பிரக்யா சிங் தாக்கூர்: நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்

பிரக்யா சிங் தாக்கூர்

மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரக்யா சிங் தாக்கூரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது,

நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார். தேச பக்தராக இருக்கிறார். தேச பக்தராக இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுவோர் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திகொள்ள வேண்டும். அவ்வாறு சொல்வோருக்கு இந்த தேர்தல்களில் தகுந்த பதில் வழங்கப்படும்" என்று பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மே 19-ஆம் தேதியன்று அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.

இவருக்காக பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்விகேட்க வந்திருக்கிறேன் நான் இன்று. இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன்" என்று பேசினார்.

பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.

"கமலஹாசனை விட அரசியல் விஷம் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழக அரசியலில் மக்கள் இவரை நுழைய விட மாட்டார்கள்" என்று கூறியுள்ள எச். ராஜா, தொடர்ச்சியாக கமல்ஹாசனைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகிறார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி ஆதரித்திருக்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் கமல்ஹாசன் கூறியது சரிதான் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :