பாஜக - திரிணாமுல் இடையே மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை: பின்னணி என்ன?

திரிணாமுல் மோதலின் பின்னணி படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு வங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைகள் நடந்தேறின.

ஜாட்கிராமில் ராமன் சிங் என்ற ஒரு பாஜக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை காலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

பாஜக வேட்பாளர் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி பாரதி கோஷ், கிஷ்பூர் பஜாரில் அவரை தாக்கிய கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக கோவிலுக்குள் சென்று தஞ்சமடைய நேர்ந்தது. அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்த போலீசார், காவல்நிலையத்தில் தங்க வைத்தனர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியிருக்கிறது. மிட்னாப்பூர், கேஷ்பூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததுமே நாங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம். இங்கிருந்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மறுபுறம், காங்கிரஸ், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி ஆரிஜ் ஆகிப்தாப் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்றது. ஆனால் இரண்டாம் கட்டத்திலேயே தொடங்கிய வன்முறை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு இடையில் நடைபெற்றது என்பது தற்செயல் நிகழ்வுகள் என்று கருத முடியாது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார், அஸன்ஸோல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்பிரியோவின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐந்தாம் கட்டத் தேர்தலில் பைரக்பூர் தொகுதி பிஜேபி வேட்பாளர் அர்ஜுன் சிங் தாக்கப்பட்டார். இதைத் தவிர, பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மோதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.

பெருமளவிலான வன்முறைகள் நடைபெற்றாலும் பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் அதிகாரி ஆரிஜ் கூறுகிறார்.

இதில் பல இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக வலுவாக இருந்த இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஷ்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களை முற்றுகையிட உள்ளூர் மக்கள் முயன்றதாக பாஜக வேட்பாளர் பாரதி கோஷ் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் என்று பாரதி கோஷ் குற்றம் சாட்டினார். மோதலில் பாஜக வேட்பாளரின் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார். திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்திய பாதுகாப்புப் படையினர் மீதும் படைகளிலும் மாநில போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர்.

படத்தின் காப்புரிமை Reuters

குற்றசாட்டும் எதிர்குற்றச்சாட்டும்

ஆத்திரமடைந்த கூட்டத்தை கலைப்பதற்காக மத்திய பாதுகாப்புப் படைகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு செய்ய வேண்டியிருந்தது. பாரதி கோஷின் மெய்க்காப்பாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் காயமடைந்ததாக முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

ஊர்வலமாக சென்ற பாஜக வேட்பாளரின் வாகனங்களை கேஷ்பூர் பஜார் பகுதியில் உள்ளூர் மக்கள் வழிமறித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாக்குப்பதிவு அன்று, அந்தப் பகுதியில் சுற்றுவதற்கு அவரிடம் முறையான அனுமதி இல்லை. இது பாதுகாப்பு விஷயம். அவர் தனது விருப்பம்போல் வாகன ஊர்வலம் நடத்த முடியாது என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்னை தாக்கினார்கள். சில பெண்கள் என்னை தள்ளினார்கள், நான் கீழே விழுந்தேன். எனக்கு காயம் ஏற்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அது எனக்கு ஏமாற்றமளித்தது என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார்.

பாரதி மீது முதல்முறை தாக்குதல் நடத்தவில்லை. அரசியல் ரீதியாக அவரை வெற்றிக்கொள்ள முடியாது என்பதால் திரிணாமுல் காங்கிரஸ் பாரதிக்கு உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது என்கிறார் திலீப் கோஷ்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாஜக தொண்டர்கள் மீது துப்பாக்கிச்சூடு

தோஹாச்சியா பகுதியில் பத்ராவ் பகுதியில் வேட்பாளரின் கார் உடைக்கப்பட்டது. அதேபோல் பங்குடாவில் பிஜேபி வேட்பாளர் சர்க்காரின் காரையும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அடித்து உடைத்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கும் திரிணமுல் காங்கிரஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ததாக, மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறது.

முன்னதாக, ஜாட்கிராமில் உள்ள கோபிபல்லபூர் பகுதியில் சனிக்கிழமை இரவு ரமன் சிங் என்ற ஒரு பாஜக தொண்டர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை திரிணாமுல் கட்சியினர் படுகொலை செய்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் பக்வன்பூரில் சனிக்கிழமை இரவு பாஜகவின் இரு தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனந்த் குஸாயித் மற்றும் ரஞ்சித் மாயினி என்ற அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

"தோல்வியடையப்போவதை உணர்ந்த திரிணாமுல் தொண்டர்கள் எங்கள் கட்சியினரை தொடர்ந்து தாக்கி வருகின்றனர், அதற்கு போலீசாரும் ஊக்கமளிக்கிறார்கள், எங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்களுக்கு தடை விதிக்கின்றனர்."

மறுபுறத்தில் பாஜகவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று திரிணமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேலும் பாஜக வன்முறையை தூண்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

திரிணாமுல் காங்கிரஸுக்கு சவால் விடும் பாஜக

"பாரதி கோஷும் திலீப் கோஷும் இணைந்து காதர் மற்றும் மிட்னாப்பூரில் வன்முறையை தூண்டுகின்றனர். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் அவர்கள் பக்கம் இருக்கிறது" என்று உறுதிபட கூறுகிறார் கட்சியின் மூத்தத் தலைவரும் நகர வளர்சசி அமைச்சருமான பிர்ஹாத் ஹக்கீம்.

பாஜகவுக்கு ஆறாவது கட்டத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தலில் ஜார்கண்ட் எல்லைப் பகுதியிலும், கட்சியின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது, அங்கு பல இடங்களைப் பெற்றது.

"மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை காலம் காலமாய் தொடர்வது. இந்தப் பகுதிகளில் ஏற்கனவே வலுவாக இருக்கும் நிறுவப்பட்ட கட்சி கூட கடுமையாக வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு மோதல் வன்முறை மிகவும் பழமையானது ஆகும்", என்கிறார் அரசியல் ஆய்வாளர் விஸ்வநாத் பண்டிட்.

குறிப்பாக புருலியாவில், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஜாட்கிராமில் இரு இடங்களிலும் பாஜக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மறுபுறத்தில் இந்த இடங்களை எந்தவொரு நிலையிலும் வீட்டுக் கொடுக்க திரிணாமுல் காங்கிரஸ் விரும்பவில்லை.

இந்நிலையில் இன்று, புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, "வன்முறையை பாஜக செய்ததாக மம்தா கூறுகிறார். நாங்கள் நாடு முழுவதும் தேர்தலில் நிற்கிறோம். அவரைப்போல வெறும் 42 இடங்களில் மட்டும் அல்ல. தேர்தல் நடந்த மற்ற எந்த இடங்களிலும், ஆறு கட்டங்களில் எந்த வன்முறையும் இல்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் இவ்வாறு நடந்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம்," என்றார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :