பாஜக - திரிணாமுல் மோதல்: தேர்தல் ஆணையத்துக்கு சவால்விடும் மம்தா

மம்தா பானர்ஜி படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு வங்கம் மாநில தேர்தல் பிரசார சூழல் ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியிருப்பது அங்குள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் உத்தரவுகளைத்தான் தேர்தல் ஆணையம் கேட்பதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். முடிந்தால் தேர்தல் ஆணையம் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

"முடிந்தால் தேர்தல் ஆணையம் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். எனக்கு 50 முறை நோட்டீஸ் அனுப்பினாலும், என்னை கைது செய்தாலும், எனக்கு அதுகுறித்து கவலையில்லை" என புதன்கிழமையன்று அவர் பேசினார். மேலும், பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுகூடுமாறு வலியுறுத்தியுள்ள மம்தா, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

இறுதியாக நடக்கவுள்ள ஏழாம் கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஒன்பது தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். வடக்கு கொல்கத்தா, தெற்கு கொல்கத்தா, தம் தம், பசிர்ஹட், பரஸட், ஜாதவ்பூர், ஜெய்நகர், மதுரபூர் மற்றும் டய்மண்ட் ஹார்பர் ஆகியவை அடக்கம்.

சமீபத்தில் நடந்த ஆறாம் கட்ட தேர்தலின்போது, மம்தாவுக்கு நம்பத்தகுந்த அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவரை மிகவும் கோபப்படுத்தியது.

தனது மாநில அரசின் இரு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்த மம்தா, உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் மோதி மற்றும் அமித் ஷா மீது குற்றஞ்சாட்டினார். தேர்தல் ஆணையத்தின் முடிவுகளால்தான் அங்கு பதற்ற நிலை எழுந்ததாக அவர் கூறினார்.

சட்டப்பிரிவு 324ஐ அமல்படுத்தி, பிரசார நாளை குறைத்தது தொடர்பாக பேசிய அவர், "மாநிலத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை. இவ்வாறு செய்ததது முறையில்லாதது மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்று அவர் தெரிவித்தார்.

தன்னால் முடிந்த அளவிற்கு மக்களை தனது போட்டியாளர்களுக்கு எதிராக திருப்ப முயற்சிக்கிறார் மம்தா. அந்த நோக்கத்தோடு, தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக வங்காள மக்கள் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ANI

பாஜகவினர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல, என்றும் அவர்கள் வெளியாட்கள் என்றும் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் அமைதியான சூழலை பாஜக கெடுப்பதாக நினைக்கும் மம்தா, பிகாரில் இருந்து வெளிநபர்களை பாஜக அழைத்துவந்து, அமித் ஷாவின் பிரசாரத்தின் போது அவர்கள் பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறுகிறார்.

முன்னதாக, தேர்தல் வன்முறை அதிகரித்ததாக குற்றஞ்சாட்டி மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் பிரசார நேரத்தை குறைத்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காரணம், அமித் ஷாவின் பிரசாரத்தின் போது நடந்த கலவரம்.

திரிணாமுல் காங்கிரஸ் பணியாளர்கள் மற்றும் ஏபிவிபி ஆதரவாளர்களும், போலீஸ் படையினருக்கு முன்பே மோதிக் கொண்டனர்.

பல கார்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர்சந்திர வித்யாசாகரின் சிலை தாக்கப்பட்டது. வித்யாசாகரின் சிலை தாக்கப்பட்ட சம்பவம், வருத்தத்தை ஏற்படுத்தியதாக அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டப்பிரிவு 324ஐ அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பிரசார நேரம் குறைக்கப்படுவதாக புதன்கிழமை அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும் உடனடியாக மாநில உள்துறை செயலர் அத்ரி பட்டாச்சார்யா மற்றும் சிஐடி பிரிவு டிஐஜி ராஜிவ் குமார் இருவரும் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் முறையில் தலையிட்டதாக உள்துறை செயலர் நீக்கப்பட்டார் என்று தேர்தல் ஆணைய அதிகாரி சந்திர பூஷன் ஓஜா தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களை போல அல்லாமல், இந்தாண்டு தேர்தலில், திரணாமுல் காங்கிரசின் முக்கிய போட்டியாக மேற்கு வங்க பாஜக வளர்ந்துள்ளது. பிரசாரத்தின்போதும் வாக்குப்பதிவின்போதும் நிகழ்ந்த மோதல்கள், ஒரு சார்பற்றதாக இருக்கவில்லை. சில பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரளாவர்களோடு பாஜவுக்கு மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் பெரும்பாலான இடங்களில் திரிணாமுல் கட்சியே ஆதிக்கம் செலுத்தினாலும், அதற்கு ஈடுகொடுக்க பாஜக முயன்று வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் பிகாரில் பாஜகவே ஆட்சியில் இருப்பதால், மேற்கு வங்கத்திலும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று பாஜக நினைப்பதாக மம்தா குற்றஞ்சாட்டுகிறார்.

வாக்குப்பதிவின் போது, பல்வேறு புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிப்பது அனைத்து அரசியல் கட்சிகளும் செய்வதே. அதையே திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் செய்து வருகிறது.

ஆனால் தொடக்கத்தில் இருந்தே மேற்கு வங்கத்தில் பெரும் மத்திய படைகள் நிறுத்திவைக்கப்பட்டே வாக்குப்பதிவு நடைபெற்றது. இது பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக மம்தாவை நினைக்க வைத்தது.

மோதி மற்றும் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக திரிணாமுல் மற்றும் பிற கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரை, ஆணையம் கையாண்ட விதமும், அதன் சுதந்திரத்தன்மை குறித்த கவலையை எழுப்பியது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :