ராகுல் காந்தி: ‘’பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது"

ராகுல் காந்தி படத்தின் காப்புரிமை ANI

''இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்து கொண்டது. நரேந்திர மோதி கூறிய பொய்களை மக்களின் பார்வைக்கு நாங்கள் கொண்டு சேர்த்தோம்'' என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலின் 7-வது கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியோடு பிரசாரம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதற்கு முன்னர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தபோது இந்த கருத்துக்களை ராகுல் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''நரேந்திர மோதி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். அது பாரபட்சமாக நடந்து கொள்கிறது'' என்று அவர் கூறினார்.

மேலும், இதற்கு முன்னால் நடைபெறாத வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி செய்தியாளர்களை சந்தித்துள்ளார் என்று விமர்சித்த ராகுல், ரஃபேல் ஒப்பந்தம் பற்றி என்னோடு நரேந்திர மோதி ஏன் விவாதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோதி மற்றும் பாஜகவிடம் ஏராளமான பணம் உள்ளது. ஆனால் எங்களிடம் உண்மை உள்ளது என்று ராகுல் குறிப்பிட்டார்.

மேலும், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளை பற்றி கருத்து தெரிவித்தபோது, "என்னிடம் மிகக் கடுமையான கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்கிறீர்கள். ஆனால், மோதியிடம் மாம்பழம், குர்தா பற்றி கேட்கிறீர்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு சிறந்த நிலையில் இருந்துள்ளது என்று தெரிவித்த ராகுல், பிரதமர் மோதி மற்றும் பாஜகவிடம் இருந்து இந்திய நிறுவனங்களை (அமைப்புகளை) பாதுகாக்க காங்கிரஸ் முயன்றுள்ளது என்றார்.

இந்தியாவை திசை திருப்பும் நிகழ்வு எதையாவது மீண்டும் நரேந்திர மோதி செய்வார். ஆனால், நாட்டு மக்களே கவனத்தை சிதறவிட வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :