பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை?

பெப்ஸி படத்தின் காப்புரிமை Newscast

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் பெப்ஸி, கோக் விற்பனைக்கு தடை?

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து பெப்ஸி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற அறிவிப்பு வெளியாவது இது முதல்முறை அல்ல. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சில வியாபாரிகள் கோக் மற்றும் பெப்ஸி பானங்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR
Image caption கோப்புப்படம்

இந்த முடிவுக்கு இரண்டு காரணங்களை அவர்கள் தெரிவித்தனர். ஒன்று உடல்நலத்திற்கு அவை தீங்கு விளைவிக்கலாம். மற்றொன்று, இந்த நிறுவனங்களால் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்று கூறினர்.

ஆனால் ஆறேழு மாதங்களில் மீண்டும் அவற்றை விற்பனை செய்ய தொடங்கினர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பெப்ஸியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார் என்றும் கோக் நிறுவனம் எந்த பதிலும் கூறவில்லை என்றும் அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

தினமணி - தபால் வாக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க விநியோகிக்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், வரும் மே 17ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான சாந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தத் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணப்பப் படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும். ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விடக்கூடாது என தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை The India Today Group

இந்த நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்களின் தபால் வாக்களிக்கும் விண்ணப்ப படிவங்கள், சாதாரண காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த 90 ஆயிரம் பேர் முழுமையாக தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

தபால் வாக்கு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாக்களிக்கத் தவறிய அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்களை முறையாக வழங்கி, அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க விநியோகிக்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (மே 17) ஒத்திவைத்தனர்.

இவ்வாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர் - 'ஏசி' வெடித்து கணவன், மனைவி, மகன் பலி

திண்டிவனம் அருகே, வீட்டில், 'ஸ்பிளிட் ஏசி' வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், தீயில் கருகி இறந்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர் நாளிதழ்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ், 60; திண்டிவனம் - மயிலம்சாலையில், வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் கோவர்த்தனன் மற்றும் கௌதம். கலைச்செல்வியும், இரண்டாவது மகன் கவுதமும், பைனான்ஸ் தொழில் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகிய மூவரும், 'ஏசி' அறையில் துாங்கினர். கோவர்த்தனன், அவரது மனைவி, 'ஏசி' அல்லாத மற்றொரு அறையில் துாங்கினர். அதிகாலை, 3:30 மணியளவில், ராஜ் வீட்டில் பயங்கர சத்தத்துடன், 'ஏசி' வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு, துாக்கத்தில் இருந்து கோவர்த்தனன், அவரது மனைவி அலறி எழுந்து, வெளியே ஓடி வந்தனர்.ராஜ் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. வெளியே இருந்தபடி, தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டெல்லி விடுதி தீ விபத்தில் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு

இந்த விபத்தில், ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தீயில் சிக்கி, அலறி துடித்தனர். காப்பாற்றும்படி அங்கும், இங்கும் ஓடினர். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், ராஜ், வீட்டின் வாசல் வரை ஓடி வந்து, சுருண்டு விழுந்து இறந்தார். ஹாலில் உள்ள சோபாவில் சாய்ந்தபடி கவுதமும், பெட்ரூமில் கலைச்செல்வியும் இறந்து கிடந்தனர்.

வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள், ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து, தீயை அணைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், மதியம், 2:00 மணியளவில் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கவுதமிற்கு, அடுத்த மாதம், 6ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருவதாக இந்நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - முன்ஜாமீன் கேட்கும் கமல்

படத்தின் காப்புரிமை Getty Images

'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து' என்று பேசியதால் தம் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் விடுமுறை கால அமர்வு நிராகரித்துவிட்டதால், அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.

அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

இந்த மனு இன்று, வியாழக்கிழமை, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்