அம்பேத்கரின் சிலையை பாஜகவினர் உடைத்தார்களா? #BBCFactcheck

அம்பேத்கர்

அம்பேத்கரின் சிலை ஒன்று இடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வெளிவந்த காணொளியொன்று சமூகவலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

''பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை பாஜக அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினருமா கர்னி சிங் உடைக்கிறார். இப்போது மோதி என்ன சொல்லப் போகிறார்? இந்த காணொளியை உங்களால் முடிந்தளவுக்கு வைரலாக்குங்கள், அப்போதுதான் மொத்த இந்தியாவும் இதை பார்க்கும்'' என்ற வாசகத்துடன் இந்த காணொளி பகிரப்பட்டது.

''விதி வசத்தால் ஒருவருக்கு அவரின் நலனுக்கு எதிராக அவரது அறிவு செயல்படும். பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை இடிக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கர்னி சிங்கின் செயல் குறித்து நரேந்திர மோதி என்ன சொல்லப் போகிறார்?'' என்ற வாசகத்துடன் 'ரத்னாகர் சேனா என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் பல ஆயிரம் முறைகள் பகிரப்பட்டு, பார்க்கப்பட்டது. மேலும் வாட்சாப்பிலும் இது அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

மண்வாரி இயந்திரம் ஒன்று அம்பேத்கர் சிலையை இடிப்பது போன்ற 40 வினாடிகள் கால அளவுள்ள அந்த காணொளியில் ''பாரத் மாதா கி ஜே!'' என்று ஆதரவாளர்கள் கரகோஷத்துடன் கோஷமிடுகிறார்கள்.

இந்த காணொளி போலியான கூற்றுகளுடன் பகிரப்பட்டுள்ளதாக பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு கண்டறிந்துள்ளது.

உண்மை என்ன?

ரிவர்ஸ் இமேஜில் தேடியபோது, இதே காணொளி குறித்து பிபிசியில் 2018ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி வெளியான செய்தி ஒன்று வருகிறது.

இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு மே மாதம் திரிபுராவில் உள்ள பிலோனியாவில் நடைபெற்றது என அந்த செய்தி தெரிவிக்கிறது.

பிபிசியின் செய்தியின்படி, அப்புறப்படுத்தப்படுத்தப்பட்ட சிலை ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலை. அது அம்பேத்கரின் சிலையல்ல. ஐந்து ஆண்டுகளாமாக திரிபுராவின் பெலோனியாவில் இருந்த அந்த சிலை, நெடுங்காலமாக திரிபுராவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு பிறகு தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்ற நிலையில் அந்த சிலை அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த லெனின் சிலைக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டிருந்தனர் எனவே "அதிகப்படியான கோபத்தினால்" அந்த சிலை விழுந்துவிட்டது என உள்ளூர் பாஜக தலைவர் ராஜுநாத் ஒரு செய்தித்தாளிடம் தெரிவித்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வைரலான காணொளியில் குறிப்பிட்டிருந்தபடி மாநில பாஜக எம்எல்ஏ "கர்னி சிங்" என்ற ஒரு நபர் உண்மையில் இல்லை என்றும், அது கற்பனையாக உருவாக்கப்பட்ட பெயர் என்றும் பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு கண்டறிந்தது.

திரிபுராவின் சட்டசபை உறுப்பினர்கள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள மாநில வலைதளத்தை நாம் பார்த்தபோது, திரிபுராவில் கர்னி சிங் என்ற எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை என்று தெரியவந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :