சூலூர் இடைத்தேர்தல் - வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

சூலூர் இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்? கட்சிகள் பல பரிட்சை

சூலூர் சட்டமன்ற தொகுதி மே 19ம் தேதி இடைத்தேர்தலை சந்திக்கின்றது. 2009 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதி இது.

சூலூர், மோப்பிரிபாளையம், சாமளாபுரம், பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி பேரூராட்சிகள், பல்லடம் தாலுகாவின் சில பகுதிகள், காங்கேயம்பாளையம், சென்சஸ் டவுன் ஆகிய பகுதிகள் இந்த தொகுதிக்கு உட்பட்டவையாக உள்ளன. இங்கு 2 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பகுதிகளின் பிரதான தொழில்கள் நெசவும் விவசாயமும்.

விசைத்தறிகள் அதிகம் உள்ள பகுதிகளான இங்கு நெசவுத்தொழில் நலிவடைந்து வருவதால் நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். நெசவுத் தொழிலார்களுக்கு தகுந்த கூலி கிடைக்காததால் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வேறு வேலைகளை தேடி செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

வட மாநிலங்களில் இருந்து வேலை தேடி வருகின்ற தொழிலாளர்கள், குறைந்த கூலியில் வேலை செய்ய தயாராக இருப்பதால், வட மாநிலத்தவர்களையே அதிகமாக வேலையில் அமர்த்தப்படுகின்றனர் விசைத்தறி உரிமையாளர்கள்.

மின் கட்டணம் செலுத்த இயலாமல் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதால் அரசு மின்சார மானியம் தர வேண்டும் என்பது இப்பகுதி நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்தத் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளின் விவசாய நிலங்களின் வழியாக மின்கோபுரங்கள் அமைக்கப்படும் சிக்கலால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி சதீஷ், தன்னுடைய தோட்டத்தின் வழியாக சென்று, முன்னரே மின்கோபுர இணைப்பு அமைக்கப்பட்டுள்ளதால் 1.5 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் தரிசாக உள்ளது என்றும், இந்த இடத்தில் மற்றுமொரு இணைப்பிற்கான திட்டம் செயல்பாட்டில் உள்ளதால் இருக்கின்ற தென்னை மரங்களையும் வெட்டவேண்டிய நிலையால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மின்கோபுரங்கள் அமைக்கப்படும் இடத்தில் இருந்து 45 மீட்டர் அளவு நிலங்களை எந்தப் செயலுக்கும் பயன்படுத்தக் கூடாது. எனவே, அந்த இடத்தில் உள்ள கிணறு பயன்படுத்தப்படாமல் உள்ளது.

நிலத்தடி நீரினை நம்பித்தான் நாங்கள் விவசாயம் செய்கிறோம், அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் மின்கோபுரத்தால் பாதிக்கப்படாத விவசாய நிலமும் பயிரிட முடியாமல் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றது என்கிறார் அவர்.

சூலூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் மூன்று புதிய மின் கோபுர இணைப்பு செல்லவிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சூலூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலக்கும் பிரச்சனையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

நொய்யல் ஆறு மாசுபட்டுள்ளதால் இந்தப்பகுதியில் ஆற்று நீர் பாசனம் இல்லை, நிலத்தடி நீர் பாசனம்தான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. மக்கள் பயன்பாட்டிற்கும் நிலத்தடி நீர் தேவைப்படுகின்றது.

ஆனால், நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளங்கள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. ஆச்சான் குளம், சூலூர் பெரிய குளம் , சூலூர் சின்ன குளம் ஆகியவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதுடன் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் குளங்களில் கலந்து விடுகின்றது.

எனவே, நிலத்தடி நீரினை அதிகம் நம்பியிருக்கும் பகுதிகள் என்பதால் குளங்கள் தூர்வாரப்பட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சூலூர் அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், அரசு கலைக்கல்லூரி இப்பகுதியில் கொண்டு வர வேண்டும் என்பதுவும் இத்தொகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு 2011ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தல்களில் இந்தத் தொகுதியில் அதிமுக அல்லது அதிமுக கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். கொங்கு நாடு மக்கள் கட்சியின் வேட்பாளர் ஈஸ்வரன் இரண்டாம் இடத்தினை பெற்றார்.

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கனகராஜ் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன் இருந்தார்.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக சார்பில், கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவைத்தலைவர் வி.பி.கந்தசாமி, அமமுக சார்பில் கே.சுகுமார் மேற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மக்களவை தேர்தலைக் காட்டிலும், இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் அளிப்பது அதிகமாக இருக்கின்றதாக மக்கள் கூறுகின்றனர்.

சில கட்சிகள் வாக்குக்கு 1000 ரூபாயும், சில கட்சிகள் வாக்குக்கு 2000 ரூபாயும் அளிப்பதாகவும் கூறுகின்ற வாக்காளர்கள், பணம் வாங்கிக் கொள்கிறோம், ஆனால், யாருக்கு வாக்களிப்பதை இந்த பணம் தீர்மானிக்கப்போவதில்லை என்கின்றனர் மக்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :