அமித் ஷா பேரணி வன்முறை- பாஜகவால் முன்னரே திட்டமிடப்பட்டதா? #BBCFactcheck

அமித் ஷா படத்தின் காப்புரிமை Getty Images

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை எதிர்த்து போராட கம்புகளுடன் தயாராக இருக்க தனது கட்சியினரை ஒரு பாஜக கட்சி தொண்டர் தூண்டுவது போன்ற 53 வினாடிகள் கொண்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளரான தீப்தான்சு சவுத்ரி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட செய்தியில், ''#Ishwarchandra (ஈஸ்வர்சந்திரா) சிலையை சேதப்படுத்துவது பாஜகவினரால் முன்பே திட்டமிடப்பட்டதா? அமித்ஷாவின் பேரணியில் லத்திகளுடன் (கம்பு) வருமாறு பாஜக தொடர்புடைய பிரத்யேக சமூக வலைதள குழுக்களில் ஏன் காணொளி பகிரப்பட்டது? தான் குறிவைக்கப்பட்டதாக கூறி அமித்ஷா அனுதாபம் தேட முயல்கிறாரா? வெறுப்பை உமிழும் அமித்ஷாவை யார் இலக்கு வைப்பர்? இவர்கள் பொய்யர்கள்'' என்று கூறியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் 60,000 தடவைகளுக்கு மேலாக பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.

இந்த காணொளியில், ''ஃபடாஃபாடி என்ற வாட்ஸ்அப் குழுவின் உறுப்பினர்களுக்கு தங்களின் பணி என்ன என்று நன்கு தெரியும். நாளைய பேரணியில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பேரணிக்கு நாளை வராதவர்கள் இந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்படுவர். நாளை பேரணிக்கு வந்து பிரச்சனைகளை ஏற்படுத்த நான் ஃபடாஃபாடி உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் அமித்ஷாவின் நாளைய பேரணியில் பெரும் பங்கு உள்ளது. 8 அடி நீளமுள்ள கம்புகளுடன் நாம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் போலீசாரை எதிர்த்து போராடுவோம்,'' என்று ஒருவர் பேசுவதாக உள்ளது.

செவ்வாய்கிழமையன்று கொல்கத்தாவில் நடந்த அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததையடுத்து இந்த காணொளி குறித்து வெளியே தெரியவந்துள்ளது. வரும் 19-ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடக்கவுள்ள வாக்குப்பதிவையொட்டி மே 17-ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையவேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, தேர்தல் ஆணையம் இந்த ஒன்பது தொகுதிகளின் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தாவின் தலைமையில் உள்ள ஆட்சியில் அராஜகம் தலைவிரித்தாடுவதாக கூறும் தங்களின் குற்றச்சாட்டுக்கு மதிப்பளிப்பதாக தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அமைந்துள்ளதாக இதனை பாஜக வரவேற்றுள்ளது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஜனநாயக விரோதமானது மற்றும் மேற்கு வங்க மக்களை அவமானப்படுத்துவது என்று மம்தா பேனர்ஜி கூறியுள்ளார்.

இந்த இரு கட்சிகளில் யார் வன்முறையை தொடங்கியது என்று பரவலாக விவாதங்கள் நடந்துவருகின்றன. இரு கட்சிகளும் எதிர்த்தரப்பு மீது குற்றம்சாட்ட தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்து வருகின்றன.

தன்னை காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்று அடையாளப்படுத்தியுள்ள கௌரவ் பாந்தி, இந்த வன்முறையை பாஜக முன்னேரே திட்டமிட்டதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

எங்களது விசாரணையில் இந்த காணொளி உண்மையானது என்று கண்டறிந்துள்ளோம்.

இந்த காணொளியில் இடம்பெற்றிருந்த ராகேஷ் குமார் சிங்கிடம் பிபிசி பேசியபோது, அவர் இதனை மறுத்தார்.

''அமித் ஷா மீது திரிணாமுல் கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று எனக்கு அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தகவல் அளித்தார். மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கூறினார். கட்சியின் ஆதரவாளர்களாக நாங்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும். இந்த காணொளியின் மொத்த நீளம் இரண்டு நிமிடங்கள். ஆனால் இதில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறு பகுதி தவறான செய்திகளை பரப்ப பயன்படுத்தப்பட்டுள்ளது,'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''எட்டு அடி நீளமுள்ள கம்பு என்று இதில் குறிப்பிடப்படுவது பாஜகவின் கட்சி கொடியை. திரிணாமுல் கட்சி தொண்டர்களை வீழ்த்த, ஆனால் இந்த காணொளி திருத்தப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

இரண்டு நிமிடங்கள் என்று கூறப்பட்ட முழு காணொளியை அனுப்புமாறு அவரிடம் பிபிசி கேட்டபோது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் அசல் காணொளியை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக முழு காணொளியை அனுப்ப அவர் மறுத்தார்.

இந்த காணொளி திருத்தம் செய்யப்பட்டதா என்று பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :