கல்லூரிப் படிப்பு: தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் போலீஸில் புகார்

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Marka
Image caption கோப்புப்படம்

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் போலீஸில் புகார்

தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வைக்க மறுத்து, தனது மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டதாக தந்தை மீது மகள் புகார் அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக 12ஆம் வகுப்பு படித்து முடித்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த மாணவி போலீஸ் புகார் எண்ணுக்கு வாட்சப்பில் புகார் அனுப்பியுள்ளார்.

தனக்கு இதழியியல் படிக்கவே விருப்பம், ஆனால் தன்னை பிஎஸ்.சி, இயற்பியல் அல்லது வேதியியல் படிக்க தனது தந்தை வற்புறுத்துவதாக அப்பெண் கூறுகிறார்.

"நான் என் தந்தைக்கு விருப்பமாக படிப்பை தேர்வு செய்ய மறுத்துவிட்டதால், என் சான்றிதழ்களை தர மறுக்கிறார்," என அந்த மாணவி தெரிவித்தார்.

பின்னர் அந்த மாணவியின் தந்தை சான்றிதழ்களை தர ஒப்புக் கொண்டதாக அவருக்கு காவல்நிலையத்தில் இருந்து அழைப்பு வந்ததாக அந்நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

தினமலர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பண்ணை வீட்டில் சி.பி.ஐ., மீண்டும் ஆய்வு

படத்தின் காப்புரிமை AFP

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், திருநாவுக்கரசு பண்ணை வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பண்ணை வீடு அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்ததாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வல்லுறவு செய்து, 'வீடியோ' எடுத்து மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, உட்பட நால்வரை, போலீசார் கைது செய்தனர். புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், 'பார்' நாகராஜ், உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ஏப்ரல் 26ல், புதிதாக இரு வழக்குகள் பதிவு செய்து, ஆனைமலை அடுத்த சின்னப்பம்பாளையத்தில், திருநாவுக்கரசு பண்ணை வீடு, மற்ற குற்றவாளிகள் வீடுகளில் ஆய்வு செய்தனர். நேற்று மாலை, பண்ணை வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர்.

சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில், இரண்டு, எஸ்.ஐ.,க்கள்; உள்ளூர் போலீஸ், எஸ்.ஐ., சந்திரன் மற்றும் வி.ஏ.ஓ., சம்பத்குமார் உடன் வந்தனர். சி.பி.ஐ., அதிகாரிகள், பண்ணை வீட்டில், ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்தனர். அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களின் பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஆய்வு செய்தனர்.

திருநாவுக்கரசு வீட்டுக்கு அடிக்கடி கார், பைக்குகள் வருமா, வீட்டில் இருந்து பெண்கள் கதறும் சத்தம் கேட்டதா, இளைஞர்கள், பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்தீர்களா, பெண்கள் வெளியில் ஓடி வந்தனரா' என, சி.பி.ஐ., அதிகாரிகள், மக்களிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்தனர். பதிலளித்த மக்கள், 'கூலி வேலைக்குச் சென்று, இரவில்தான் வீடு திரும்புவோம். யார் வந்தனர் என்பதை கண்காணிக்கவில்லை; பெண்கள் சத்தம் கேட்டதில்லை; கார்கள் வந்து சென்றதை மட்டும் பார்த்திருக்கிறோம்' என, தெரிவித்தனர்.

இவ்வாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமணி: இந்துக்களின் மனதை கமல் புண்படுத்திவிட்டார் - இந்து மகா சபை போலீஸில் புகார்

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் அகில பாரதிய இந்து மகா சபை புகார் அளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அகில பாரதிய இந்து மகா சபையின் தலைவர் சந்தர் பிரகாஷ் கௌசிக், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்துதான் எனக் கூறியதன் மூலம் இந்துக்களின் மனதை கமல்ஹாசன் புண்படுத்திவிட்டார்.

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தொடர்பாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரை எந்தவொரு இடத்திலும் பயங்கரவாதி எனத் தெரிவிக்கவில்லை. மாறாக அவரைக் கொலையாளி என்றே குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆதாயத்துக்காக சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். இதனால், கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை அவர் புண்படுத்திவிட்டார். அவருடைய பேச்சு இந்திய தண்டனையியல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தப் பேச்சு பெருமளவில் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார் அவர்.

இதற்கிடையே, இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனை அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா மனுத் தாக்கல் செய்துள்ளதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்): உலகக்கோப்பை போட்டி - பிரிட்டன் நாட்டுக்கு செல்ல குவியும் விசா விண்ணப்பங்கள்

மே 30ஆம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் தொடங்கவுள்ள நிலையில், அந்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 3,500 விசா விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பெரும்பாலான விண்ணப்பங்கள் கிரிக்கெட் போட்டிகளை காணுவத்றகாக விண்ணப்பிக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற உள்ளது.

போட்டியைக்காண 80 ஆயிரம் இந்தியர்கள் வரை பிரிட்டனுக்கு பயணிக்கலாம் என பிரிட்டன் உயர் ஆணையம் எதிர்பார்க்கிறது. உலகக் கோப்பைக்காக பிரிட்டன் வரும் மக்களில் இந்தியர்கள்தான் அதிகளவில் வர வாய்ப்புள்ளதாகவும் ஆணையம் கணக்கிட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :