பிரக்யா தாக்கூர்: காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்றதற்கு மன்னிப்பு கேட்ட பாஜக வேட்பாளர்

நாதுராம் கோட்சே படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நாதுராம் கோட்சே

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங் தாக்கூர்

மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியதற்கு 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

வியாழனன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த அவர் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக பிரக்யா சிங் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதைத் தொடர்ந்து கட்சியின் நிலைதான் தமது நிலை என்றும் காந்தி ஆற்றிய பங்கை மதிப்பதாகவும் கூறியுள்ள பிரக்யா தமது கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாவும் கூறியுள்ளார்.

இந்து தமிழ்: "வரலாறு படைத்த இர்பான் பதான்"

படத்தின் காப்புரிமை Twitter
Image caption இர்பான் பதான்

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இதற்கு முன் எந்த இந்திய வீரரும் வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை. முதல் முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கரீபியன் கிரிக்கெட் லீக் (சிபிஎல்) லீக்கில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான அறிவிப்பு கரீபியன் லீக் கிரிக்கெட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த லீக்கில் விளையாடுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பதான் தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "92 பொறியியல் கல்லூரிகளின் விவரம் வெளியிடப்படுமா?"

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92 பொறியியல் கல்லூரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடையே எழுந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், முதல் கட்டமாக 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதில், குறைகளைப்பூர்த்தி செய்த 158 கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பல்கலைக்கழகம் வழங்கியது.

ஆனால், குறைகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் படிப்புகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் அதிரடியாக குறைத்தது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை மாணவர்கள் நலன் கருதி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் 23ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 23ஆம் தேதி நடக்கவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 23ஆம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.

இந்த கூட்டத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதொடர் பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 'வருகிற 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முதன்முதலில் முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின். எனவே டெல்லி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :