கடைசி கட்ட வாக்குப் பதிவு: மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத் தடை

மம்தா பானர்ஜி படத்தின் காப்புரிமை Reuters

நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் கடைசி மற்றும் 7-வது கட்ட வாக்குப் பதிவு மே 19-ம் தேதி நடக்கிறது. அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. வழக்கப்படி இந்த தொகுதிகளில் மே 17-ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையவேண்டும்.

ஆனால் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, தேர்தல் ஆணையம் இந்த 9 தொகுதிகளின் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவின் கொல்கொத்தா பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து இரண்டு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தன.

மேலும், தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை வழங்கிய அறிக்கையில், நேற்றைய அரசியல் பரப்புரையின்போது நடைபெற்ற பிற வன்முறை சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இது பற்றிய விசாரணையில் சுமார் 100 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகளில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேர்திற்குள் பல்வேறு அரசியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து அவர்களின் கவலைகளையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் எடுத்துக்கூறியதாகவும், பயத்தையும், வெறுப்பையும் இந்த வன்முறை உருவாக்கியுள்ளதால் ஒட்டுமொத்த தேர்தல் சூழ்நிலை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

எனவே, சுதந்திரமான, நியாயமான அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையம் அரசமைப்பு சட்டம் 324வது பிரிவின்கீழ் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மே மாதம் 19ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் பிரசாரம் மே மாதம் 16ம் தேதி இரவு 10 மணிக்கு நிறைவடைய வேண்டுமென உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள டம்டம், பராசத், பஷிர்காட், ஜெயநகர், மதுராபூர், டைமண்ட் ஹார்பர், ஜதாவ்பூர், கொல்கத்தா தெற்கு, கொல்கத்தா வடக்கு ஆகிய 9 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெறும் தேர்தல் பரப்புரை மே 16-ம் தேதி இரவு 10 மணியோடு முடிவடையவுள்ளது.

படத்தின் காப்புரிமை EUROPEAN PHOTOPRESS AGENCY

அதிகாரிகள் மாற்றம்

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் இடம் மாற்றியுள்ளது.

மேற்கு வங்க மாநில காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமார், உள்துறை முதன்மை செயலாளர் அட்ரி பட்டாச்சாரியா ஆகியோரை ஆணையம் இடம் மாற்றியுள்ளது.

மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அட்ரி பட்டாச்சாரியாவின் பொறுப்புகளை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாமற்றது. அறநெறிக்கு புறம்பானது, அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டது. நாளை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி நடத்துகின்ற இரண்டு அரசியல் நிகழ்ச்சிகளையும் முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் நேரம் வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்