அமித் ஷாவின் கொல்கத்தா பேரணியில் வன்முறை, தடியடி

பேரணி புகைப்படம்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணிக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினர் அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டினர். மேலும், அவர் சென்ற வாகனத்தின் மீது இந்த மாணவர்கள் கற்களை எறிந்ததாக குற்றஞ்சாட்டப்படுவதோடு, "கோ பேக் அமித் ஷா" என்று முழக்கமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினருக்கும், அமித் ஷாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதால், மாறி மாறி கற்களையும், பாட்டில்களையும் எறியத் தொடங்கியுள்ளனர். சில பகுதியில் தீயும் எரியத் தொடங்கியுள்ளது.

இதனால், காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

பாஜக தலைவர் அமித் ஷா பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்தங்களை சந்தித்து வருகிறார். தோற்றுபோவது உறுதி என்று அவருக்கு தெரியும். அந்த விரக்தியின் அறிகுறிதான் இது" என்று தெரிவித்துள்ளார்.

"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் இந்தப் பேரணியில் தாக்குதல் நடத்தினர். எனவே, என்னால் இந்தப் பேரணியை முழுமையாக நடத்த முடியவில்லை. அதன் காரணமாக சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு என்னால் மாலை அணிவிக்க முடியவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

"காவல்துறை பார்வையாளராக நின்று வேடிக்கை பார்த்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் அணி, அமித் ஷாவுக்கு கறுப்பு கொடி காட்டுவதற்கு அனுமதித்தனர்" என்று பாஜகவின் பொது செயலாளர் ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலாளர் பார்த் சட்டர்ஜி இது பற்றி குறிப்பிடுகையில், "பாஜக தங்களின் பலத்தை காட்ட விரும்பியதால், காவல்துறை தடியடி செய்ய வேண்டியதாயிற்று" என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PTI

"பாஜக குண்டர்கள் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் "என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

வங்காள டெய்லி செய்தியின் பத்திரிகையாளர் சோமான் சிங், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர் அணியினர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு அருகில் கறுப்பு கொடியோடு நின்றிருந்தனர். காவல்துறையினர் முதலில் கறுப்பு கொடி காட்டுவதை தடுத்தனர். ஆனால், அமித் ஷா அங்கு வந்தவுடன், இந்த மாணவர்கள் கறுப்பு கொடிகளை காட்ட தொடங்கினர்" என்று கூறியுள்ளார்.

"இதன் காரணமான காவல்துறை தடியடி நடத்தினர். பாஜக ஆதரவாளர்களும் கற்களை எறிந்தனர்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பேரணியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றஞ்சாட்டியுள்ளன.

முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தலைவர் அமித் ஷா, உள்ளூர் வேட்பாளர் ஆகியோரின் சில பதாகைகளை அகற்ற வேண்டுமென காவல்துறையினர் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை PTI

திரிணாமுல் காங்கிரஸால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

கொல்கத்தா பேரணியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு திரிணாமுல் காங்கிரஸே காரணம் என்று கூறியுள்ள பாஜகவின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய வர்கியா, மாநில தேர்தல் ஆணையத்திடம் இது பற்றி புகார் அளிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :