ் ஆடிக்கிட்டிருந்த, லைட் அடிச்சுக்கிட்டு பகல்ல வர்ற பயலுக்கு என்ன கூறு இருக்கும்.. அவன்லாம் கூறுகெட்ட பய. தேர்தல் கமிஷன் தலையிட்டு கமல்ஹாசன் கட்சியை முடக்க வேண்டும். கமல்ஹாசன் வன்முறையை விதைக்கிறான்" என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சை மக்கள் நீதி மய்யம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் விடுத்திருக்கும் அறிக்கையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் பதவியேற்கும்போது ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக அவர் பதவியைப் பறிக்க வேண்டுமென கோரியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார்.

"வட மாநிலங்களில் சங்க பரிவாரத்தினர் பேசும் பேச்சுகளின் தொடர்ச்சியாகவே ராஜேந்திர பாலாஜியின் பேச்சு இருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். இப்படி வன்முறையைத் தூண்டுகிறவரை அமைச்சர் பதவியில் தொடரச் செய்வது நியாயம் அல்ல. எனவே அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரியிருக்கிறது.

இதற்கிடையில் இந்து அமைப்புகள் கமல்ஹாசன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்று வந்த தகவல்களால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :