மு.க.ஸ்டாலின் சவால்: பாஜக-வுடன் பேசுவதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்

மு.க.ஸ்டாலின் படத்தின் காப்புரிமை M.K.Stalin

பா.ஜ.கவுடன் தி.மு.க. பேசிக்கொண்டிருப்பதாக பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்படி பேசியதை நிரூபிக்க முடியாவிட்டால், தமிழிசை அரசியலைவிட்டு விலகத் தயாரா என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்திருக்கிறார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

அப்போது, பா.ஜ.கவிடம் ஐந்து கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்டு தி.மு.க. பேசிவருவதாக அமைச்சர் டி. ஜெயக்குமார் திங்கட்கிழமை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், "உண்மைதான். ஒரு பக்கம் ராகுல், இன்னொரு பக்கம் சந்திரசேகரராவ், இன்னொரு பக்கம் மோடி. தி.மு.க. நிறம் மாறுமென்று எல்லோருக்குமே தெரியும்" என்று பதிலளித்தார்.

யார் மூலமாக பா.ஜ.கவுடன் ஸ்டாலின் பேசிவருகிறார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 'யார் மூலமாவது பேசிக்கொண்டிருப்பார்' என்றும் கூறினார்.

அவரது இந்தப் பேட்டிக்கு தி.மு.க. கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்திருக்கும் அறிக்கையில், "பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு பொய் பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டுவிட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்." என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தி.மு.கதான் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை "பாசிஸ்ட்", "சேடிஸ்ட்", "சர்வாதிகாரி" என்று முதன்முதலில் விமர்சித்தது மட்டுமின்றி, "மீண்டும் இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது" என்று சென்னையில் மட்டுமல்ல, கல்கத்தாவிலும் தில்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் தான்தான் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை M.K.Stalin

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துச் சென்றவுடனேயே"இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டதாகவும் அ.தி.மு.க- பா.ஜ.க போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சியல்ல தி.மு.க என்றும் மத்தியில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

"மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்" என்பதை தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது நரேந்திர மோதியோ நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக தான் தயாராக இருப்பதாகவும் அப்படி நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோதியும் தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் சவால் விடுத்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்