அரவக்குறிச்சி தொகுதி: இடைத்தேர்தலை சந்திக்கும் வாக்காளர்களின் முக்கிய கோரிக்கை என்ன?

வாக்காளர்களுக்கு பண விநியோகம் அதிகமாக இருந்ததால் 2016இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டபோது செய்திகளில் இடம்பிடித்த அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சட்டமன்றத் தலைவர் தனபால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பதவி இழந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அரவக்குறிச்சி தொகுதியின் செந்தில் பாலாஜி. இதுவே தற்போது இங்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்தது.தினந்தோறும் காலை வேளைகளில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் படையெடுப்பதைப் பார்ப்பது மிகவும் இயல்பானதொரு காட்சி.

காரணம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலுமே அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகள் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வி படிக்கவும், தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவும் மாவட்டத் தலைநகரான கரூர் அருகிலுள்ள பகுதிகளுக்கோ, அண்டை மாவட்டமான திருப்பூரில் உள்ள பகுதிகளுக்கோதான் செல்ல வேண்டிய நிலையில் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமான அமராவதி ஆறு, மணல் திருட்டால் கடும் சிதைவுக்கு உள்ளாகியுள்ளதால் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு தேவைகளுக்கும் பெரும் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் நதி காவிரியில் கலக்கும் நொய்யல் கிராமம் அரவக்குறிச்சி தொகுதியை அண்மித்தே உள்ளது.

திருப்பூர் பகுதிகளில் முறைகேடாக சாயப் பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுவதால், அந்த நச்சுக் கலந்த நீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு அதன் உப்புத் தன்மையும் அதிகரித்து, வேளாண்மைக்கு ஏற்புடையது அல்லாமல் மாறியுள்ளது. தொகுதிக்குள்ளும், அண்மையிலும் சேர்த்து மூன்று ஆறுகள், அவற்றின் வாய்க்கால்கள் என இருந்தும் நீர் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரவக்குறிச்சி.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நெல், வாழை, சிறு தானியங்கள் என பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வந்த அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது தண்ணீர் தேவை குறைவாக உள்ள கலப்புப் பயிரான செடிமுருங்கைக்கு மாறியுள்ளனர். முருங்கையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இங்கு கணிசமாக உள்ளன.

எனினும் அது வேளாண் பிரச்சனைகளுக்குப் போதிய மாற்றுத் தீர்வாக அமையவில்லை. நலிந்துவரும் விசைத் தறி தொழிலில் இருந்து ஏற்கனவே வேலை செய்துவந்த தொழிலாளர்களே வெளியேறி வரும் சூழலில், வேளாண் தொழிலில் இருந்து வெளியேறிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பக்கத்து ஊர்களுக்குப் பயணித்து பஞ்சாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.

அருகில் உள்ள கரூர் பகுதியில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் உள்ளதால், அவற்றுக்கான உதிரி பாகங்கள் விற்பனையைத் தவிர அரவக்குறிச்சியில் பெரிய அளவில் சொல்லிக் கொள்வதற்கான தொழில் என்று வேறு எதுவும் இல்லை.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

"அமராவதி ஆற்றில் தடுப்பணைகளை ஏற்படுத்தி பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்; அரவக்குறிச்சி தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும்," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய சின்னத் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி அல்லிமுத்து.தண்ணீர்ப் பிரச்சனையை சரி செய்வோம் என்பதே அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முக்கியக் வாக்குறுதியாக உள்ளது. அதுவே வாக்காளர்களின் விருப்பமாகவும் உள்ளது. அரவக்குறிச்சி வேட்பாளர்கள் யார்?

தினகரன் அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக (அமமுக) ஆனபின் அக்கட்சியில் இருந்து சில மாதங்களில் விலகிய செந்தில் பாலாஜி, பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தில் (திமுக) இணைந்து இப்போது திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் வி.வி. செந்தில்நாதன் போட்டியிடுகிறார். கணிசமான இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்டுள்ளது இந்தத் தொகுதியில், அமமுக சார்பில் ஷாகுல் ஹமீது என்பவர் போட்டியிடுகிறார்.

இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தகுந்த அளவுள்ள பள்ளபட்டியில் தனது மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மோகன்ராஜுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் ஹாசன், "மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி; அவர் ஓர் இந்து" என்று பேசியது தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவையின் துணை சபாநாயகருமான அதிமுகவின் தம்பிதுரைக்கு கட்சியில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துள்ளதாக கருதப்படுவது, கரூர் மாவட்ட அதிமுகவில் அரசியல் திறன்மிக்க ஒருவராக கருதப்பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்திருப்பது உள்ளிட்டவை அரவக்குறிச்சியின் இடைத்தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ள அரசியல் காரணிகளாக உள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :